Thursday, 3 May 2018

ஊழலோ ஊழல் ஊழலுக்கெல்லாம் ஊழல்

வடிவமைப்பு: விஜய்
காலியான மேடைஅரங்கு நிறைய பார்வையாளர்கள். நாடகம் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் வழங்காமல் திடு திடுவென ஒருவித பதட்டத்தோடு கையில் ஒரு பதாகையை ஏந்தியபடியே ஒருவர் ஓடிவருகிறார். மேடையின் மையத்தில் எல்லோர் பார்வைக்கும் தெரியும்படி அந்த பதாகையை வைத்துவிட்டு, பார்வையாளர்களை நோக்கி அவசரகதியில்  மேடையின் முனை வரை நடந்து வந்து நிற்கிறார். எல்லோரை நோக்கியும் கையசைத்து, கவனத்தை ஈர்த்து, செய்கையால் பதாகையை பார்க்க சொல்லி வந்த வேகத்தில் ஓடி மறைகிறார்.
பார்வையாளர்கள் பதாகையை பார்க்கிறார்கள், வாசிக்கிறார்கள்
ஊழல்தான் இந்த தேசத்தின் தலையாய பிரச்சனை' என்று எழுதபட்டிருக்கிறது அந்த பதாகையில்.

ஒலிபெருக்கி ஒலிக்கிறது……… 

பின்னனி குரல் 
இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் எங்கள் நம்பிக்கை நட்சத்திரமே!
இளைஞர்களின் எதிர்காலமே!
இந்தியாவின் தலையெழுத்தே!
ஊழலை ஒழிக்க வந்த போர் வாளே!
வருக! வருக!
இம்மேடையில் வீரமுழக்கமிட
வருக! வருக!” 

இந்த பின்னணி குரல் ஒலிக்க ஒலிக்க, அரசியல்வாதி வேடம் தரித்த ஒருவர் மேடையில் தோன்றி, கம்பீர நடைபோட்டு மேடையின் மையத்திற்கு வந்து நிற்கிறார்.பார்வையாளர்களை நோக்கி கையசைத்து உற்சாகமாக கையை தலைமேல் உயர்த்தி வணக்கம் வைத்துவிட்டு  நின்றவர் ஒருமுறை தனது குரலை சரி செய்துகொண்டு பவ்யமாக 

இந்திய தேசத்தின் முதுகெலும்பான இளைஞர்களே! மானவ மானவிகளே!
நாம் கவனமாக செயல்படவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
வரலாறு எழுதபட்டுக் கொண்டிருக்கிறது.
வரலாற்று என்னவாக எழுதபடுகிறது தெரியுமா

(உரக்க….) 

சொல்லவே நா கூசுகிறது

அவ்வளவு கேவலம், வளர்சியும் இல்லை ஒரு மன்னாங்கட்டியுமில்லை
ஏன்

( குரல் ஆவேசமாகிறது

இங்கு போதிய ஆற்றல் இல்லையா?
இங்கு போதிய வளங்கள் இல்லையா?
இருக்கிறது.
எல்லாம் இருக்கிறது.
கூடவே ஊழலும் இருக்கிறது

ஏன் நாம் வளர்ச்சியடையவில்லை

ஏன் நாம் உலக நாடுகளின் முன்னால் தலைகுனிகிறோம்

எல்லாவற்றிற்கும் ஒற்றை பதில்
ஊழல்.
தலைவிரித்தாடும் ஊழல்

ஊழலே நம்மை பீடித்திருக்கிற நோய், சாதாரன நோயல்ல புற்றுநோய்.
அலைகற்றை ஊழல், போர் விமான ஊழல், சவபெட்டி ஊழல் என எங்கும் எதிலும் ஊழல் ஊழல் ஊழல்……… 

நாம் சுரண்டபடுகிறோம் தோழர்களே

ஊழலை ஒழிக்காமல் இங்கு மாற்றம் வராது.
மாற்றம் வராமல் புதிய இந்தியா  பிறக்கவே பிறக்காது

ஆகவே மாற்றத்தை கொண்டுவாருங்கள்.
ஊழலை ஒழிக்க எங்கள் கரங்களுக்கு வலிமையை தாருங்கள்.
எங்கள் ஆட்சியை மலரச் செய்யுங்கள்.
எங்கள் ஆட்சி மலர்ந்தால் ஊழல் ஒழியும்.
ஒழித்துக் காட்டுவோம்.
நன்றி! வணக்கம்!” 

