Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, 13 March 2019

ஏன் நாம்  பெண்களுக்கு எதிராக நிகழ்கிற அனைத்து வக்கிரங்களிலும் இவ்வாறாகவே நடந்துக் கொள்கிறோம் ?

நேற்று மாலை தங்கை அழைத்திருந்தார். சில நிமிடங்களுக்கு முன்னால் அம்மா அவரோடு பேசியதை பகிர்ந்துக் கொண்டார். தங்கை கோவையில் பணிபுரிவதால் அம்மா நேற்று மாலை தங்கையை அழைத்து “பொள்ளாச்சி நியூஸ் பாத்தியா. தேவை இல்லாம வெளிய சுத்தாத, கூட வேலை பாக்கற பசங்கள்ட ஜாக்கிரதையா பேசு, பழகு. Facebook, whatsappல யார்கிட்டையும் அநாவசியமா பேசாத. யாரையும் நம்பாத” என்றெல்லாம்  மிக நீண்ட இனி செய்யக் கூடாத விஷயங்களின் பட்டியலை தந்திருக்கிறார். ஆனால் பொள்ளாச்சியில் பெண்கள் மீது நிகழ்த்தபட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்த பின்னால் ஒருமுறை கூட என்னை அழைத்து  “நீ பெண்கள் கிட்ட பேசுவ, பழகுவ,  வெளிய நிறைய இடத்துக்கு போற.  போற இடத்துலயெல்லாம் பெண்கள் இருப்பாங்க, facebook , whatsappல உனக்கு முகம் தெரியாத பெண்களோட கூட நட்பு இருக்கும். அவங்ககிட்ட கண்ணியமா நடந்துக்கோ, மரியாதையா நடத்து, தப்பா நடந்துக்காத, அவங்க முகம் சுளிக்கிற மாதிரி, வருத்தப்படற மாதிரி, துன்பப்படற மாதரி, ஒருநாளும் நடந்துக்காத. உன் கூட பழகுற பெண்களுக்கு எப்பவும் பாதுகாப்பாக இரு.” என்று அம்மா ஒருவார்தை கூட இப்போதுவரை சொல்லவில்லை. மாறாக  என் தங்கை குறித்து கவலைக் கொள்பவராகவும் அவருக்கு அறிவுரை வழங்குவதையே வேலையாக வைத்திருப்பவராகவும் அம்மா இருக்கிற அதே நேரத்தில் வீட்டில் பெண்ணான தங்கைக்கு எந்நேரமும் நிபந்தனைக்களுக்குட்பட்டு வாழும் பயிற்சியும் ஆணான எனக்கு கட்டுக் கடங்காத சுதந்திரமும் மறைமுகமாக கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் இதே நிலைதான். இந்த நிலைதான் இந்த நாட்டில் நடக்கிற அத்தனை பாலியல் வக்கிரங்களுக்கும் காரணமாக அமைகிறது. ஆனால் அதை நாம் உணர்ந்தவர்களாக இருக்கிறோமா?
சமூக வலைதளங்களிலும், வீட்டிலும் கிடைக்கிற அனைத்து தளங்களிலும் பெண்களுக்கே புத்திமதி சொல்கிறோம். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, ஆறுதலாக நாம் இருக்க  வேண்டுமே தவிற இதுதான் சாக்கென்று பெண்களை மீண்டும் சிறைப்படுத்த கண்களுக்கு புலப்படாத புர்காவிற்குள் அடைத்து வைக்க முயல்வது எத்தனை அபத்தம். 

ஏன் நாம்  பெண்களுக்கு எதிராக நிகழ்கிற அனைத்து வக்கிரங்களிலும் இவ்வாறாகவே நடந்துக் கொள்கிறோம் ?

ஏன் நம் குடும்ப அந்தஸ்த்து, சாதி கவுரவம்,போன்ற சமூக கற்பிதங்களையெல்லாம் பெண்ணின் யோனியோடு தொடர்புபடுத்தியே வைத்திருக்கிறோம், அந்த கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் பார்க்கிறோம்? 

