Thursday 13 September 2018

கறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல் நிகழ்வு

தஞ்சை ப்ரகாஷை கொண்டாடும் நோக்கத்தில் “மீனின் சிறகுகள்” குறித்தக் கலந்துரையடால்   நிகழ்வை நிறைவாக நடத்தி முடித்தபோது எனக்குள்ளாக ஒரு ஆதங்கம், இதையெல்லாம் பார்ப்பதற்கு பிரகாஷ் இல்லையே என்று அந்த ஆதங்கம் இப்போது இல்லை. ப்ரகாஷின் சகாக்களில் ஒருவரான ப்ரகாஷ் வாழ்ந்த காலத்தில் ப்ரகாஷ் எழுதிய காலத்தில் கூடவே வாழ்ந்த, வாழ்ந்துக் கொண்டிருக்கிற, எழுதிய, எழுதிக் கொண்டிருக்கிற ஒரு படைப்பாளனை அவா் வாழும் காலத்திலேயே கொண்டாடியதன் மூலமாக அந்த ஆதங்கம் இல்லாமல் போயிருக்கிறது என்றுதான் இப்போது நினைக்கிறேன். காரணம் இன்றைய நிகழ்வு.
பெசன்ட் அரங்கில் நிகழ்த்திய கறிச்சோறு நாவல்  குறித்த கலந்துரையாடல்  நிகழ்வு.

திட்டமிட்டபடி துவங்கவில்லை என்றாலும் சரியாக ஆறுமணிக்கு துவங்கப்பட்ட நிகழ்வில் வாசகபார்வையை முன்வைத்த வாசகசாலையின் ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான முனைவா் தி.ஹேமலதா கனகச்சிதமாக தனது பார்வையை முன் வைத்தார். அதற்கடுத்ததாக சிறப்புரையாற்றிட வந்த எழுத்தாளா் இரா. எட்வின் கறிச்சோறு நாவலைப் பற்றியும், அது பேசிய சாதிக்குள் இருக்கிற சாதிய அரசியலையும், அந்த அரசியலை  எழுத்தின் மூலமாக பேசிய எழுத்தாளா் சி.எம்.முத்துவையும், சமகால சாதியப் பிரச்சனைகளையும், சாதிக்குள் சாதி பார்த்து நடத்தப்படுகிற பி்ழைப்புவாதத்தையும் தனது பாணியில் உணர்ச்சிப்பூா்வமாக சொன்னதில் நேரத்தை யாருமே கவனித்ததாகத் தெரியவில்லை. இரா. எட்வின் தனது பார்வையை முன்வைத்து, அமா்ந்த பின்னால் ஏற்புரையாற்றிட வந்த எழுத்தாளா் சி.எம். முத்து அவா்கள் ஜெயகாந்தனின் பாடல் ஒன்றை பாடி, வாசகசாலையை வாழ்த்தி அமா்ந்தார். பின்னா், மிக குறுகிய கால அவகாசத்தில் கலந்துரையாடலை நிகழ்த்தி இனிதே நிகழ்வை நிறைவு செய்தோம். குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டு பேசி  சிலாகித்து எல்லோருமாக கலைந்து சென்ற பின்னால் கிளம்ப மனமில்லாமல் நானும் கேசவனும் திருச்சியிலிருந்து வந்திருந்த நண்பா் பிரபுவும் வட்டமாக நாற்காலிகளை போட்டமா்ந்து அய்யா சி.எம்.முத்து பாட நாங்கள் கைதட்டி தாளமிட்டு சிறியதாக ஒரு கச்சேரியே நிகழ்த்தினோம். 





அரங்கை விட்டு எல்லோருமாக கிளம்பும் போது “மனசு ரொம்ப நிறைவா இருக்குடி தங்கம், அடுத்தடுத்த கூட்டத்துக்கு சொல்லிடுங்க இனி எல்லா கூட்டத்துக்கும் நான் வரேன்டி” என்று கொஞ்சியபடி இருசக்கர வாகனத்தில் என் பின்னிருக்கையில் அமா்ந்தார். மூவரும் சேர்ந்து அவரை பழைய பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றோம். இந்த நிகழ்வில் தஞ்சையின் மகத்தான ஒரு கலைஞனை, படைப்பாளியை அவா் வாழும் காலத்திலேயே கொண்டாடியதில் வாசகசாலைக்கு இதுஒரு பெருமைமிகு தருணம். 

 

No comments:

Post a Comment