ஆவேசமான குரல் நன்றி சொல்லி அடங்கியது. அந்த அரசியல்வாதி விடைபெற்றுச் செல்கிறார்.

ஒலிபெருக்கி ஒலிக்கிறது.
பின்னனி குரல்….. 

ஊழல்தான் இந்த தேசத்தின் தலையாய பிரச்சனையா?” சன்னமான குரலில் கேட்டு அடங்குகிறது.
அரங்கு முழுவதும் அமைதி……….
ஒலிபெருக்கி அமைதியை உடைக்கிறது. தடக்…. தடக்…… ரயில் ரயில் நிலையத்திற்குள் வரும் ஓசை. காது ஐவ்வை கிழிக்கிற ஹாரன் சத்தத்தோடு வந்து நிற்கிறது. ரயில் நிலையத்தில் ரயில் வந்தது குறித்த அறிவிப்பை எந்த உணர்ச்சசியுமில்லாமல் செயற்கையாக பெண் ஒருவர் அறிவிக்கிறார்.
பார்வையாளர்கள் இப்போது ரயில் நிலையத்தில் இருப்பது போன்றும், ரயில் ஒன்று எதிரில் நிற்பது போன்றும் உணர்கிறார்கள்.
இப்போது ரயிலுக்கு உள்ளிருக்கும்  ஒருவராக வேடம் தரித்திருப்பவர் எழுந்து தன்னை அசுவாசபடுத்திக்கொண்டு கழிவறை நோக்கி நடக்கிறார். அது மேடையின் மையம் என பாவித்துக் கொண்டு அங்கே வந்து கதவை திறப்பதுபோல திறக்கிறார்.
ஒலிபெருக்கி கதவை திறக்கும் ஒலியை ஒலிக்கிறது.
உள்ளே செல்கிறார். அங்கு ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றைஆங்கிலத்தலேயே  படிக்கிறார்.

“Do not use toilets while train on stations”
படித்துவிட்டு அதை பொருட்படுத்தாமல் கதவை அடைக்கிறார்

இப்போது ஒலிபெருக்கி கதவை அடைத்து தாழிடும் ஒசையை ஒலிக்கிறது.
கதவை தாழிட்டவர் அமர்ந்து மலங்களிப்பது போல பாவனை செய்துவிட்டு எழுந்து தண்ணீர் ஊற்றுகிறார்.
ஒலிபெருக்கி flush ல் இருந்து தண்ணீர் வெளியேறுகிற ஒலியை தந்துவட்டு. பின்னர் கதவை திறக்கிற ஓசையை தருகிறது. அதனை தொடர்ந்து மீண்டும் ரயில் கர்ஜித்து கிளம்புகிறது

கழிவறை சென்றவர் மேடையிலிருந்து வெளியேறிவிட மற்றுமொரு முனையிலிருந்து. ஒரு பெண் துப்புறவு தொழிலாளி. கையில் கூடையோடு தட்டுத்தடுமாறி வருகிறார். ரயில் தண்டவாளத்தில். வழிநெடுகிலும் அசிங்கம், சகிக்க முடியாமல் வந்து அங்கு விரவிகிடக்கும் மலத்தையெல்லாம் கையிலருக்கும் கூடையில் அருவருப்போடு அள்ளி போட்டு, தலையில் சுமந்து செல்கிறார்.

எப்பத்தான் இதுக்கு ஒரு விடிவு பொறக்குமோ!” அடக்கமுடியா துயரத்தோடு அவள் சென்று மறைகிறாள்.

இப்போது பின்னனி குரல் ஒலி பெருக்கியில்…… 


செவ்வாய்க்கும், சந்திரனுக்கும் வெற்றிகரமாக ராக்கெட் விடுற இந்த நாட்டுலதான் மனித மலத்த மனுசனே அள்ளுறான், அதுவும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தையே அள்ள சொல்றான். எவ்வளவு பெரிய ஊழல் இது கேட்டுவிட்டு அந்த குரல் மறைகிறது.