ஆணுக்கு அப்படி எந்த கற்புமில்லை கண்றாவியுமில்லை. அந்த துணிச்சல் தான் பெண்களின் மீது அத்துமீற சொல்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடமே போய் இதை செய்யாதே அதை செய்யாதே என்றெல்லாம் அறிவுரை சொல்வதை  கடமையாக செய்ய வைக்கிறது. 

இதை வெறுமனே பெண்கள் மீது சில ஆண்கள் நிகழ்த்திய வன்முறையாகவும், அதிமுக கட்சி பிரமுகர் ஒருவரும் அதிமுகவும் திட்டமிட்டு நிகழ்த்திய வன்கொடுமை என்கிற கோணத்தில் மட்டுமே நாம் பார்ப்போமேயானால் ஒரு கட்டத்தில் எந்த தீர்வையும் எட்டாமல் வெறும் சம்பவமாக மற்றுமொரு கோர நிகழ்வாக நினைவுகளில் தங்கி நீர்த்துபோய்விடும். மாறாக பெண்களுக்கு எதிராக பெற்றோர்களும் ஆசிரியர்களும் நாடும் வீடும் சமூக கலாச்சார கற்பிதங்களும் நிகழ்த்திய வன்முறையாகவும் கொடுமையாகவும் பொள்ளாச்சியில் நிகழ்ந்த இந்த பாலியல் வன்கொடுமையை நாம் பார்க்க வேண்டும், அணுக வேண்டும். அப்படி பார்க்கிறபட்சத்தில் உள்ளபடியே தீர்வை நோக்கி நகர்வதற்கான உரையாடலை நம்மால் நிகழ்த்த முடியும்.

#ArrestPollachiRapists

Monday, 26 November 2018

உயிர மட்டும்....



மே17 இயக்கத் தோழர்களோடு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதற்கட்ட கள ஆய்விற்காக பட்டுக்கோட்டை அருகிலுள்ள வெள்ளூர்-தோப்புக்காலணி பகுதிக்கு சென்றிருந்தேன். ஆய்வின்போது அன்றைய தினத்தின் இறுதியாக ஒரு வீட்டிற்குள் நுழைந்த போது என்னை எதிர்பார்த்தவராகவே தென்பட்டார் கணேசன். நான் உள்ளே சென்றதும் நாற்காலியை எடுத்துப் போட்டு "வாங்கய்யா உக்காருங்க...." என்றார். மனைவி தனத்திடம் காபி வைக்கச் சொன்னார், "களப்பா இருப்பிய இந்த வாழ பழத்த சாப்பிடுங்க" என்று இரண்டு வாழைப் பழங்களை எனக்கு சாப்பிடத் தந்தார். சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன் " அய்யா எப்படி இருக்கிங்க?" அவர் வீட்டை சுற்றி விழுந்து கிடந்த நான்கைந்து தென்னை மரங்களை பார்த்தார், தரைதட்டி கிடக்கும் மாட்டுக் கொட்டகையை கண் கலங்கிய படி பார்த்தார், நாற்காலியிலிருந்து எழுந்து  “எங்கூட வாங்க தம்பி….” என்றவர் வீட்டின் பின்புறம் நோக்கி நடந்தார். வீட்டின் பின்னால் ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலம், நிலம் முழுவதும்  தென்னை மரம், பிணங்களாக குத்துயிரும் குலையுயிருமாக.
“ பாருங்க ஒரு ஏக்கர் முழுசும் தென்ன, அந்தா ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரெண்டு ஏக்கரும் தென்னை…..”

