‘ பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னதற்காக இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது குடுக்கலாம்' என்று அடிப்படை ஆதாரம் கூட இல்லாத மொன்னைத்தனமான பதிவொன்றை பெரியார் எதிர்பாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார். சிலகாலங்களாக சட்டை செய்யாமல் நான் கடந்து சென்ற அவரது பதிவுகள் வரம்பு மீறுவதையும், உண்மைக்கு புறம்பாக இருப்பதையும் கண்டிக்காமல், அவரது தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருந்தால் நான் பெரியாரிஸ்டாகவோ, இசைஞானியின் ரசிகனாகவோ ஏன் சராசரி மனிதனாகவோ கூட இருக்க முடியாது என்பதனால் எழுதுகிறேன்.
பாரதி படத்தை பார்த்த பிறகுதான் நான் பெரியார் திரைபடத்தை பார்த்தேன், இந்த படத்திற்கும் இசைஞானியே இசையமைத்தருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று உள்ளுக்குள் அங்கலாய்த்தவன் நான். என் எண்ண ஓட்டங்கள் அப்படியாக இருந்த காலகட்டத்தில்தான் இசைஞானியின் மீது இப்படியான ஒரு அவதூறு பரப்பபட்டது, பெரும் சர்ச்சையாக்கபட்டது. அந்த சர்ச்சைக்கு அன்றே அவர் முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். அதுகூட அறியாத அடிப்படை அறிவில்லாத சில கூட்டம் கண்டதையெல்லாம் செய்தியாக்கி காலங்காலமாக ஒரு பொய்யை மெய் என்று விற்றுக் கொண்டிருக்கிறது, அந்த பொய்யை நம்பி அதை ஏற்று, பரப்பி சில செம்மறியாடுகள் சிலாகித்து மகிழ்கிறது. அந்த ஆடுகளுக்கு உண்மை குறித்தெல்லாம் பெரிதாக கவலையே கிடையாது, அந்த ஆடுகளின் நோக்கம் பெரியாரை கீழ்மைபடுத்துவது, அதன் வாயிலாக பார்பணியத்தை மெய்ப்பிப்பது. ஆண்டாண்டு காலமாக ஆண்டு அனுபவித்த சுகத்தை தோலுரித்து தொங்கவிட்ட அந்த மனிதரின் மீது இன்றும் அதே காழ்ப்போடு, அதே வன்மத்தோடு அந்த செம்மறியாட்டு கூட்டத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளும் இருப்பதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை. அது தவறும் இல்லை ஆனால் இளையராஜாவை துணைக்கு இழுத்திருப்பது தான் தவறு. பெரும் தவறு!
இளையராஜா ஆண்மீகவாதி அதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அவர் பார்ப்பனியவாதியும் அல்ல. ஆண்மீகம் என்பதும் நாத்திகம் என்பதும் நம்பிக்கை சார்ந்தது.
ஒருமுறை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்க அழைக்கப்படுகிறார் இளையராஜா. பெரியாரின் எல்லா சிலைகளும் ‘கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன். வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்கிற வாசகத்தை சுமந்தே இருக்கும். இசைஞானியோ ஆத்திகவாதி, பெரியாரோ நாத்திகவாதி ஆகையால் இசைஞானி மறுத்துவிடுகிறார். என்ன சொல்லி? “ அவருடைய கருத்து வேற என்னுடைய கருத்து வேற நான் மாலை போடுறது அவருக்கு பிடிக்குமா” என்று சொல்லி. அதுதான் இளையராஜா. அதுதான் இசைஞானியின் நேர்மை. அந்த நேர்மைக்கும், உண்மைக்கும் களங்கம் கற்பிக்கித்தான் அப்படியொரு அவதூறு. அதை முறியடிக்கத்தான் அன்றே அவர் ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தார். அதில் தன் விளக்கத்தையும் பதிவு செய்தார்.
இசைஞானியின் விளக்கம்;
“நான் அந்தப் படத்துக்கு இசையமைக்காதது குறித்து ஆளாளுக்கு ஒரு காரணத்தை அவர்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மைக் காரணம் என்ன, நடந்தது என்ன என்பதை இப்போதுதான் உங்களிடம் நான் முதன்முறையாகச் சொல்லப் போகிறேன்...
ஒரு திருமணம் நடக்கிறது... அதற்கு ஒரு சமையல் காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக்காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம், ‘இங்கே ஒரு பிரபலமான சமையல்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்துவிட்டார்’ என்று சொன்னால், அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்தக் கல்யாண சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அதுபோலத்தான் பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை... எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை.!’’ தன்னிடம் பேச்சுவார்த்தையே நடத்தபடாத ஒரு படத்தை அவரால் எப்படி மறுத்திருக்க முடியும்.
சரி பேச்சுவார்த்தையே நடத்தபடாத ஒரு படம் குறித்து எப்படி இப்படி ஒரு சர்ச்சை பரப்பபட்டது? இசைஞானியே சொல்கிறார் “ உங்கள் மூலமாக இப்போது சொல்கிறேன்... ‘பாரதி’ படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து, ‘சுபாஷ் சந்திரபோஸ் பற்றி ஒரு படம் எடுக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும்’ என்று கேட்டார். உடனே நான், ‘இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திரபோஸை எந்தக் கோணத்தில் படம் எடுக்கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்பதைத் தெரிந்துகொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே, படத்தை எடுத்துக் காட்டுங்கள்... பிறகு பார்க்கலாம்’ என்றேன்.
அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் ‘பெரியார்’ படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ, ‘பெரியார்’ படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஞானராஜசேகரன் ஒரு படைப்பாளி அல்ல... அவர் ஒரு ஆபீஸர். அலுவலகத்தில் உட்கார்ந்து வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு, தன் கீழே வேலை செய்யும் ஏவலர்களை நடத்துவதைப்போல கலைஞர்களையும் நடத்த நினைக்கிறார்.
ஞானராஜசேகரன் உள்ளத் தூய்மையோடும் உயர்வாகவும் ‘பெரியார்’ படத்தை எடுப்போம் என்று என்னிடம் வரவில்லை. முறையான வழிகளில் என்னை அணுகவும் இல்லை. எந்த ஒரு படைப்பாளிக்கும் கலைஞனுக்கும் உள்ளத்தூய்மை வேண்டும். அப்படி உள்ளவன் இன்னொருவனைக் குற்றம் சொல்ல மாட்டான். என்னை இசையமைக்க அழைக்கவில்லை என்ற உண்மையான காரணம் அவர் மீது இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக தந்தை பெரியாரின் மாண்பையோ புகழையோ எவனும் தன் இசையினால் இன்னும் ஒருபடி புதிதாக உயர்த்திவிட முடியாது!’’ இதுவே இசைஞானியின் நிலைபாடு.
அடிப்படை ஆதாரம் கூட இல்லாத ஒரு பொய்யே இங்கு இன்றுவரை உலவுகிறது. அதை மெய் என்று பலரும் பகிர்கிறார்கள். எதையும் பகிர்வதில் தவறில்லை அதன் அடிப்படை குறித்து அறிந்துகொண்டு பரப்புங்கள். அதன் நம்பகத்தன்மையை பரிசோதியுங்கள் பிறகு பகிருங்கள். இந்த சர்ச்சைக்கு அன்றே அவர் பதில் சொல்லிவிட்டார் ஆனால் இன்றும் நாம் இதை உண்மை என நம்பி பரப்பிக் கொண்டேயிருக்கிறோம்.
பெரியார் என்றுமே ஆண்மீகத்திற்கு எதிரானவரல்ல அதேபோல ஆண்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இளையராஜா நாத்திகத்துக்கு எதிரானவரல்ல. இசைஞானிக்கு பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையின் மீது மாற்றுக்கருத்து உண்டு அவரது சுயமரியாதைக் கொள்கையின் மீதோ சாதி ஒழிப்பு நடவடிக்கையின் மீதோ எந்த காழ்ப்பும் கிடையாது அதனால் தான் இசைஞானி சொன்னார் “ நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.”
மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், மக்களுக்கு இசைஞானியையும் தெரியும், பெரியாரையும் தெரியும் இதுபோன்ற அவதூறுகளை பரப்புபவர்கள் யார் என்பதும் தெரியும்.
வெறுமனே அதுபோன்ற பொய்களை பரப்பி பெரியாரை கீழ்மை படுத்தும் பார்பணிய புத்தி என்று மட்டுமே இதை பார்த்துவிட முடியாது. ஒரு பொய்யை மெய்ப்பிக்கும் அவர்களது முயற்சியென்று பறவை பார்வையிலேயும் இதை அனுகலாம் அல்லது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் முயற்சி என்று நுட்பமாகவும் அனுகலாம். அவர்களது எதிர்வினை எப்போதுமே நுட்பமானது, நுண்ணோக்கி கொண்டு ஆராயப்பட வேண்டியது. கிறிஸ்து குறித்த இளையராஜாவின் பேச்சு சர்ச்சையாகியிருக்கிற இந்த நேரத்தில் சில வருடங்களுக்கு முன்னால் பரப்பபட்டு ஓய்ந்துபோன இதுபோன்ற அவதூறுகள் திட்டமிட்டே பரப்படுகின்றன. இதை அனுக நுட்பமான பார்வை நம்மிடையே இருக்க வேண்டியது காலத்தின் அவசியம்.
இளையராஜா பெரியார் திரைபடத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றார் என்று ஒரு பொய்யை பிரகடனபடுத்துவதன் மூலமாக அவர்களால் பெரியாரையும் கீழ்மை படுத்த முடியும், இசைஞானியின் மீது வெகுஐனத்திடமிருக்கும் மரியாதையையும், மதிப்பையும் உளவியல்ரீதியாக மாற்றியமைக்கவும் முடியும். ஏனென்றால் ஆண்டான்டுகாலமாக ஆதிக்க சாதிகள் ஆண்டு அனுபவித்து வந்த சுகத்தை சுக்குநூறாக தகர்த்தெறிந்தவர் பெரியார் அதேபோல ஆண்டாண்டு காலமாக இவர்கள் ஆட்சி செய்த இசை ராஜ்ஜியத்தை தனதாக்கிகொண்டு முடி சூடா மன்னராக வாழ்ந்து வருபவர் இளையராஜா. இருவருமே இவர்களுக்கு ஒன்றுதான். இருவரின் இருப்பும் எப்போதுமே இவர்களுக்கு எரிச்சல்தான். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!அதைத்தான் எப்போதும் இவர்கள் செய்வார்கள்
No comments:
Post a Comment