Friday, 29 September 2017

கோதுமை வயல்



நிலாவை காட்டியும், அஞ்சு கண்னண் வாரான் என்று சொல்லியும்தான் அன்று எனக்கெல்லாம் சோறூட்டினார்கள். இன்றைய பிள்ளைகளுக்கு நிலாவும் தேவையில்லை, பூச்சாண்டி பயமும் அவசியமில்லை. ஒரு கைபேசி போதும். அந்த தொடுதிரையை கண்டு விழித்து, கட்டிபிடித்து உறங்கி எழுகிறார்கள்.

நம் கைபேசியில் எத்தனை கடினமான வடிவத்தை கடவுச் சொல்லாக வைத்தாலும் அலட்டிக் கொள்ளாமல் திறந்துவிடுகிற பிள்ளைகள் இன்று ஏராளம். நான் சிறுவனாக இருந்தபோது எனக்கு தொலைகாட்சியில் சானல்களை கூட மாற்ற தெரியாது. இன்றைய குழந்தைகள் கணினி வரை புகுந்து விளையாடுகிறார்கள். எப்படி இந்த தொழில்நுட்பமெல்லாம் அவர்களுக்கு பிடிபடுகிறதென்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால், அது எனக்கு அத்தனை ஆச்சரியமூட்டியதேயில்லை, இனியூட்டப் போவதுமில்லை. ஏனென்றால் எனக்கு ஒரு சிறுவனை என் சிறுவயதிலிருந்தே தெரியும். அவன் கொடுத்த ஆச்சரியத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை, இனி எந்த குழந்தைகளும் எனை மீட்க போவதுமில்லை. என்னை வியப்பில் ஆழ்த்திய அந்த சிறுவனை அன்று எல்லோரும் பகத் சிங் என்றே அழைத்தாகள்.

அப்போது பகத் சிங்கிற்கு வயது எட்டு இருக்கும். அவனுக்கு அவன் தந்தை கிஷன் சிங்கோடு அவர்களின் வயல்களுக்கு செல்வது என்றால் கொள்ளை இஷ்டம். பச்சை பசேல் என்றிருக்கும் வயல்கள், குறுக்கு நெடுக்குமாக நீண்டிருக்கும் வரப்புகள், குளிர் காற்று இவையெல்லாம் அவனை கிறங்கடிக்கும். அந்த வரப்புகளின் மீது ஓடியாடுவதும், சேற்றில் குதித்து கும்மாளமடிப்பதையும் விட அவனுக்கு விருப்பமானதாக இருந்தது மணி மணியாக விளைந்து தொங்கும் கோதுமைகளே.
விதையாக விழுந்து, நாத்தாக எழுந்து, மெல்ல மெல்ல நிலம் முழுவதும் தண்ணீர் தின்று வளர்ந்து, செழித்து வயல் முழுவதும் கோதுமைகளாக தெரிவது அவனுக்கு மிகப் பெரிய ஆச்சரியம். இந்த உலகமே இப்படித்தான் உருவாகியிருக்கிறது, இப்படித்தான் வளர்கிறது என்ற எண்ணத்தை அந்த கோதுமை வயல், பகத் சிங்கின் ஆழ்மனதில் ஆழமாக பதியசெய்திருந்தது.

ஒருநாள் அவன் வழக்கம்போல் வயலுக்கு செல்கிறான். அந்த வயல்வெளிகளில் ஒடித் திரிகிறான், ஒரு நல்ல இடத்தை தேடியப் படி. அப்படி அவன் தேடிய இடம் கிடைத்தவுடன். அங்கு ஒரு சிறு குழி தோண்டி உடன் கொண்டுவந்திருந்த தன் தந்தையின் துப்பாக்கியை அதில் ஊன்றி வைத்து தண்ணீர் ஊற்றுகிறான். எட்டு வயதில் பகத் சிங்கின் பெருங் கனவு அந்த கோதுமை வயலில் துப்பாக்கி விளைவிக்க வேண்டும் என்பதே . ஊன்றிய துப்பாக்கியை பெரும் கனவோடு சிறுவன் பகத் சிங் பார்த்து கொண்டிருக்கிறான்.