“எத்தனை மரம் வெச்சிருப்பிங்க”
“ நூத்தம்பது மரம் தம்பி முறிஞ்சும் தூறோட சரிஞ்சும் நெலத்துல கெடக்கு. சொச்சம் பொழைக்குமான்னா, தெரியல. பொழச்சாத்தான் உண்டு மொத்தம் எத்தினி மரமுன்னுலாம் நியாவகம் இல்ல” என்றவர் கண்களிலிருந்து கண்ணீரையும் இழப்பின் வலியையுமே என்னால் காண முடிந்தது. ஆறுதலாக நாலு வார்த்தை எங்கிருந்து  தேடி எடுத்து சொல்வது? வேரோடு சரிந்தும் முறிந்தும்  கிடக்கிற மரங்களை பார்த்தபடியே வாயடைத்து நின்றிருந்தேன். அவரே கேட்டார் “ வந்ததும் என்னமோ கேட்டிங்களேப்பா எப்படி இருக்கிங்கன்னு தானே…. மொத்தத்தையும் பிடிங்கி எடுத்துப்புட்டு வெறும் உயிர மட்டும் விட்டுப் போயிருக்கு… உயிரோட இருக்கோம் அதான் சொல்ல முடியும்.” உள்ளபடியே புயல் காற்று அவரிடமிருந்த சகலத்தையும் சின்னா பின்னமாக்கிவிட்டு  உயிரை மட்டுமே விட்டு விட்டுச் சென்றிருக்கிறது.

கணேசனுக்கு இரண்டு மகள் ஒரு மகன். மகன் படிப்பை முடித்து விட்டு சென்னையில் சிறியதாக தொழில் தொடங்கியிருக்கிறான். மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அவர் திருமணத்திற்காக நான்கரை லட்சத்திற்கு விவசாய நிலத்தை அடமானம் வைத்து  கடன் பெற்றுத்தான் திருமணத்தையே முடித்திருக்கிறார். அந்தக் கடன் இன்னும் முடிந்தபாடில்லை வட்டி மட்டுமே மாதா  மாதம் வாரி இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது . மனைவியின் பெயரில் மகளீர் சுய உதவிக் குழுக் கடன் ஐம்பதாயிரம். இதுபோக இளைய மகளுக்கு சம்மந்தம் பேசி முடித்திருக்கிறார், தேதி மட்டும் குறிக்கவில்லை வரதட்சணை பேரமெல்லாம் மாப்பிள்ளை வீட்டின் திருப்திக்கு பேசி முடிக்கப்பட்டு விட்டது. “ஏற்கனவே அஞ்சு லட்ச கடன், மேற்கொண்டு கடன் வாங்க கூடாதுன்னு தான் அப்பா வியாவாரிகிட்ட பேசியிருந்தாரு , மூணு காப்புல கடன பூரா முடிச்சிப்புடலாம் நீ கவலப்படாத ஆயின்னுட்டு போனாரு அந்தண்ணன்….ஆனா இப்ப…”என்ற கேள்விக் குறியோடு  இடைமறித்து பேசத் தொடங்கிய   பேச்சை முடித்த கணேசனின் இளைய மகளின் வாழ்க்கையும் கஜா புயல் கேள்விக் குறியாக வளைத்துப் போட்டுத்தான் சென்றிருக்கிறது.
கணேசனிடம் தொடர்ந்து பேசி விசாரித்ததில் விழுந்த ஒவ்வொரு மரமும்  25 வருடகால மரங்கள். வருடத்திற்கு ஆறிலிருந்து ஏழு காப்பு காய்த்த மரங்கள். எப்படி கணக்கிட்டாலும் அவருடைய இழப்பென்பது குறைந்தபட்சம் எட்டிலிருந்து ஒன்பது லட்சமாவது வரும். இழப்பு ஒருபக்கம், வங்கி மற்றும் சுய உதவிக் குழுக் கடன் மறு பக்கம் என சேர்த்து உத்தேசமாக கணேசன் தற்போது  14 லட்சத்தை ஈடு கட்ட வழி தெரியாமல் அல்லாடுகிறார், மகளின் பேசி முடிக்கப்பட்ட திருமணம்  கணேசனின் குடும்பத்தையே அச்சுறுத்திக் கொண்டு நிற்கிறது. இவற்றிற்கு மத்தியில் கடனை அடைக்க வழித் தெரியாமல் அடமானத்திலுள்ள நிலத்தின் எதிர்காலம் அவரிடத்திலே நிலைக்குமா என்பது புரியாமல் மகளின் முகத்தை பார்த்தபடியும் வீழ்ந்து கிடக்கிற தென்னை மரங்களை நினைத்தபடியும் என் எதிரே அமர்ந்திருந்தார் கணேசன்.

