Thursday 16 August 2018

தூயனின் 'இருமுனை' சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்வின் அறிவிப்பு

“சம்சு குஞ்ச மீன் தின்னுடுச்சு தெரியுமா”

“நெசன்டா நா அவன் ஒன்னுக்கிருக்கப்ப குஞ்சப் பாத்துருக்கேன்”

ஒரு கதையில் சம்சுதீனும் செபாஸ்டீனும் விஸ்வநாதனும் இப்படி பேசிக் கொண்டிருக்கிறபோது எனது பள்ளிக் காலங்கள் நினைவுக்கு வருகிறது. எல்லா வகுப்பிலும் இப்படி ஒருவர் இருப்பார், கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்கிறபோது கண்களை மட்டும் கீழ் நோக்கி நம் குறியை பார்ப்பதற்கென்றே. கூச்சமாக இருக்கும், யாராவது அப்படி பார்ப்பதை உணர்ந்தால் அவ்வளவுதான் முட்டிக் கொண்டு நின்ற மூத்திரம் ஒரு சொட்டுக் கூட வராது. பல நேரங்களில் இப்படி ஒரு பார்வையைத் தவிர்ப்பதற்கென்றே கழிவறையில் கூட்டம் கலைந்துபோன பின்னால் சிறுநீர் கழித்து விட்டு தாமதமாகவே பலமுறை வகுப்புக்குச் சென்றிருக்கிறேன். குறியைப் பார்ப்பது பற்றியெல்லாம் கூட பெரிதாக யாருக்கும் கவலைகள் இருக்காது ஆனால் பார்த்த பின்னால் குறியை பற்றி  அவர் பள்ளிக் கூடத்துக்கே குறி சொல்லப் போகும் கதையில் எங்களுடைய குறிக் கதையும் கலந்துவிடக் கூடாது என்கிற  அச்சம்தான். வேடிக்கையாக வம்புக்கிழுப்பார்கள், கிண்டலும் கேலியும் செய்வார்கள், அதி அற்புதமான உவமைகளை போட்டு நம்மை வெட்கமுறச் செய்வார்கள். கீழ் நோக்கிக் குறியை பார்த்து குறியைப் பற்றிய வர்ணனைகளை வதந்திகளை சேர்த்துச்  குறிக் கதை பேசுகிறவர்கள்தான் பின்னாட்களில் பள்ளிக் கூடங்களில் சினாமா பாடல்களின் மெட்டுக்களுக்கு வேடிக்கை வசனங்களாய், அபத்தக் கவிதைகளாய் இட்டு நிரப்பி கவிஞர்களாகவும் அவதாரமெடுப்பார்கள். இவர்கள் இல்லாமல் பள்ளிக் கூட வகுப்பறைகள் வகுப்பறைகளாகவே  இருக்காது. அந்தந்த வயது சேட்டை எல்லோருக்குமே வருவதில்லை, எல்லோரும் அதன் உச்சத்தைத் தொடுவதில்லை. பலரும் புத்தகம் வீட்டுப்பாடம் என மூழ்கி கிடக்கும்போது இதுபோன்ற நண்பர்களே அன்றைக்கு ஆசுவாசம். பாடம் எடுக்கிறபோதும்  ஆக்ரோசமாக ஆசிரியர் அரற்றிக் கொண்டிருக்கும்போதும் எந்த கவலையும் பயமுமில்லாமல் போகுகிற போக்கில் அவர்கள்  தட்டிவிடும் கேலிப் பேச்சு வெடிச் சத்தத்தையே வரவழைக்கும்.

மதிய உணவு வேளையில் எல்லோருமாக அமர்ந்து கட்டிக் கொண்டு வந்த உணவுகளைப் பிரித்து உண்ணும் போது ஒவ்வொருவருடைய டிபன் பாக்ஸையும் எட்டிப் பார்க்கும் வழக்கம் அநேகருக்கு உண்டு. அப்படிப் பார்க்கும்போது மொச்சைக் கொட்டையோ, முள்ளங்கியோ, அவிச்ச முட்டையோ இருந்தால் முடிந்தது கதை. காற்றில் கலந்து வரும்  குசு வாசனையை உன்னிப்பாக நுகர்ந்து இனம்பிரித்து யார் விட்டதென்று கண்டுபிடித்து கலாய்த்து தள்ளிய சந்தோஷமெல்லாம் இப்போதில்லை. வயதாகிறது, பக்குவம் வந்துவிட்டதென்று காட்டிக் கொள்ள நடிக்க வேண்டியிருக்கிறது.   காலையில்தான் இருமுனை சிறுகதைத் தொகுப்பிலுள்ள ‘மஞ்சள் நிற மீன்' சிறுகதையை வாசித்தேன் அதில் “ யே யப்பா வெசக்குண்டா போட்டான்டா குசுநாதன்” “  குசு தாண்டா.. முட்ட குசு.. முட்ட குசு…” என அப்பாஸூம் சுகுமாரும் கத்தியபோது நானும் குருவும் அரவிந்தனும் காற்றை கலப்படம் செய்தவன் எவனென  இனங்கான செய்த எத்தனை எத்தனையோ ஆராய்ச்சிகள் நினைவில் நிழலாடுகிறது.

தூயனின் ‘ இருமுனை' வாசித்திருப்பீர்கள், மஞ்சள் நிற மீனை  வாசிக்கும்போது பால்யகால நினைவுகள் கிளர்ந்தெழுந்திருக்கும் அந்த நினைவுகளோடு வாருங்கள் நண்பர்களே இன்னும் கதைப்போம்

ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக் கிழமை பெசன்ட் லாட்ஜ் B ஹாலில் மாலை 5.30 மணிக்கு

No comments:

Post a Comment