அப்போது அவனை தேடிக்கொண்டு கிஷன் சிங் அங்கு வந்துவிடுகிறார். அவன் செய்த காரியத்தை பார்த்து “ என்ன செய்து கொண்டிருக்கிறாய்”என்று குழம்பிப் போய் கேட்க.
அவனோ எந்த தயக்கமும் இல்லாமல் சொல்கிறான்.
“ அப்பா, நான் நம் வயலில் துப்பாக்கியை விதைத்திருக்கிறேன். அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்க போகிறேன். ஒருநாள் அது பெரிய மரமாகும், மரமாகி நமக்கது நிறைய துப்பாக்கிகளை தரும்.அந்த துப்பாக்கிகளை கொண்டு நாம் பிரிட்டிஸ்காரர்களை நம் நாட்டைவிட்டே விரட்டியடிக்கலாம்” என்று சொல்கிறான்.

தந்தைக்கு கொள்ளை மகிழ்ச்சி. மகனை கட்டித் தழுவி, மடியில் வைத்து கொஞ்சி மகிழ்கிறார். தன் மகனுக்கு எத்தனை உயர்ந்த சிந்தனை என்று வியந்துபோகிறார், அவனை கொண்டாடி மகிழ்கிறார்.

தலைமுறை தலைமுறைகளாக தன் நாட்டின் விடுதலைக்காக போராடுகிற குடும்பம் அது, அந்த குடும்பத்தில் பிறந்தவனுக்கு இயல்பிலே சுதந்திர தாகமிருப்பது யதார்த்தம். அதில் எனக்கு எந்த வியப்புமில்லை ஆனால் சிறுவன் பகத் சிங்கின் வயது வியப்பிற்குறியது. அந்த வயதில் விடுதலை குறித்த எண்ணம் ஆச்சரியத்திற்குறியது. இன்று அரை நூற்றாண்டை வயதாக கொண்டு வாழ்கிறவர்களுக்கே அந்த புரிதல் சாத்தியபடாமல் இருக்கிறது. வெறும் எட்டு வயது சிறுவனுக்கு அந்த உணர்வு எப்படி வந்தது. சுதந்திரம் குறித்த புரிதல் எங்கிருந்து பிறந்தது.

அடிப்படையில் சுதந்திரம் குறித்த புரிதல் வருகிறபோதுதான் விடுதலை உணர்வு எழுகிறது.எட்டு வயது சிறுவனுக்கு சுதந்திரம் குறித்த புரிதல் சாத்தியம் தானா? அது தான் எனக்கு ஆச்சரியம். அந்த வயதில் அந்த புரிதல் வாய்த்ததினால்தான் அன்று அவன் சென்ற பின்னால் அவன் வழியில் பெரும் இளைஞர் கூட்டமே திரண்டது. அந்த புரிதலால்தான் இந்த தேசத்திற்கு விடுதலை சாத்தியமானது. அந்த புரிதல்தான் வரலாற்றில் இன்றும் 'பகத் சிங்' என்ற பெயரை நிலைத்து நிற்க செய்திருக்கிறது. ஆனால் யதார்த்ததில், வரலாற்றில் நிலைத்து நிற்கின்ற அந்த பெயர் இன்று எவர் நினைவிலும் நிற்கவேயில்லை.

