Showing posts with label பெரியாரை வாசிப்போம். Show all posts
Showing posts with label பெரியாரை வாசிப்போம். Show all posts

Saturday, 19 October 2019

05

பெரியாரை வாசிப்போம் – 05

இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும் இனிமேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்று, சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம்.

எப்படி எனில், மக்கள் இனி சுலபத்தில் சாகமாட்டார்கள். இதுவரை நம் மக்களுக்கு சராசரி ஆயுள் 25 என்றால், இனி மக்கள் சராசரி ஆயுள் வயது 50க்கும் மேற்பட்டுத்தான் இருக்க முடியும். சுகாதாரம் அதிகம்; வைத்திய வசதி அதிகம். மனிதன் நோய்களையும், துன்பங்களையும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அற்பாயுளாகப் போய்க் கொண்டு இருந்தவன், தன் முயற்சியில் நம்பிக்கை வைத்துப் பரிகாரம் தேடி மீளுகிறான். மனிதனுக்குப் பல துறைகளில் அறிவு உணர்ச்சி ஏற்பட்டு, வாழ்வை நீட்டிக் கொள்ள வசதி பெற்றுவிட்டான்.

இது போலவே, மக்கள் பிறப்பும் அதிகமாகிவிட்டது. கர்ப்பச் சிதைவு, சிசு மரணம், பிரசவ மரணம் இனி சுலபத்தில் ஏற்படாத மாதிரி பாதுகாப்புகள், பரிகாரங்கள் ஏற்பட்டு விட்டன. இனி மலடும் இருப்பதற்கு இல்லாமல் நிவர்த்தி மார்க்கங்கள் ஏற்பட்டு விட்டன. இனி விதவைகளாகவும் எவரும் காலம் கழிக்க முடியாமல் விதவை மணம், சுதந்திர காதல் முதலியன செலவாக்குப் பெற்று, சாதாரணமாய் நடப்பில் வருவதின் மூலம் அவற்றாலும் பிறப்பு அதிகமாகின்றது.

பொதுவாக, பிறப்பு விகிதங்களும் பலவகை சவுகரியங்களால் நபர் 1–க்கு 2,3,4 என்பதாகக் குழந்தைகள் இருந்து வந்தது மாறி, இப்பொழுது நபர் 6,8,10,12 என்பதாகக் குழந்தைகள் பிறப்பதும், அவைகளும் நீண்ட நாள் வாழ்வதுமாக இருக்கின்றன. இவர்களுக்கு எல்லாம் உணவு, போக போக்கியப் பொருள், பிழைப்பு, நல்வாழ்வு ஆகியவை தேவைப்படுவதுடன் உணவுப் பஞ்சம் ஏற்பட்டே தீரும். இவைகளில் பெரும் போட்டியும் அதன் பயனாய் வெறுப்பு, வஞ்சகம், துரோகம், கொள்ளை, கொலை முதலியவைகள் மலிந்துவிடும். சாதுவும் யோக்கியமுமான மக்கள் மிகமிகத் துன்பமடைய நேரிடும். அயோக்கியர்களும் காலிகளுமே நல்வாழ்வு வாழ்வார்கள். அதற்கேற்ற அரசாங்கந்தான் ஏற்பட முடியும்.

('குடி அரசு' கட்டுரை-7.5.1949)

#periyaraivasipom #periyaraivaasipom
#பெரியாரைவாசிப்போம்
#பெரியார்141 #periyar141

Friday, 18 October 2019

04

பெரியாரை வாசிப்போம் - 04

‘கல்' என்பதற்கு 'அறி' என்பது பொருள். கல்வி என்றால் அறிவி , தெரிவி என்பது தான் பொருளாயிருக்க வேண்டும் . எனவே எதை அறிவிப்பது என்று கவனித்தால் உலக சுபாவத்தையம் , மனிதத் தன்மையையும் அறிவிப்பதே கல்வியாகும் . மற்றவைகள் வித்தையாகும் .

இதற்கு உதாரணமாக .

' ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் . ' உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் '

என்ற வள்ளுவர் வாக்கே போதுமானது . ஆதலால் உலக நிலையையும் அதற்குத்தக்கபடி நடந்து கொள்ளத்தக்க மனிதத் தன்மையையமே மூக்கியமாய்க் கொண்டு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் . இப்போதைய கல்வி என்பது மனிதத் தன்மைக்கும் அறிவுக்கும் சிறிதும் பொருத்தமானதல்ல .

குடிகளிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு பொறுப்பற்ற அரசன் தனது பிரஜைகளை மூடர்களும் , தேசத்துரோகிகளுமாக ஆக்கி தனது காலடியிலேயே அமுக்கி வைத்துக்கொண்டு நிரந்தரமாய் தன்னிச்சைப்படி ஆட்சி புரிய வேண்டும் என்று கருதுகின்ற ஒரு அரசாங்கத்திற்கு அனுகூலமான கல்வியாகவே இருந்து வருகின்றது . அது மாத்திரமல்லாமல் ஊரார் உழைப்பில் நோகாமல் வயிறு வளர்க்கக் கருதுவதும் அயோக்கியர்களின் ஆதிக்கத்திற்கு அனுகூலமான கல்வியே அளிக்கப்பட்டு வருகின்றது .  எனவே, இவை அடியோடு மாற்றப்பட வேண்டும் .