போடுங்கம்மா ஓட்டு……. காளை சின்னத்த பாத்து
போடுங்கம்மா ஓட்டு…… காளை சின்னத்த பாத்து

முதலில் உரை நிகழ்த்திய அரசியல்வாதி ஒன்றிரன்டு தொண்டர் சூழ வாக்கு சேகரிக்க வருகிறார்ஒரு வீட்டின் வாசலில் நின்று

அம்மா………. வீட்ல யாரு……” நீண்ட குரலை கேட்ட ஒருவர் பட்டென்று
போ போ பிச்சையெல்லாம் கிடையாது…..” குரல் மட்டும்

அரசியல்வாதி முகம் அசடு வழிய. நிலைமையை உணர்ந்த தொண்டர்கள் மீண்டும்போடுங்கம்மா ஓட்டு காளை சின்னத்த பாத்துஎன்று முழங்க.
பதறியடித்து அந்த குரலுக்கு சொந்தகாரர் ஓடிவந்துஅய்யய்யோ நீங்கன்னு தெரியாது.நான் ஏதோ பிச்சைகாரன்னு நினைச்சிட்டேன் மண்ணிச்சிடுங்கநெலிந்து நிற்கிறார்

பரவாயில்ல விடுங்க….இந்த தேர்தல்லயும் எங்களயே நீங்க ஆதரிச்சு பெருவாரியான வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வைக்கனும்” 

கண்டிப்பா எங்க ஓட்டு உங்களுக்குத் தான்” 

நம்ம வீட்ல எத்தனை ஓட்டு

அஞ்சு ஓட்டு

அரசியல்வாதியுடன் வந்தவன் வாயிலே கணக்கு போட்டான்
அஞ்சு ஓட்டு. ஒரு ஓட்டுக்கு அயிரம்ன்னா அஞ்சு ஓட்டுக்கு ஐய்யாயிரம்” 
கணக்கு முடிந்த  உடனே பையிலிருந்து ஐந்தாயிரத்தை எடுத்து கொடுக்க, வாங்கி கொண்டவர் என்னி பார்த்துவிட்டு
எதிர்கட்சிகாரன் ஓட்டுக்கு ரெண்டாயிரம் தரானாம். ஆளுங்கட்சி நீங்க என்னடான்னா….” 

பேரம் பேச விரும்பாத அரசியல்வாதி சமிஞ்கை காட்ட மேலும் ஒரு ஐய்யாயிரத்திற்கு வாக்கு விலைபேசி முடிக்கபடுகிறது

உங்க வீட்ல இருக்கவங்க காளை சின்னத்துக்கே வாக்களிக்கனும், ஊழலற்ற ஆட்சிய மலர செய்யனும்

கண்டிப்பா எங்க ஓட்டு உங்களுக்குத்தான்
மேடையிலிருப்போர் களைகிறார்கள்

நம்மல பிச்சைகாரன்னு நக்கல்பன்னிட்டு, எவ்வளவு கவுரவமா பிச்சை எடுத்து  சம்பாதிச்சானுங்க பாத்தியா” 

உடன் வந்த தொண்டர்கள் ஆமோதிப்பது போல தலையசைத்துவிட்டு கோஷமிட்டுக் கொண்டே மறைந்தனர்.

மீண்டும் பின்னனி குரல்….. 

வாக்குரிமைய வித்து, ஐனநாயகத்த கொன்னுகிட்டிருக்க நாமதான் ஊழல் பத்தியும் வாய்கிழிய  பேசுறோம், வெட்கமா இல்ல?” 

மீண்டும் நிசப்தம்…..

மேடையில் பரபரப்பாக பயந்து ஓடிவருகிறார்கள் மணகோலத்தில்  ஆண் வேடம் தரித்தவரும் மணப்பெண் வேடம் தரித்தவரும் கையில் மாலையோடு. மூச்சிருக்க ஓடிவந்தவர்கள் மேடையில் நின்று. மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.

"இனி சாதி, மதம்ன்னு எதுவும் நம்மல பிரிக்கவே முடியாது” 

அவள் காதலனை ஆரத்தழுவிக் கொள்கிறாள். அப்போது நான்கைந்து பேர் அவர்களை சுற்றி வளைத்து தப்பிக்க வழியில்லாமல் நிற்கிறார்கள். காதலும், நம்பிக்கையும் கலந்த கண்களில் பயம் தாண்டவமாடுகிறது. அதில் ஒருவன் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க, அவள் வரமறுக்கிறாள்.

மரியாதையா வந்திடு……” மிரட்டும் தொனியில் 

முடியாதுப்பா” 

அவள் மீண்டும் அவனுடனே ஒட்டிக் கொள்ள. சராமாரியான வெட்டு அவன் மீது அவன் அங்கேயே சரிந்து விழுகிறான். துடிதுடிக்கிறான். அவளின் கையை பிடித்து பலவந்தமாக தர தர வென இழுத்து போகிறான். ஒருகட்டத்தில் அவள் மீறிகொண்டு தப்பித்து காதலனின் மீது சாய்ந்து கதறி அழுகிறாள். விரட்டிக் கொண்டே வந்தவர்கள். அவள் தலை முடியை பிடித்து

மானத்த வாங்காம வந்திரு, இல்ல பொண்ணுன்னு கூட பாக்க மாட்டேன்” 

ஏன்ப்பா இப்டி பன்ன, நாங்க என்ன பாவம் பன்னோம்அழுகிறாள். பின் தீர்கமாக 

என்னால உன்னோட வரமுடியாது” 

முடியாதா…. அப்ப அவன்கூடவே போ. என் கவுரவத்த கெடுக்க நினைச்ச புள்ள எனக்கு தேவையே இல்லசொல்லிவிட்டு அவன் நடக்க வந்தவர்கள் அவளையும் வெட்டிச் சாய்க்கிறார்கள். அவள் துடிதுடித்து சாகிறாள்

மீண்டும் மேடை காலியாகிறது

ஒலி பெருக்கி ஒலிக்கிறது….. 

வருத்தமான குரலில்
பெத்த புள்ளைங்க சந்தோஷத்த பெருசா நினைக்காம சாதியும், மதமும் தான் முக்கியம்ன்னு ஆணவம் பிடிச்சு திரியுற மனிதர்கள விடவா ஊழல் இந்த நாட்டுக்கு பெரிய பிரச்சனை
குரல் மறைகிறது.

மேடையின் ஒரு புறத்திலிருந்து இருவர் நடந்து வருகிறார்கள். அதில் ஒருவர் தந்தை, மற்றொருவர் மகன்அவர்களின் எதிர் திசையிருந்து ஒருவர் வருகிறார். மூவரும் மேடையின்  மையத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
என்ன ராமநாதன் பையனோட எங்க கிளம்பிட்டிங்க

பையன GRE class சேத்துவிட” 

என்ன சொல்றிங்க நிஐமாவா” 

ஆமா சார், பையன் carrer shape பன்ன வேண்டாமா. As a parent நம்ம கடமை இல்லையா” 

என்ன பேசுறிங்க ராமநாதன். இந்த வயசுல புள்ளைய போட்டு வாட்டாதிங்க. என்ன படிக்கிற கண்ணா” 

“10th” என்கிறான் மகன் 

பாருங்க 10th தான் படிக்கிறான். குழந்தைங்கள சுயமா சிந்திக்க விடுங்க, அவங்க திறமைகள வளக்கத்தான் நாம உதவியா இருக்கனுமே தவிர இப்பவே  நாடு கடத்த திட்டம் போடா எப்படி” 

அட போங்க சார். நீங்க ஒரு ஆளு. சின்ன பையனுக்கு என்ன தெரியும். திறமை வெச்சுகிட்டு ஊறுகா கூட போட முடியாது சார். Career தான் சார் முக்கியம். படிச்சோமா, வெள்ளிநாட்டுல போய் நாலு காசு சம்பாரிச்சு அங்கேயே காரு பங்களான்னு செட்டில் ஆனோமான்னு இருக்கத விட்டுட்டு புள்ளைங்க வாழ்கைய கெடுக்க சொல்றிங்களே நான் என் புள்ளைக்கு நல்ல அப்பாவா இருக்கதான் ஆசைபடுறேன்” 

நல்ல அப்பாதான் நீங்க. புள்ளைய இங்க படிக்க வெச்சு வெளிநாட்டுல செட்டில் ஆக வழி தேடுறிங்க பாருங்க. இந்த நாடு நாசமா போகனும். என்ன career தத்துவமோ” 

சரி என் புள்ள இங்கேயே வேலை பாக்கட்டும். இங்க என்ன இருக்குலட்சத்துல எவன் சம்பளம் தரான். ஒன்னுல வளர்ச்சியில்ல எல்லாத்துலயும் ஊழல் பன்றானுங்க, சொத்து சேக்குறானுங்க. இங்க இருந்தா அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சைதான் எடுக்கனும்” 

இங்க எல்லாரும் ஊழல்வாதிங்கதான், வளர்ச்சியில்ல தான். எல்லாரையும் நாடுகடத்துனா யார்தான் இங்க இதெல்லாம் மாத்துறது?” 