ஏறக்குறைய கேட்டு பூர்த்தி செய்ய வேண்டிய அத்தனையும் அவரிடமிருந்து பெற்று  ஆய்வு படிவத்தில் நான் பூர்த்தி செய்திருந்தேன். சூடாக காபி வந்தது , எடுத்து உள்ளே ஒரு மிடறு அனுமதித்தேன். ஒட்டி உலர்ந்த தொண்டைக் குழிக்குள் சூடாக கணேசன் வீட்டு காப்பி பயணித்தது. முழுவதுமாக பருகி விட்டு  விடைபெற்று எழுந்து நடந்தேன் சாலையின் இருபுறமும் பிணங்கள், அத்தனையும் மரங்கள், தந்திக் கம்பங்கள், கூரை வீடுகள், உடைந்த ஓடுகள்,  ஆங்காங்கே பரிதவிப்போடு வெறும் நம்பிக்கையை மட்டும் சுமந்தபடி செய்வதறியாது வாழும் மனித முகங்கள். அத்தனையும் பார்த்துக் கொண்டே நடந்தபோது கணேசன் சொன்னது தான் நினைவிற்கு வந்தது “….மொத்தத்தையும் பிடிங்கி எடுத்துப்புட்டு வெறும் உயிர மட்டும் விட்டுப் போயிருக்கு… உயிரோட இருக்கோம் அதான் சொல்ல முடியும்.” இன்னும் எத்தனை கணேசன்களை சந்திக்க வேண்டுமோ....

இன்னும் எழுதுகிறேன், கள ஆய்வின் நினைவுக்குறிப்பிலிருந்து.....

Friday, 19 October 2018

திருமுருகன் காந்தியுடன் என் முதல் சந்திப்பு

இந்தச் சூழலில் அவருடனான சந்திப்பு வாய்க்குமோ வாய்க்காதோ என்கிற நிச்சயமற்றத் தன்மையோடுதான் நான் நேற்றிரவு திருச்சியிலிருந்து கிளம்பினேன். 

சில நாட்களுக்கு முன்பாகவே தோழர் பாலாஜியிடம் கேட்டிருந்தேன். அடுத்து சென்னைக்கு நீங்கள் எப்போது சென்றாலும் சொல்லுங்கள் நானும் வருகிறேன், தோழர் திருமுருகன் காந்தியை சந்திக்க வேண்டும். அது எனது நீண்டநாள் ஆசை என்பதோடு அவர் சிறையிலிருந்து வெளியாகி உடல் நலிவுற்றிருக்கிற இந்தவேளையில் சந்தித்து குறைந்தபட்சம் உடல்நலம் குறித்தாவது விசாரித்துவிட்டு  வரவேண்டும் என்கிற என் கோரிக்கையை அவர் முன் வைத்தேன். அடுத்தமுறை செல்கிறபோது அவசியம் சொல்கிறேன் என உறுதியளித்தார். சொன்னபடி நான் சென்னை செல்கிறேன், வாய்ப்பிருந்தால் வாங்க அவரை சந்திக்கலாம் என்றார். அவர் சொன்னதும் வேறெந்த வேலைக்கும் ஒத்துக்கொள்ளாமல் சென்னை வந்து தோழரை சந்திப்பதே பிரதானமான திட்டமாக முடிவு செய்து கிளம்பினோம், கடைசி நேரத்தில் கேசவனால் வர இயலவில்லை. நான் மட்டுமே கிளம்பி இன்று காலை சென்னை வந்தடைந்தேன். 