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் பக்தி , மத பக்தி , இராஜ பக்தியாகிய அறிவுத்தடையும், அடிமை புத்தியும் கற்பிக்கக்கூடிய விஷயங்கள் கல்வுச் சாலைகளுக்குள் தலைகாட்டவே விடக் கூடாது. ஏனெனில், கடவுளிடத்திலும், மதத்தினிடத்திலும், அரசனிடத்திலும் பக்தியாய் இருக்கும்படி அவ்வவைகளே செய்துகொள்ள வேண்டுமே ஒழிய, இதற்காக ஒரு பள்ளிக் கூடம் வைத்து மக்களுக்குச் சொல்லி கொடுக்க வேண்டுமென்பது அயோக்கியத்தனத்தின் முதல் பாகமாகும். கல்வி கற்பிக்கும் வேலை இதுசமயம் முக்கியமாய் பெண்களுக்கும், தீண்டாதாராக ஆக்கப்படவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமே செய்ய வேண்டும்.

(தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டுத் தலைமையுரை – 26.11.1928)

#periyaraivasipom #periyaraivaasipom
#பெரியாரைவாசிப்போம்
#பெரியார்141 #periyar141

03

பெரியாரை வாசிப்போம் - 03

ஜீவ சுபாவத்திற்கே பொருந்தாததான
ஒரு நிபந்தனையை நமது சகோதரிகள் மீது சுமத்திக் கொடுமைப்படுத்துவதுதான் விதவைத்தன்மை என்பது எந்த விதத்திலாவது பொருத்தமுடையதா என்பதை ஆலோசித்துப் பாருங்கள் இந்நிலை பெண்களை அடிமைகளாய் நடத்துகின்றோம் என்பது மாத்திரமல்லாமல்  நம்மைப் போன்ற மனித ஜீவன்களிடத்தில் நாம் எவ்வளவு கொடுமையாய் - அறிவீனமாய் நடந்துகொள்ளும் சுபாவமுடையவர்களாய் இருக்கின்றோம் என்பதற்கு அறிகுறியாகும்.

பெண்கள் சம்பந்தமான வேறு எந்தக் காரியத்திற்காவது ஆண்கள் தங்கள் சுயநலத்தைக் கொண்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லுவதானாலும், இந்த விதவைத்தன்மையை எதற்காகக் கற்பித்தார்கள் என்பதே நமக்கு விளங்க மாட்டேன் என்கிறது.

இந்த விதவைத்தன்மை ஒழிய வேண்டுமானால் பெண்கள் மிக்க தைரியமாய்ப் பாடுபட வேண்டும். அது விஷயத்தில் மானம் இன்னது, அவமானம் இன்னது என்பதாகவோ அவர்கள் என்ன சொல்வார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் வெளிக் கிளம்பிட வேண்டும்.

தங்களுக்கு இஷ்டமான கணவன்மார்களைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொண்டதாய் வெளிப்படுத்திட வேண்டும். இவ் விஷயத்தில் சற்று சவுகரியக்குறைவு இருந்தாலும் அதை வலிமையுடன் பொறுத்துக் கொண்டால் அடுத்துவரும் சகோதரிகளுக்கு மிகுதியும் பலனளிக்கும். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று கண்டதால் தான்.

( தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டுத் தலைமையுரையின் சிறுபகுதி - 26.11.1928)

#periyaraivasipom #periyaraivaasipom
#பெரியாரைவாசிப்போம்
#பெரியார்141 #periyar141

02

பெரியாரை வாசிப்போம் - 02

விபச்சாரித்தனம் என்பதை எவ்வளவோ கண்டிக்கிறோம். அதற்கு சட்ட மூலமாய், சமூக மூலமாய், சாத்திர மூலமாய், இயற்கை மூலமாய் எல்லாம் வைத்திருக்கிறோம். அப்படி எல்லாம் இருந்தும், அதை இருவருக்கும் சமமாய் வைக்கவில்லை.  ஆண் விபச்சாரத்தைப் பற்றி பேசுவோரே கிடையாது. அப்படி இருந்தாலும் அதற்கு பலக் குறைவு (Weakness) என்று சொல்லி விடுகிறோம். பெண் விபச்சாரத்தை நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, கெட்ட குணம், இகழத்தக்கது, கண்டிக்கத்தக்கது, வெறுக்கத்தக்கது என்றெல்லாம் சொல்கிறோம். ஆணும், பெண்ணும் சேர்ந்தால் தான் விபச்சாரமே தவிர பெண்ணும், பெண்ணும் சேர்ந்து விபச்சாரம் செய்து விட முடியாது. இதை யாரும் விபச்சாரம் என்று சொல்லவும் மாட்டார்கள்.

ஒருவருக்கொரு நீதி என்கின்ற முறையாலோதான் உலகில் பெரிதும் விபச்சாரம் இருந்துவருகிறதே தவிர, பெண்களின் கெட்ட குணங்களால் இருந்து வருவதாகச் சொல்லிவிட முடியாது.

அன்றியும், இவ்வளவு தூரம் மதத்தாலும், சட்டத்தாலும், சமூகத்தாலும், நிபந்தனையாலும், வெறுக்கப்பட்ட விபச்சாரம் என்பது ஏன் இன்று உலகில் சர்வ சாதாரணமாய் இருந்துவருகின்றது. இதற்கு என்ன காரணம் என்பதை யாராவது யோசிக்கிறார்களா?

(குடிஅரசு 16.06.1935)

#periyaraivasipom #periyaraivaasipom
#பெரியாரைவாசிப்போம்
#பெரியார்141 #periyar141

01

பெரியாரை வாசிப்போம் - 01

பொதுமக்களில் பெண்கள், தீண்டாதார்கள் என்பவர்கள் மிக மோசமாக அழுத்தப்பட்டிருக்கிறார்கள். புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் ஆணுக்கு பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை என்பதாகக் கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரேயானால் முதலில் அந்த கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.

(தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டுத் தலைமுறைரையின் ஒரு பகுதி- 26.11.1928)

#பெரியாரைவாசிப்போம்
#periyaraivaasippom

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...