Sunday 2 September 2018

நீண்டதொரு உரையாடல்...

சில நாட்களுக்கு முன்னால் எழுத்தாளர் சி.எம். முத்து அவர்களை தொடர்புக் கொண்டு  நடத்தத் திட்டமிட்டிருக்கிற  கறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு பற்றி தெரிவித்தக் கையோடு நீங்கள் தவிர்க்காமல்  வரவேண்டும், வந்து ஏற்புரை பேச வேண்டும் எனக் கேட்டதும் “அவசியம் வந்துர்றேன்டி தங்கம், பேசுறேன்டி…..” அவருக்கு அப்படியொரு சந்தோஷம்.  “ ஒருநா வூட்டுக்கு வாங்கடி ” என்று வீட்டிற்கு அழைத்தார் அந்தக் கணமே முடிவெடுத்திருந்தேன் அந் நிகழ்வுக்கான அழைப்பிதழ் தயாரானதும் அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழை காண்பித்து பேசிவிட்டுதான் வரவேண்டுமென்று. அதற்கு நேற்றுதான் நேரம் கிடைத்தது.

வெயில் தாழ மாலை நான்கு மணியளவில் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டேன். புன்னை நல்லூர் வரை புதிதாக போடப்பட்டிருந்த சாலை பூண்டியை நெருங்கும்போது குதறிப்போட்டது மாதிரி கிடந்தது வழிநெடுகிலும் தூசி, போவதற்கே சிரமப்பட்டுதான் சாலியமங்கலம் போய் சேர்ந்தேன். அங்கிருந்து பாபநாசம் பிரதான சாலையில் இடப்பக்கமாக திரும்பி நேராக எட்டு கிலோமீட்டர் பயணித்தால் இடையிருப்பு கிராமம். எழுத்தாளர் சி.எம். முத்துவின் ஊர். குறுகலான அந்த சாலையில் போய்க் கொண்டிருக்கும்போதே கிராமங்கள் பெற்றுக் கொண்டிருக்கிற புது உருவம் தெளிவாகப் புலப்பட்டது.

மாவு பாக்கெட் விலை 25 என்கிற விளம்பர பதாகை, பானி பூரிக் கடை, ஒரு வீட்டில் உயரப் பறந்த காவிக் கொடி, வெண்ணாத்துப் பாலத்தைக் கடந்ததும் தென்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட்டுகள்  அதற்கு காரணமான டாஸ்மாக்கில் நிரம்பி வழிந்த மனிதத்  தலைகள் என பார்த்துக் கொண்டே போனபோது ஊரைத் தாண்டி விட்டோமோ என்கிற அச்சம். ஓரமாக நின்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டேன் இடையிருப்புக்கு எப்படி போவதென்று. அவர் வழி சொன்னார். அவர்காட்டிய வழியில் போய்க் கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் அமர்ந்திருந்தது பரிச்சையமான ஒரு முகம், நீல வண்ண லுங்கிக் கட்டம் போட்ட சட்டை வாய் நிறைய வெற்றிலை. நான் வேகத்தை குறைத்து வண்டியைத் திருப்பினேன். சாலை ஓரத்தில் வெற்றிலையை அதக்கிக் கொண்டு அமர்ந்திருந்தவர் எழுத்தாளர் சி.எம். முத்து. வண்டியை அவர் அருகில் சென்று நிறுத்தினேன். முகம் நிறைய புன்னகை “நீங்கதான பேசினது” ஆமாம் என்றதும் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டார். இருவருமாக அவர் வீட்டிற்கு போனோம். கூடத்தில் இரண்டு நாற்காலியை எடுத்து போட்டார் மின் விசிறிக்கு உயிர் கொடுத்தார். அவர் வீட்டில் எல்லோரும் வெளியூர் போயிருந்தார்கள். அவர். கையால் டீ வைத்துக் கொடுத்தார், இரண்டு மாதுளம் பழங்களை பிளந்து ரொட்டித் துண்டுகளை ஒரு சில்வர் தட்டில் துணைக்கு வைத்து சாப்பிடக் கொடுத்தார். நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மெதுவாக பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார் “ அழைப்பிதழ் நல்லா கலை நயத்தோட அருமையா பண்ணியிருக்கிங்க. Frame போட்டு மாட்டி வைக்கலாம்.” அழைப்பிதழையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

“ உங்கள மாதிரி  இளைஞர்கள்லாம் இந்த மாதிரி கூட்டம் போடுறத பாக்குறப்ப பரவசமா இருக்குடி தங்கம்” என்று  சிலாகித்துப் பேச ஆரம்பித்தவர், திடீரென்று எழுந்து அறைக்குள் போனார் கையில் ஒரு புத்தகத்தோடு திரும்பி வந்தார். மேஜையில் வைத்து ஏதோ எழுதி என்னிடம் கொடுத்தார். அவர் எழுதிய நாவல் அது. ‘பொறுப்பு' அந்த நாவலின் பெயர். நான் பெற்றுக் கொண்டேன், அவர் முகம் நிறைய சிரிப்பு. 