காலையில் திட்டமிடப்பட்ட சந்திப்பு, மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டு, மேற்கு மாம்பலத்திற்கு அருகிலுள்ள ஒரு  பழச்சாறு கடையில் காத்திருக்கும்படி தோழர் பாலாஜி சொன்னார், காத்திருந்தேன். தோழர் பாலாஜி வருவார், வந்து எனை அழைத்துச் செல்வார் என தான் நினைத்திருந்தேன். மாறாக தோழர் பாலாஜி, தோழர் திருமுருகன் காந்தியினுடனே வந்திருந்தார். எதிர்பார்த்த சந்திப்பாகவே அது இருந்தாலும் கூட   எதிர்பாராவிதத்திலேயே நிகழ்ந்தது.
நான் சார்ந்திருக்கிற அமைப்பு அதன் கொள்கை முடிவுகள் இதையெல்லாம் தாண்டி தனிமனிதனாக, சகமனிதனாக தோழர் திருமுருகன் காந்தியின் மீது நான் கொண்டிருக்கிற மரியாதையும் அன்பும் தனித்துவமானது. அவர்மீதான எனதன்பு அவர் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையினாலே பிறந்தது. இன்றைக்கும் நாளைக்குமான நம்பிக்கையாகவே நான் திருமுருகன் காந்தியை பார்க்கிறேன்.

கல்லூரியின் இறுதியாண்டு காலத்தில்  என நினைக்கிறேன், ஒரு காணொளியை வாட்ஸப் வாயிலாக காண நேர்ந்தது. அந்த காணொளி நடந்து முடிந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் வெட்டி அனுப்பப்பட்ட சிறு பகுதி. மத்திய அரசு உலக வர்த்தக நிறுவனத்துடன் போட்டுக்கொண்டிருக்கிற ஒப்பந்தம் குறித்தும் அதனால் ஏற்படப்போகிற இழப்புகள் பற்றியும்,ரேஷன் கடைகளின் எதிர்காலம் பற்றிய செய்திகளுமாகவே இருந்தது அந்த சிறு பகுதி காணொளி. அன்று அந்த காணொளியில் பேசிக்கொண்டிருப்பது யார்? நம்மை எச்சரித்துக் கொண்டிருப்பது யார்? என்பது தெரியாமல் அல்லது தெரிந்துக் கொள்ள முயலாமல் எனக்கு சரியென பட்டதும் நண்பர்களிடத்திலும், முகநூலிலும் என் பங்கிற்கு நானும் பகிர்ந்தேன். அன்று அந்த காணொளியில் பேசியது திருமுருகன் காந்திதான் என்பதெனக்கு அப்போது தெரியாது. சில வருடங்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது.  