Friday, 29 June 2018

நடுவீட்டில் நின்றுக்கொண்டு கதைக்கிறாள் காளி......

சன் தொலைக்காட்சியில் 'விநாயகர்' என்ற பிரம்மாண்டமான பக்திக் காவியம் (நான் சொல்லல) ஒன்று தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று அதில் மகா காளி பூமியைப் படைத்தக் கதையை ஆவேசமாக சொல்லிக் கொண்டிருந்தாள். வீட்டில் அம்மா, காளி கதைக்கும் அந்த பிரம்மாண்ட காவியத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது நானும் அந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருவழியாக காளி கதையை முடித்து அவள் உயரத்துக்கும், பத்துத் தலைக்கும், ஏழெட்டு கைகளுக்கும் ஏற்றவாறு பெருமூச்சு விட ஆர்வக் கோளாறில் பிள்ளையார் ஏதோ கேட்டுத் தொலைத்து காளியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும்போது நான் அம்மாவிடம் கேட்டேன் "ஏம்மா காளிதான் பூமிய படைச்சாளா?"

ஆமோதிப்பது போல் அம்மா தலையாட்டியதும் துப்பாக்கிக்குள் லோட் செய்து வைத்திருக்கும் தோட்டா விசையை அழுத்தியதும் சீறிப்பாய்வது போல மண்டைக்குள் காத்திருந்த அடுத்தக் கேள்வி அம்மாவை நோக்கி சீறிப்பாய்ந்தது " காளிதான் பூமிய படைச்சான்னு சொல்ற, சரி. அப்ப காளி உருவாக்கினது இந்திய எல்லைய மட்டுந்தானா?" அம்மா சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை இந்த கேள்வியை, ஏதோ யோசித்துவிட்டு "இல்ல மொத்த உலகத்தையும் தான்" என்று சமாளிக்க, தெறித்தது அடுத்த கேள்வி " அப்ப  அரபு நாடு, அமெரிக்கா, லண்டன் மாதிரியான நாட்டையெல்லாம் இந்த அல்லா, ஏசு மாதிரி கடவுளுங்க படைக்கலையா?" 


என்ன சொல்வதென்றே புரியாமல் எதாவது சொல்லவேண்டுமே என்ற தொனியில் "எல்லா சாமியும் ஒன்னுதான்" என்று வழக்கமாக எல்லோரும் சொல்லும் பதிலையே சொல்லி மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கப் பார்த்தார். 

"அம்மா......" நான் விடுவதாயில்லை, அம்மா என் பக்கம் திரும்பியதும் " எல்லா சாமியும் ஒன்னுதானே! அப்ப உன் மகளுக்கு ஒரு முஸ்லிம் பையனயோ இல்ல, கிறிஸ்டின் பையனயோ பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிடலாமா?"  என்றேன் அவ்வளவுதான் முகம் களோபரமானது

"அகராதியா பேசாத......"

ஒரு கத்து, ஒரு முறைப்பு அவ்வளவுதான். மீண்டும் அந்த பிரம்மாண்டக் காவியத்தில் அம்மா முழ்கினார். இப்போது மகா காளி வேறு எதையோ படைத்தக் கதையை விநாயகருக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்.......... 

பொய், புரட்டு என்று நாம் பேசிக் கொண்டேயிருந்ததெல்லாம் நடுவீட்டில் நின்றுக் கொண்டு உரக்க அதன் பிரச்சாரத்தை செய்துக் கொண்டிருக்கிறது நாம் மக்களை இழிவிலிருந்து மீட்க வீதியில் கத்திக் கொண்டிருக்கிறோம், வீதியில் இறங்கி செய்கிற வேலையை வீட்டிலேயும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய  காலகட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம்.........

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...