அதே சிரித்த முகத்தோடு  என் எதிரில் அமர்ந்தார் “ நேரமாவலியே செத்த இருக்கலாம்ல?” கேட்டதும் என்னையே பார்த்தார். நான் சரி என்றதும் இரண்டு கால்களையும் தூக்கி நாற்காலியில் சம்மனமிட்டு அமர்ந்து கறிச்சோறு நாவலில் தொடங்கி, மிராசு நாவலுக்குத் தாவி, வயக் காடு, வட்டார வழக்கு, தஞ்சை ப்ரகாஷ் , ப்ரகாஷ் தன்னை இசை கற்றுக் கொள்ள இழுத்து சென்ற சம்பவம், அவர் வீட்டுக்கு வந்து போன எழுத்தாளர்கள், அவர் எழுதிய சிறுகதைகள், ப்ராகாஷ் சிலாகித்த கவிதைகள் என அடுக்கிக் கொண்டே வந்தவர்  நாட்டுப்புறப்பாட்டு கர்நாடக சங்கீதம் என பாடி அசத்தியதில் நேரம் போனதே தெரியவில்லை. மூன்று மணி நேரமாக உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் கதை கவிதை பாட்டு என நேரத்தை கழித்ததில் இருவருக்கும் ஏக கொண்டாட்டம். யதேச்சையாக நான் கடிகாரத்தை  பார்த்தபோதுதான் நேரம் ஆனது தெரிந்தது  

“ அடடா பேசிக்கிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல பாருங்க ரொம்ப நாழியாயிட்டு நா போயிட்டு இன்னொருநா வரேன்” என்றதும் “ ராத்திரி இங்க படுத்துட்டு வெள்ளன போலாம்ல?” என்று வாஞ்சையாக கேட்டார். மறுநாள் நிறைய வேலையிருந்தது அதனால் மறுக்கும்படியான  சூழ்நிலை எனக்கு, புரிந்துக் கொண்டார்.  “நீங்க ஒம்பதாம் தேதி நேரத்துலயே வந்திருங்க நான் போயித்து வரேன்” என்று கிளம்பும்போது பின்னாலேயே ஒரு குழந்தை போல வந்து “ரோடு வரைக்கும் நான் உங்க கூட வரேன்” என்றவர் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டார். மின் விளக்கு எரியாத குண்டும் குழியுமான சாலையில் என் இரு சக்கர வாகனத்தின் மங்கிய மஞ்சள் ஒளியின் உதவியோடு பிரதான சாலையை இருவரும் வந்தடைந்தோம். . இறங்க மனமில்லாமல் இறங்கினார். “ அவசியம் ஒம்பதாம் தேதி வந்திடுங்க” “உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி அய்யா” என்று நான் கைகூப்பியபோது என் கைகளை பிடித்துக் கொண்டு “ என்னடி தங்கம், நேரத்துல வந்துர்றேன். அடிக்கடி வூட்டுக்கு வாங்க, போன் பேசுங்க” என்றபோது லேசாக கண் கலங்கியதெனக்கு.

அவருடன் நிகழ்ந்த உரையாடலை , அவர் சொன்ன கதைகளை , நயமாக கூறிய கவிதைகளை, குதூகலத்தோடும் கும்மாளத்தோடும் அவர் பாடிய பாடல்களை நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன், கறிச்சோறு  நாவலை பிரித்து வாசிக்கத் தொடங்கினேன்.  மீண்டும் அந்த மனிதரை சந்திக்க வேண்டுமென்பது போல இருந்தது. சந்திக்கத்தானே போகிறோம் செப்டம்பர் 9 பெசன்ட் லாட்ஜில் நீங்களும் வாருங்கள்….

1 comment:

  1. பதிவ படிக்கவே இனிமையா இருக்கு...
    கண் எதிரே காட்சி படமாய் வருதுயா...
    அருமையான அனுபவம்...

    ReplyDelete