அது யார் என நான் தெரிந்துக் கொண்ட காலத்திலே அந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னால்  இவையெல்லாம் நடக்குமென அவர் எச்சரித்த வார்த்தைகள் காட்சிகளாக நடந்தேறத் தொடங்கியிருந்தது. இன்று அதன் பலன்களை அறுவடை செய்தபடியே மோசமான சூழலை நோக்கி நாம் நகர்ந்துக் கொண்டிருப்பதை பாரக்கும்போது அன்று அவருடைய கணிப்பு எத்தனை துல்லியமானதாக இருந்திருக்கிறது, அவருடைய பார்வை எத்தனை தொலைநோக்கு சிந்தனையுடையதாக இருந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அந்த சிந்தனையும் அந்த பார்வையும் அந்த அவதானிப்பும் நாளைக்கான தலைவராய் அவரிருப்பார் என என்னை தீர்க்கமாக நம்ப வைத்தது. அன்று எச்சரித்தவர்தான் திருமுருகன் காந்தி என்று தெரிந்தபின்னால் அவர் மீது இன்றைக்கும் நாளைக்குமான நம்பிக்கை சேர்ந்தே பிறந்தது, மதிப்பும் மரியாதையும் அன்பும் கூடியது. 
அப்படியாக நான் நம்புகிற மதிக்கிற அன்பு வைத்திருக்கிற தோழரை நேரில் சந்திக்கிறேன் முதன்முறையாக. கைது, அலைக்கழிப்பு, மருத்துவமனை என  அத்தனை சிரமங்களுக்கும் ஆட்பட்டு ஓய்விலிருக்கிற தோழரிடம் வணக்கம் சொல்லி கை கொடுத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் எதிர் இருக்கையில் அமர்ந்தேன். நலம் விசாரித்தேன். சென்னை வந்ததன் பிரதான நோக்கமும் அதுவே. அவர் என்னை பற்றி விசாரித்தார், சொன்னேன். பிறகு சில நிமிட மௌனம். என்ன பேசுவது  எங்கிருந்து தொடங்குவது என்றெல்லாம் ஏகப்பட்ட சிக்கல் எனக்குள். நிறைய பேச வேண்டுமென நினைத்துதான் வந்தேன். ஆனால் வாய்வரவில்லை. தளர்ந்த முகத்தோடு, ஒரு வித அயர்ச்சியோடு முன்னால் அமர்ந்திருந்த மனிதரை நிறைய பேசி தொந்தரவு செய்யக்கூடாதென உள்ளூர தோன்றியது. இந்த சந்திப்பும் கூட ஓய்விலிருந்த அவரை தொந்தரவு செய்திருக்குமோ என்கிற நினைப்பும் என்னுள்  எழுந்து எழுந்து அடங்கியது என்றபோதிலும் அவ்வப்போது எதாவது பேசத் தொடங்கி சட்டென முடித்து சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடங்கி  முடிந்து, தொடங்கிக் கொண்டே நீண்டிருந்த உரையாடலில் அவர் உடல் தளர்ந்திருந்தாலும் எண்ணத்திலும், உள்ளத்திலும் துளி தளர்வில்லாததை காண முடிந்தது, நம்பிக்கை தந்தது. 

