மிஷன் ஆலமரத் தெருவிற்குள் நுழைந்தேன், மாலை ஏழரை மணி இருக்கும் அந்தச் சாலையில் சன நடமாட்டமேயில்லை, யாரிடம் கேட்பது? இது என்ன மேற்கு வங்கத்து சாலையா? தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சாவூரில் ஏதோ ஒரு மூலையில் உள்ள மிஷன் ஆலமரத் தெரு தேடித் திரிந்துதானே ஆகவேண்டும், திரிந்தேன் ஒன்றிரண்டு முறை முன்னும் பின்னுமாக அதே தெருவில் அலைந்தேன். தஞ்சை பிரகாஷின் வீடு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. நல்ல வேளையாக எதிரில் ஒரு நடுத்தர வயது பெண்மணி நடந்து வந்துக் கொண்டிருந்தார், பக்கத்தில் சென்றேன் வழிகேட்க. லேசாக அவர் பதறுவது தெரிந்தது, தெருவுக்குத் தெரு செயின் அறுத்தால் யார்தான் பதறமாட்டார்கள்.
நான் அவர் அருகில் சென்று “அம்மா இங்க தஞ்சை ப்ரகாஷ் வீடு எங்க இருக்கு?” என்றதும்தான் அவரது பதட்டம் தணிந்தது ஆனால் கேள்விதான் புரியவில்லை. ”யார் வீடு?” கேட்டார்.
“அதாம்மா எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ்ன்னு ஒருத்தர் இருந்தாருல, அவரு வீடு”
“எனக்குத் தெரியலை” என்று சொன்னவர் “வீட்டு நம்பர் என்ன?” என்று கேட்டார்
“42” என்றேன் அவர் மூன்று குறுக்குத் தெருக்களைக் கை காட்டி “இதுல நெறைய வீடுங்க இருக்கு போய் தேடிப் பாருங்க” என்று சொல்லிவிட்டு அவர் நடந்தார். ஓவ்வொரு சந்தாக தேடி ஒரு வழியாக வீட்டை கண்டடைந்து உள்ளே சென்றேன் வீடு உள் பக்கம் தாழிட்டிருந்தது, அழைப்பு மணி பொத்தானை தட்டினேன், அது உள்ளுக்குள் அலறும் சத்தம் கேட்டது, சில நொடிகளில் திருமதி ப்ரகாஷ் வந்தார், வீட்டுக்குள்ளே அழைத்துச் சொன்றார். உள்ளே சென்றதும் ப்ரகாஷின் இணையர் மங்கையர்க்கரசி அவர்களை வரும் ஞாயிறன்று(15.07.18) நடக்கவிருக்கும் நிகழ்வுக்கு அழைத்தேன். பின்னர் ப்ரகாஷ் குறித்தும்,ப்ரகாஷ் காலத்து தஞ்சை குறித்தும் என் காலத்து தஞ்சை குறித்தும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் ஊடாகவே சுற்றும் முற்றும் பார்த்தேன் ப்ரகாஷ் வாழ்ந்த வீடு அத்தனை அமைதி, இதுவரையில் நான் பார்த்தேயிராத ப்ரகாஷ் இருந்தாலென்ன என்று ஏனோ மனம் அங்கலாய்த்தது. அவர் அங்கே இருப்பது போலவே நான் உணர்ந்தேன்.
உயரமான உருவத்தில் நீண்ட கருந்தாடியோடு திடீரென்று அவர் எப்போது வேண்டுமானாலும் எதிரே தோன்றக் கூடும் என்று கூட உள்ளூர நினைத்துக் கொண்டிருந்தேன். ப்ரகாஷின் யுவர்ஸ் மெஸ்ஸை காலம் கடத்திக் கொண்டு போனது போலவே ப்ரகாஷையும் காலம் கொண்டுபோய் பலகாலமாகி விட்டது. இன்று ரத்தமும் சதையுமாக அவர் இருந்திருந்தால், அவரை நான் சந்தித்திருந்தால் எத்தனை பெரிய பேறு எனக்கது.
நிறையவெல்லாம் ப்ரகாஷை நான் படித்ததில்லை மிஷன் தெரு இப்போது மீனின் சிறகுகள் அவ்வளவுதான், ‘அதுக்குள்ள என்ன அவ்வளவு பிரியம் அவர் மேல?’ என் பதில், அத்தனைக்கும் காரணம் அவர் வாழ்ந்த வாழ்க்கை. இலக்கியத்திற்கென்றே தன்னை ஓப்படைத்துக் கொண்ட மேலான வாழ்க்கை, யுவர்ஸ் மெஸ் மாடி. விடுமுறையில்லாமல் நடந்த இலக்கியச் சந்திப்புகள், கார சார விவாதங்கள், விமர்சனங்கள். யுவர்ஸ் மெஸ் கூட்டத்தில் பங்குக் கொண்டிருந்த எத்தனையோ பேர் இன்று ஆகச்சிறந்த இலக்கிய ஆளுமைகள். அத்தனை பேரையும் இனங்கண்டு ஊக்கப்படுத்திய ப்ரகாஷ் நிச்சயம் மற்றொரு நாஸ்டர்டாமஸ்தான் .
ப்ரகாஷ் இலக்கிய சந்திப்புகளின் முன்னோடி, எழுத்தாளனை எப்படி கொண்டாட வேண்டும் எனக் காட்டிச் சென்ற வழிகாட்டி. உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே, பிரமித்துக் கொண்டே நான் அமர்ந்திருந்தேன் . அதில் நேரம் போனது தெரியவில்லை. மணி எட்டரை இருக்கும் ப்ராகாஷின் கார்டன் இல்லத்தை விட்டு வெளியே வந்தேன். வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டுச் சென்றார் மங்கையர்கரஷி ப்ரகாஷ்.
மிஷன் ஆலமரத்தெருவில் எங்களை சுமந்து வண்டி ஓடிக் கொண்டிருந்தது. மனதெல்லாம் ப்ரகாஷ். யுவர்ஸ் மெஸ் குறிப்புகள், ப்ரகாஷ் வீட்டுச் சுவரை அலங்கரித்திருத்த ப்ரகாஷின் புகைப்படம், வீடு முழுவதும் நிறைந்திருந்த அமைதி நீங்காமல் அப்படியே மனதுக்குள்.
வண்டி மிஷன் தெருவையை விட்டு வெளியேறியது ஏனோ ஒரு நினைவு, ஏனோ ஒரு ஏக்கம் எங்கிருந்துதான் தோன்றியதோ தெரியவில்லை ப்ரகாஷ் இன்று இருந்திருக்கக் கூடாதா! இன்று அவர் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும். விலாசம் தேடி அலைந்த எனக்குக் கேட்டமாத்திரத்தில் விடை கிடைத்திருக்குமே, தேடி வந்த என்னை ஓடி வந்து அழைத்து என்னென்ன கதைப் பேசியிருப்பார் எப்படியெல்லாம் உபசரித்திருப்பார் காலம் எவ்வளவு கொடுமையானது இலக்கியத்திற்கென்றே வாழ்ந்த ஒரு மா மனிதரோடு கதை பேச விடாமல், எங்கோ ஒரு தூரத்தில் அவரை ஒளித்து வைத்துக் கொண்டு அவர் கதையைப் பேச வைத்து வேடிக்கைப் பார்க்கிறது.
No comments:
Post a Comment