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் நேற்றைய தினத்தில் தான் பகத் சிங் பிறந்தான்.இணையத்தில் வாய் கிழிய ஏதேதோ பேசுகிறோம், ஏதை எதையோ, எவர் எவரையோ கொண்டாடி கும்மாலமடிக்கிறோம் . ஆனால் பகத் சிங்கை கொண்டாடுவதற்கு இந்த தேசத்தில் ஆளில்லை.
இருபத்தி மூன்று வயதில் நம் சுதந்திரத்திற்காக தன்னுயிரை கொடுத்த அந்த வரலாற்று நாயகனை நாம் உண்மையாகவே நினைவில் வைத்திருக்கிறோமா?
அவன் செய்த தியாகத்தின் மீது தானே இந்த தேசம் கட்டமைக்கபட்டிருக்கிறது. கடுகளவேணும் நமக்கு நன்றியிருக்கிறதா? இருந்திருந்தால் நாம் அந்த வரலாற்று தினத்தை மறந்திருப்போமா?

பகத் சிங்கை இளைஞர்களின் குறியீடு என்பார்கள், கம்யூனிஸ்ட்களை தாண்டி எவருமே ஒரு நினைவேந்தலை கூட முன்னெடுக்கவில்லை. யாரும் பெரிதாக நேற்றைய நாளை பொருட்படுத்தவேயில்லை. ஏன், பெரும்பாலானவர்களுக்கு நேற்று என்ன நாள் என்றே தெரிந்திருக்கவில்லை.

அன்று ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் மரணத்தால் தட்டி எழுப்பி சுதந்திரம் கேட்க வைத்த அந்த இளைஞன் ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் நேற்றைய தினத்தில்தான் பிறந்தான், இங்கு எவருக்குமே அந்த வரலாற்று தினம் நினைவில் இல்லையே. கடந்த காலம் நிகழ் காலத்தின் வாயிலாகவே எதிர்காலத்திற்கு கடத்தப்பட வேண்டும். அப்படி இங்கு எதுவும் கடத்தபட்டதாக உணரமுடியவில்லை.

ஒரு நடிகர் எந்த வயதில் நடிக்க வந்தார், எத்தனை படங்கள் நடித்திருக்கிறார்,அதில் எத்தனை வெற்றி, எத்தனை தோல்வி, எந்தெந்த படம் எத்தனை கோடி வசூல் என்றுவரை இணையதளங்களில் புள்ளிவிவரத்தோடு வாதிடும் இணைய போராளிகளுக்கு பகத் சிங்கை பற்றியோ, சுதந்திரம் பற்றியோ அவன் வாழ்க்கையை நினைவு கூர்ந்து பதிவிடவோ, பேசிடவோ துளி கூட மனமும் இல்லை, நேரமும் இல்லை.
நமக்கு நம் வரலாறு தெரிந்திருக்கிறதா? தெரிந்திருக்கிறதென்றால் அதை நினைவு கூறாமல்,அதை பேசாமல், அதை கொண்டாடாமல் வெற்றுச் சதை பிண்டங்களாக ஏன் வாழ்கிறோம்? பூமிக்கு பாரமாக மண் தின்றோ! தீ தின்றோ! வெற்றுச் சதை பிண்டங்களாகவே ஏன் அழிந்துபோகிறோம்?

பகத் சிங் ஒரு சரித்திர நாயகன். அந்த சரித்திர நாயகன் பிறந்த தினத்தை கூட நினைவில் வைத்துகொள்ள இந்த டிஜிட்டல் யுகத்து மனித மூலைகளில் இடமே இல்லை. அந்த இடங்களை எல்லாம் நடிகர்களும், நடிகைகளும், கேளிக்கைகளுமாகவே அவர்கள் நிரப்பி வைத்திருக்கிறார்களா? அல்லது வரலாற்றை சென்ற தலைமுறை அடுத்த தலைமுறையிடம் கடத்துவதில்லையா? ஒட்டுமொத்த சமூகமும் வெற்றுச் சதை பிண்டகளாகவே இருப்பதற்கு அடிப்படை இந்த இரண்டில் ஏதோ ஒன்றா? இல்லை இரண்டுமா?

2 comments: