Wednesday, 25 October 2017

ஐனகனமன- ஒரு வரலாற்று பயணம்

கூட்டத்தை விட்டு முன்னால் நகர்ந்தான். குனிந்தான்; கும்பிட்டான். 

காந்தியின் காலை முத்தமிடப் போகிறான் என்று நினைத்தாள் மனு. குறுக்கே கையை நீட்டித் தடுத்தாள். 

தடுத்த கையை தட்டிவிட்டான் கோட்சே. மூக்குக் கண்ணாடியும், குறிப்புப் புத்தகமும் மூலைக்கொன்றாக எகிறி விழுந்தன. 

குனிந்த கோட்சே நிமிர்ந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் கை மேலே எழுந்தது. 

மூன்று குண்டுகள்.

ஹே! ராம்!

ஐனகனமன நாவலிலிருந்து… 



இந்த விடிகாலை இத்தனை சோகமானதாகத்தான் விடிய வேண்டுமா?

அதிகாலை 4.15க்கு திருச்சியில் என்னை இறக்கிவிட்டு சென்றது செம்மொழி எக்ஸ்பிரஸ். நண்பர் கேசவன் வந்திருந்தார், அவர் விட்டிற்கு என்னை அழைத்துபோக. நேராக இருவரும் அவர் வீட்டிற்கு சென்றோம். அவர் அறையில் விட்ட இடத்திலிருந்து உறக்கத்தை  தொடர முயற்சித்தார் நண்பர். எனக்குத்தான் உறக்கமே வரவில்லை. 

சிலநாட்களுக்கு முன்னால் அவர் ஒரு நாவல் வாங்கியிருந்தார் அது  மாலன் எழுதியது- ஐனகனமன. அந்த நாவல் அவரது அறையில் மேசையின் மேல பாதி படித்து அப்படியே குப்புற புரட்டி வைக்கபட்டிருந்தது. எனக்கு உறக்கம் வரவில்லையென்று தெரிந்ததும் நண்பரே அந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க கொடுத்தார்.  நான் அந்த புத்தகத்தின் அட்டை படத்தை பார்க்கிறேன். ஒரு முறை பக்கங்களை புரட்டினேன், பின்னர் வாசிக்க தொடங்குகிறேன். 

இன்று இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு திட்டமிட்டு வளர்த்தெடுக்கபடுகிறது. இந்திய தேசத்தை ஹிந்து தேசமாக மாற்றிவிட துடியாய் துடிக்கிறது ஹிந்துத்துவ சக்திகள். இதற்கு இன்றும்  தடையாய் இருப்பது காந்தி. காந்தியின் மீதான புரிதல் இன்று பெரும்பான்மையான இளைஞர்களிடம் இல்லை. இந்த அறியாமையை ஹிந்துத்துவா அறுவடை செய்ய பார்க்கிறது. காந்தியின் மீதான வெறுப்பையும் கூடவே வளர்த்தெடுக்க முயல்கிறது. அதன் ஒரு அங்கமே காந்தி இஸ்லாமியர்களுக்கானவர், இஸ்லாமியர்களை மட்டுமே அவர் ஆதரித்தார், அவர்களுக்காக மட்டுமே அவர் உழைத்தார் என்று பரப்பபடும் கருத்துகள் எல்லாம். 

காந்தி ஏன் ஆதரித்தார். காந்தியே சொல்கிறார் “ சிறுபான்மையிரிடம் பெருந்தன்மை காட்டிப் பெரும்பான்மையினர் நடத்துகொள்ளாவிட்டால், ஐனநாயகம் என்பது பெரும்பான்மையிரின் சர்வாதிகாரக் கொடுங்கோன்மை ஆகிவிடும்”  ஆகையால்தான் அவர் இஸ்லாமியர்களிடம் கனிவு காட்டினார், அன்பு செலுத்தினார், நட்பு பாராட்டினார். அதுதானே ஐனநாயகம். அந்த ஐனநாயகத்தை முன்மொழிகிற,  விளக்கி வலியுறுத்துகிற கல்கி ராஜேந்திரனின் முன்னுரையோடு தொடங்குகிறது இந்த நாவல். 

இது ஒரு அரசியல் கதை, வரலாற்று புனைவு நாவல் என்று கூட சொல்லலாம்.  சனவரி முப்பது காந்தி படுகொலையும். அந்த படுகொலைக்காக தன்னை தானே தயார் செய்துகொள்ளும் கோட்சேவின் பயணத்தையும் உயிரோட்டமாகவே கடத்துகிறது ஐனகனமன நாவல்.
காந்தியின் உடலை துப்பாக்கி ரவைகள் தொட்ட அந்த இறுதி விநாடியை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் மாலன். அந்த இறுதி விநாடியை காந்தியின் கண் வழியாக நாம் காண்கிறோமா? இல்லை கோட்சேவின் விழி வழியாக காண்கிறோமா? என்பது நம் வரலாற்றுப் புரிதலில்தான் அடங்கியிருக்கிறது. 

முதல் பக்கத்தை வாசிக்க துவங்கினால், முழுவதுமாக வாசித்து முடிக்காமல் கீழே வைக்கவிடாது இந்த நாவல். திரைகதையை போன்ற காட்சி துண்டிப்பால்  இயல்பாக, விருவிருப்பாக சொல்லும் இந்த நாவலில் புனுகு பூசபட்ட வசனங்களோ, உவமைகளோ காண முடியாது. வரலாற்றை வரலாறாகவே நேர்த்தியாக நகர்த்துகிறார் மாலன்.
முழுவீச்சில் இந்த நாவலை முழுவதுமாக வாசித்து முடித்து வைத்திருக்கிறேன், கண்களில் கண்ணீரோடு. காந்தியின் படுகொலையை நாம் எல்லோரும் அறிவோம், ஆனால் அதற்கான  கோட்சேவின் பயணத்தை நாம் அறிய வாய்பிருந்ததில்லை. அப்படியொரு வாய்ப்பைதான் இந்த நாவல் உருவாக்கி தந்திருக்கிறது. காந்தி படுகொலையும், அதற்கான கோட்சேவும் அவனது சகாக்களின் பயணத்தையும் அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கான நாவல் இது.


நாவலின் பெயர்: ஐனகனமன
எழுத்தாளர்: மாலன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்.
இனையத்தில் வாங்க: http://www.noolulagam.com/product/?pid=2032#details 


2 comments:

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...