எல்லாம் அது அதுக்குன்னு நேத்து விட்ட ஆளுங்க மாத்திக்குவாங்க. அப்புறம் யோசிக்கலாம் இங்க இருக்கறதா வேணாமான்னு. எனக்கு என் புள்ள carrerதான் முக்கியம். சும்மா தத்துவம் பேசாம  ஆள விடுங்க நீங்க
சொல்லிவிட்டு விரு விரு வென இருவரும் நடந்து போனார்கள். எதிர் திசையில் வந்தவர் அவர்கள் சென்ற வழியை பார்த்துக் கொண்டே சற்று நேரம் நின்றுவிட்டு பின் அவரும் நடந்து சென்று மறைகிறார்.

இப்போது மீண்டும் பதாகையை சுமந்துவந்தவர் வருகிறார் கையில் மற்றுமொரு பதாகையோடு. இப்போது அவரிடம் எந்த பரபரப்பும் இல்லை. நிதானமாகவே வருகிறார், வந்து மேடையில் முன்னர் வைத்த பதாகையை தூர வீசி எறிந்துவிட்டு கையில் கொண்டு வந்திருந்த பதாகையை உயர்த்தி பிடித்தவாறே மேடையின் முனையில் வந்து நிற்கிறார்.
இப்போது அந்த பதாகையில் இவ்வாறு எழுதியிருக்கிறது.
இந்த தேசத்தின் தலையாய பிரச்சனை  ஊழல்தான்  என்று சொல்வதே பெரிய ஊழல்

இப்போது மீண்டும் அந்த பின்னனி குரல் இறுதியாக ஒலிக்கிறது…….. 

இந்த தேசத்தின் தலையாய பிரச்சனை ஊழல் தான். என்று சொல்லி சொல்லியே நம்மையும் நம்ப வைத்துவிட்டார்கள்.
ஊழல் தான் இந்த தேசத்தின் தலையாய பிரச்சனை என்று சொல்லுவதும்   ஊழல், நம்புவதும் ஊழல்.
தேசம் முழுவதும் சமூகநீதி நிலைநாட்ட படவில்லை
நம் உரிமையை கேவலம் பணத்திற்கு விற்கிறோம்
பெண் விடுதலை இன்றும் சாத்தியபடவில்லை
Career career
என்று ஒரு தலைமுறையையே வெற்றுச் சதை பின்டங்காக உருவாக்கி வைத்திருக்கிறோம்.

இது எல்லாம் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு தடைகள் என்று நாம் உணரவேயில்லை
மாறாக
ஊழல் ஊழல் என்று புலம்புகிறோம்,
நம் புலம்பல்களை வைத்து பினந்தின்னிக் கழுகுகள் பிழைப்பு நடத்துகின்றன
சமூகநீதியும், பெண் விடுதலையும் சாத்தியபடுத்தாமல்
ஐனநாயகத்தின் வலிமையை நாம் உணராமல் இந்த தேசம் எக்கேடு கெட்டு போனாலென்ன என்று சுயநலமாக
சமூகம் சார்ந்து சிந்திக்காத தலைமுறையை நாம் தொடர்ந்து உருவாக்குவோமேயானால் வளர்ச்சிக்கு வழியே இல்லை.

ஊழல் பெரும் பிரச்சனை தான் மறுப்பதற்கு இல்லை, ஆனால் முதன்மையானது அல்ல.
இல்ல ஊழல்தான் பிரச்சனை, பிரச்சனைன்னு அரசியல்வாதிங்க மாதிரி கத்திக்கிட்டே இருப்போம்னா
நல்லா உரக்க கத்துங்க
வாழ்க ஐனநாயகம்!
***  


2 comments:

  1. அருமையான தொகுப்பு...

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு...

    ReplyDelete

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...