Tuesday, 14 August 2018

வாசகசாலை - பாரத் கல்லூரி நிகழ்வு 1

“ஏதோ ஒரு வகையில் புத்தகங்களும், கதைகளும் நம்முடைய ஆன்மாவை தொடுகின்றன….”
-பவா செல்லதுரை


ஆன்மாவைத் தொடுதல் – வாசிப்பின் மூலமாகவே சாத்தியப்படுகின்றது. பொதுவாக வாசிப்பு என்பது வீடுகளில் தொடங்கப்பட்டு, கல்வி நிலையங்களில் தொடரப்பட்டு, பொது வெளியில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், இன்றையச் சூழலில் வீடுகளில் வாசிப்பு என்பது துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக்குறைவு. இதைக் கருத்தில் கொண்டு வீடுகளில் தொடங்கிடாத வாசிப்பை கல்வி நிலையங்களில் தொடங்கி, தொடர்ந்து பொது வெளியில் வளா்த்தெடுக்கவேண்டும் என்கின்ற நீண்டநாள் முயற்சியைத் திருப்பூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக தஞ்சையில் பாரத்கல்விக்குழுமத்தோடு இணைந்து சாத்தியப்படுத்தியிருக்கிறது வாசக சாலை.

பாரத்கல்விக்குழுமம் மற்றும் வாசகசாலை இணைந்து வழங்கும் சிறுகதைக் கொண்டாட்டம் எனும் மாதாந்திரத் தொடா் கலந்துரையாடல் நிகழ்வுகளின் முதல் நிகழ்வு ஆகஸ்டு, 03 2018 அன்று பாரத்கல்லூரிக் கூடலரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் புதுமைப்பித்தனின் பொன்னகரம், பிரபஞ்சனின் தியாகி, சந்தோஷ் ஏச்சிகானத்தின் பிரியாணி ஆகிய மூன்று சிறுகதைகளும் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவா்களால் வாசக பார்வையும், முன் வைக்கப்பட்டது. நிகழ்வில் பாரத்கல்விக்குழுமத்தின் செயலாளா் திருமதி புனிதா கணேசன் தலைமைத் தாங்கிட பவாசெல்லதுரை சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். 

புதுமைப்பித்தனின் பொன்னகரம் குறித்து பேசும் போது அழகான விவரணைகளோடு கதையின் போக்கிலேயே கதையைச் சொல்லி அன்றும் சரி இன்றும் சரி பெண்கள் தியாகம் செய்யத்தான் பிறந்தவா்கள் என்று மாணவி  J.நித்யா சொன்னதும், பிரபஞ்சனின் தியாகி குறித்த வாசக பார்வையில் மாணவா் ராஜேஸ்வா் தியாகி கதையின் ஒரு வசனத்தை எடுத்துக்  கூறி பெண்கள்தான் தியாகிகள் என்று சொன்னதும் பொருத்தமாக அமைந்தது. வாசக பார்வையின் நிறைவாக, சந்தோஷ் ஏச்சிகானத்தின் பிரியாணி சிறுகதைக் குறித்து தனது பார்வையைப் பகிர்ந்துக் கொள்ள வந்த மாணவி மங்கள நாயகியின் பார்வை முற்றிலும் வேறு கோணத்தில் இருந்தது. கதையின் சில இடங்களில் தனக்கு முரண்பாடு இருப்பதாக, கூறிய மங்கள நாயகி கதையின் இறுதியை பற்றி பேசும் போது தயவு செய்து யாரும் உணவை வீணாக்காதீா்கள் என்று உணர்ச்சிவசப்பட்டார். 

வாசகபார்வை அமா்விற்கு அடுத்ததாக, சிறப்புரையாற்றிய எழுத்தாளா் பவா செல்லதுரை ஒரு கதையை எப்படி அணுக வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் எப்படிப் பகிர வேண்டும் என்று வாசக பார்வை முன்வைத்த மாணவ மாணவிகளிடத்தில் சுருக்கமாக சொல்லி வாசிப்பு எதற்கு? இது போன்ற கதைகள் எதற்கு? என்று பிரியாணி கதையின் முக்கியமான இடங்களை விவரித்து,
“இவ்வளவு முரண்பாடான ஒரு சமூகத்தில்  இவ்வளவு ஏற்றத்தாழ்வுள்ள ஒரு சமூகத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கிறோம்.  இந்த வாழ்க்கை இதற்குள்ளாக இருக்கிறது. இதுக்கு போய் எதுக்கு சார் கதை, இதுக்கு போய் எதுக்கு சார் புத்தகம், இதுக்கு போய் எதுக்கு சார் அப்படின்னா ஏதோ ஒரு வகையில் புத்தகங்களும் கதைகளும் நம்முடைய ஆன்மாவை தொடுகின்றன” என்று சொல்லி அவா் மாணவா்களை பார்த்தபோது அரங்கில் நிசப்தம். அரங்கமே அவா் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்தது. பிரியாணியில் தொடங்கி, பிரபஞ்சனின் தியாகியை பற்றி பேசி பால் சக்காரியாவின் ஏசு கதைகள் பற்றி விவரித்து, தேன் என்ற தலைப்பில் தான் மொழிப்பெயா்த்த பால் சக்காரியாவின் கதையை வேடிக்கையாக சொன்னபோது அரங்கு முழுவதும் சிரிப்பலை. அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று நினைத்திருக்கும் போது ஜெயமோகனின் தேவகி சி்த்தியின் டைரியை சொல்லி கந்தா்வனின்  “தான்” சிறுகதை என்று கலந்து கட்டி சுவாரஸ்யமாக எளிமையாக ஒரு நண்பனை போல கதையின் சாரம் குறையாமல் சொல்லிக் கொண்டே போனதில் நல்ல படைப்புகளையும், படைப்பாளா்களையும் அறிமுகப்படுத்தி பொது வெளியில் சமூக மேம்பாட்டிற்கும் சமூக முன்னேற்றத்திற்குமான வாசிப்புக் கலாச்சாரத்தை முன்னெடுக்கும் வாசகசாலையின் நோக்கமும் நிறைந்திருந்தது. அதை,  அவா் பாணியில் செய்துச் சென்றார். இனிதே துவங்கி இனிதே நடைபெற்ற நிகழ்வை முனைவா் தி.ஹேமலதா நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.




 

1 comment:

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...