Thursday, 12 April 2018

பகிர்தல் அறம்



இன்று நண்பர் ஒருவர் gobackmodi என்ற hashtagல் நான் எழுதிய கருத்தொன்றை எடுத்தாண்டிருந்தார். உள்ளபடியே அதில் எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அதில் கண்டனத்திற்குரிய செயலும் இருந்தது. என்னுடைய கருத்து பகிரப்படுவதிலும், பரப்பபடுவதிலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான் என்றாலும் மகிழ்ச்சியா? அறமா? என்று சிந்திக்கிறபோது அறமே பிரதானமாகிவிடுகிறது.

என்னுடைய கருத்தை எடுத்தாண்ட நண்பர் அதில் அந்த கருத்து யாருடையது என்று குறிப்பிடவில்லை. ஆகையால் அவர் எனது கண்டனத்திற்குரியவராகிறார். நான் கண்டித்தபோதும் கூட அவர் அந்த கருத்தில் எனது பெயரை குறிப்பிட முன் வரவில்லை மாறாக அந்த கருத்தையே நீக்கினார். இது முற்றிலும் அருவருக்கதக்க செயல்.

“என்னடா இவன் விளம்பரம் தேடுறான். விளம்பரத்துக்கு கிடந்து அலையிறான், பாப்புலர் ஆகனும்னு நினைக்கிறான் போல” என்றெல்லாம் அன்பர்கள் நினைக்க கூடும். இயல்பாக இப்படியான எண்ண ஓட்டம் எழுவது யதார்த்தமே. அத்தகைய எண்ண ஓட்டமும் தவறானது என்று எடுத்துக் கூறவும் ஏன் இயற்றியவரின், உருவாக்கியவரின் தகவல்களை குறிப்பிட வேண்டும் என்று  எடுத்துச் சொல்லவும், விளக்கவும் நான் கடமைபட்டவனாக இருப்பதை  உணர்ந்ததால் ஒரு சிறிய விளக்கமும், எதிர்வினையும்

நம்மில் பெரும்பான்மையானோர் கருத்துருவாக்கத்தில் ஈடுபடுவேதேயில்லை. நாம் செய்வதெல்லாம் இலகுவாக ஒருவர் உருக்கிய கருத்தையோ, சித்தாந்தத்தையோ, படைப்பையோ ஏற்றுக் கொண்டு பகிர்பவர்வதே. ஆக நம்மில் பெரும்பான்மையானோர் கருத்து பரவாலக்கத்திற்கு உதவுபவர்களே. வெகு சிலரே  கருத்தை உருவாக்குகிறார்கள், புதியதொரு சித்தாந்தத்தை முன்வைக்கிறார்கள், படைப்புகளை படைக்கிறார்கள். அத்தகையவர்களின் கருத்துக்களை எடுத்தாளுகிறபோதும், சித்தாந்தத்தை வழிமொழிகிறபோதும், படைப்புகளை பகிர்கிறபோதும் நம்மிடையே அது யாருடையது என்று குறிப்பிட்டு போசுகின்ற,  எழுதுகின்ற,, பகிருகின்ற பொருப்பும், அடிப்படை அறமும் இருக்க வேண்டும். ஒருவர் எழுதியதை எடுத்தாளுகிற போது அவருடைய பெயரை  குறிப்பிட வேண்டிய தார்மீக தகுதி எடுத்தாளுபவருக்கு அவசியமானதாக இருக்க வேண்டும். அதுவே பரப்புரை தர்மம்.

நான் எழுதுகிற எது ஒன்றிலும் என்னைப் பற்றிய எந்த குறிப்பும் இருக்காது, அதற்கான எந்த அவசியமும் கட்டாயமும் இல்லை. அதுவே நான் மற்றவர்களுடைய கருத்தையோ, எழுத்தையோ எடுத்தாளுகிறபோது அது யாருடைய கருத்தென்பதனையும், யாருடைய எழுத்தென்பதனையும் குறிப்பிட வேண்டிய தார்மீக பொருப்பும், கடமையும் எனக்கிருக்க வேண்டும், ஆகையால் நான் எடுத்தாளுகிற எல்லா சிந்தனைகளையும் கருத்தியலையும் யாரிடமிருந்து பெற்றேன் எங்கிருந்து எடுத்தாண்டிருக்கிறேன் என்பனவற்றை தொடக்கத்திலோ, முடிவிலோ குறிப்பிட்டு வருபவன்.  ஆதலால் எனது எதிர்பார்ப்பிலும் எந்த பிழையும் இருக்க வாய்ப்பில்லை . இதை தவறென்று யாரும் பொருள்கொள்ள கூடாது. இது பரப்புரை தர்மம், படைப்பியலின் அடிப்படை அறம்.

கருத்துக்களும் சித்தாந்தங்களும் பகிரப்பட வேண்டிய ஒன்றுதான், பரப்பப்பட வேண்டிய ஒன்றுதான் மறுப்பதற்கில்லை, மகிழ்ச்சிக்குறிய ஒன்றுதான் அவற்றினூடாகவே அது யாரால் உருவாக்கப்பட்டது, எங்கிருந்து எடுத்தாளபட்டது போன்ற தகவல்களையும் குறிப்பிட்டே எடுத்தாளவும், பகிரவும், பரப்பவும் வேண்டும். அதுவே காலங்கடந்து கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் நிலைத்து நிற்கச்  செய்யும்.

அறத்தோடு எடுத்தாளுவோம்!
அறத்தோடு பகிர்வோம்

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...