“எல்லோருமே ஒரு விதத்துல குறிப்பாக கவிஞர்கள், எழுத்தாளர்களெல்லாம் ஒரு வகையில் மனநிலை பிறழ்ந்தவர்கள்தான். இல்லைன்னா ஏன் இங்க வராங்க. இயல்புத் துறந்தவர்கள் மனநிலை பிறழ்ந்தவர்கள்” இப்படியாக கடந்த நிகழ்வில் தனது பேச்சின் இடையில் எழுத்தாளர் நா.விச்வநாதன் அவர்கள் சொன்னார்கள்.
உண்மைதானே!
புத்தகம் புத்தகமென்று நான் வாங்கி குவிக்கிறபோதெல்லாம் என்னை வீட்டில் ஒரு பைத்தியக்காரனைப்போலத்தான் பார்ப்பார்கள். இப்போது பைத்தியமென்றே முடிவு செய்திருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். இந்த தமிழ்ச் சமூகமே ஒரு திசையில் பயணிக்கிறபோது அதிலிருந்து வேறுபட்டு மாற்று திசையில் சிலரும் பயணிக்கத்தான் செய்கிறார்கள் அவர்கள் ஒப்பீட்டளவில் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். பெரும்பான்மையான இந்தச் சமூகம் மாற்றுத் திசையில் பயணிக்கும் ஒரு கூட்டத்தை மனநிலை பிறழ்ந்த கூட்டமாகதானே பார்க்கும். அப்படி ஒரு கூட்டம்தான் வாசகசாலையை தோற்றுவித்தது, அப்படி ஒரு கூட்டம்தான் வாசகசாலையை இயக்குகிறது, அப்படி ஒரு கூட்டம்தான் வாசகசாலையாக இயங்குகிறது. அந்த கூட்டத்தைத்தான் சில காலமாக நான் முகநூலில் பின்தொடர்கிறேன், அந்த கூட்டம் நடத்திய முழுநாள் நிகழ்விற்குத்தான் நான் திட்டமிட்டு சென்னை சென்றேன், அந்த கூட்டம் விடுத்த அழைப்பை ஏற்றுத்தான் நான் அந்த கூட்டத்தோடு இணைந்தேன். நான் இணைந்தபோது அந்த கூட்டம் சென்னையில் மட்டுமல்லமல் தமிழகத்தில் கணிசமான மாவட்டங்களில் இயல்பு துறந்த பல தோழர்களை ஒன்றிணைத்து பெருங் கூட்டமாக்கியிருந்தது. மாதந்தோறும் இலக்கிய நிகழ்வுகளை சென்னையில் மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் நடத்திவரவும் செய்கிறது. அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நானும் இருப்பதில் இந்த தருணத்தில் எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, பெருமையும் கூடத்தான். இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறபோது வாசகசாலை தன்னுடைய முன்னூறாவது நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்திருக்கும்.
இந்த காலக் கட்டத்தில், கணிசமாக வாசிப்பு என்பது குறைந்து வரும் சூழலில் வாசிப்பை வளர்த்தெடுக்கவும், மீட்டெடுக்கவும் மாவட்டந்தோறும் ஒற்றைச் சிந்தனையுடைய தோழர்களை வைத்து இலக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தும் வாசகசாலை, என்றும் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு அமைப்பாகியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
வாசகசாலை கொண்ட நோக்கத்தை வென்றடைய வாசகசாலையில் ஒருவனாக உழைப்பதில் எப்போதுமே எனக்கு மகிழ்ச்சிதான், அயர்ச்சியே இல்லை. ஏனென்றால்
இப்போது என் வாழ்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறது, என் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கிறது. நான் நிறைய வாசிக்கிறேன், இயங்குகிறேன்.
வாசகசாலை எனக்கு ஒரு பெருமைமிகு அடையாளம். நான் வளர்ந்த மண்ணில் வாசகசாலை எனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் எனக்கு தந்திருக்கிறது.
‘வாசகசாலைக்கு முன் வாசகசாலைக்கு பின் என என்னுடைய காலத்தை வகுக்க முடியும்' என்பதனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதனால்தான் சொல்கிறேன் வாசகசாலை எனக்கு பெருமைமிகு அடையாளம்.
மீதமிருக்கும் காலத்திலும் இணைந்தே பயணிப்போம்……….
வாசகசாலை தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment