ரயில் இப்போது ரயில் நிலையத்தில் நிற்கிறது. நான் கழிவறைக்குள் அமர்ந்துகொண்டு உச்சந்தலையிலிருந்து புட்டத்தை நோக்கி முழுவீச்சில் ஒரு அழுத்தம் தருகிறேன். முடிந்த வரையில் முக்கி பார்த்துவிட்டேன். ம்ஹூம் துளிகூட எட்டிப்பார்க்கவில்லை. நான் தோற்றுபோய் அமர்ந்திருக்கிறேன்.
நின்றுக் கொண்டிருந்த ரயில் கிழம்புவதற்கான சமிக்ஞையை செய்துவிட்டு மெல்ல மெல்ல நகர்ந்தது. இன்னொருமுறை புட்டத்தை நோக்கி ஒரு அழுத்தத்தை கொடுக்கலாமா என்று யோசிக்கிறேன், வலுவில்லை உடலில்.
ரயில் கொஞ்ச தூரத்திலெல்லாம் வேகமெடுத்தது, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டது. நான் எந்த முயற்சியுமே செய்யாமல் அனிச்சையாக இப்போது புட்டத்தைவிட்டு மலமலவென வெளியேறுகிறது மலம். நான் நிம்மதி பெருமூச்சு விடுகிறேன், கால் கழுவி கதவை திறந்து வெளியே வந்து கதவோரம் நிற்கிறேன். ரயில் அதிவேகமாக சென்றுகொண்டிருக்கிறது. நான் ரயில் வந்த பாதையில் திரும்பிப் பார்க்கிறேன். தொலைதூரத்தில் ரயில் நிலையத்தில் யாரோ ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த மலத்தையெல்லாம் வெறுங்கையால் அள்ளி கூடையில் போட்டுக் கொண்டிருந்தார். எனக்கு அருவருப்பாக இருந்தது. உள்ளுக்குள் லேசாக உருத்தியது. சட்டென்று நான் இருக்கைக்கு செல்ல திரும்பியபோது நான் பயன்படுத்திய கழிவறையின் கதவை பார்த்தேன். 'ரயில் நிலையத்தில் ரயில் நிற்கிறபோது கழிவறையை பயன்படுத்த வேண்டாம்' என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது.
ஏனோ புட்டம் அரித்தது. “அடமுட்டாளே! உன் புட்டத்துக்கு தெரிந்தது, உன் புத்திக்கு தெரியவில்லையே" என்றென்னை அது சாடுவதாய் தோன்றியது.......
No comments:
Post a Comment