அதுவே அவருடைய பலம். அவருடனான சந்திப்பு, அவருடனான உரையாடல், அவர் உடல்நலம் தேறிவருவதையெல்லாம் நேரடியாக பார்த்ததில் மகிழ்ச்சி என்பதைத் தாண்டி அந்த சந்திப்பு எனக்குள்ளாக ஏற்படுத்திய தாக்கம்   வருங்காலத்தில், களத்தில் நான் எத்தனை உறுதியோடு நிற்க வேண்டும், எவ்வளவு வலிமையாக போராட வேண்டும், உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டும் என்பதற்கு ஊக்கியாக இருக்கும் என என்னால் அவதானிக்க முடிந்தது.
 
இந்த சந்திப்பை சாத்தியப்படுத்திய தோழர் பாலாஜிக்கு என் அன்பும் நன்றியும்.

Saturday, 12 May 2018

அன்னையர் தினம் பொய், சூழ்ச்சி, புரட்டு.......


"தாய்மை என்பது பெண்ணை அடிமையாக்க, ஆண் கண்டுபிடித்த ஒரு ஏமாற்றுச் சொல். தாய்மை என்ற ஒரு சொல்லாடலே ஒரு பித்தலாட்டம், ஒரு மோசடி. பெண்கள் அதற்கு ஒருபோதும் அடிமையாகிவிடக்கூடாது" என்று அன்றே சொன்னார் பெரியார். அவர் அவர் சொன்னதை இன்று பொருத்திப் பார்த்துச் சிந்தித்தால் எவ்வளவு பொருந்திப் போகிறது.
பொழுதுக்கும் ஆக்கிப் போட்டு, துணித் துவைத்து, பணிவிடை செய்து நான்கு சுவற்றுக்குள் தானே அவளது உலகத்தை நாம் சுருக்கி வைத்திருக்கிறோம்.நாள் முழுக்க தாயவள் அடுமனையில் தானே முடங்கிக் கிடக்கிறாள் அல்லது கிடத்தப்படுகிறாள்.
இந்த அன்னையர் தின கொண்டாட்டமெல்லாம் வெற்று நாடகம், மேலும் பெண்களை
வீட்டிற்கு வெளியே வரவிடாமல் அவர்களது  சிந்தனைகளைச் சதா குடும்பத்தை சுற்றியே சுழல வைக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் சூழ்ச்சி, பொய், புரட்டு. "இல்லை இல்லை இப்போதெல்லாம் பெண்கள் வெளியே வந்துவிட்டார்கள் வேலைக்கு போகிறார்கள்" என்று மல்லுகட்டுவீர்கள் என்றால் நான் கேட்கிறேன் உங்கள் வீட்டில் யார் சமையல் செய்கிறார், யார் துணி துவைக்கிறார், யார் எச்சில் பாத்திரம் கழுவுகிறார். மிக நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் அது ஒரு பெண்,அவள் ஒரு தாய்.
"இல்லை இல்லை எங்க வீட்ல சமையல்காரி இருக்கா, பாத்திரம் கழுவ, துணி துவைக்க வேலைகாரி வருவா" என்று சமாளித்தால் இப்போதும் கேட்கிறேன் அவள் யார்? அவளும் தன் பிள்ளைக்களுக்காகத் தன் பிள்ளைகளின் வாழ்க்கைக்காகத் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தன்னுடைய நிகழ்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு தாய் தானே! அப்படியிருக்க எதற்கிந்த போலியான கொண்டாட்டம், எதற்கிந்த பித்தலாட்டம்.........

Monday, 2 April 2018

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

வடிவமைப்பு: விஜய்


‘ பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னதற்காக இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது குடுக்கலாம்' என்று அடிப்படை ஆதாரம் கூட இல்லாத மொன்னைத்தனமான பதிவொன்றை பெரியார் எதிர்பாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார். சிலகாலங்களாக சட்டை செய்யாமல் நான் கடந்து சென்ற அவரது பதிவுகள் வரம்பு மீறுவதையும், உண்மைக்கு புறம்பாக இருப்பதையும் கண்டிக்காமல், அவரது தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருந்தால் நான் பெரியாரிஸ்டாகவோ, இசைஞானியின் ரசிகனாகவோ ஏன்  சராசரி மனிதனாகவோ கூட இருக்க முடியாது என்பதனால்  எழுதுகிறேன்.

பாரதி படத்தை பார்த்த பிறகுதான் நான் பெரியார் திரைபடத்தை பார்த்தேன், இந்த படத்திற்கும் இசைஞானியே இசையமைத்தருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று உள்ளுக்குள் அங்கலாய்த்தவன் நான். என் எண்ண ஓட்டங்கள் அப்படியாக இருந்த காலகட்டத்தில்தான்  இசைஞானியின் மீது இப்படியான ஒரு அவதூறு பரப்பபட்டது, பெரும் சர்ச்சையாக்கபட்டது.  அந்த சர்ச்சைக்கு அன்றே அவர் முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். அதுகூட அறியாத அடிப்படை அறிவில்லாத சில கூட்டம் கண்டதையெல்லாம் செய்தியாக்கி காலங்காலமாக ஒரு பொய்யை மெய் என்று விற்றுக் கொண்டிருக்கிறது, அந்த பொய்யை நம்பி அதை ஏற்று, பரப்பி சில செம்மறியாடுகள் சிலாகித்து மகிழ்கிறது. அந்த ஆடுகளுக்கு உண்மை குறித்தெல்லாம் பெரிதாக கவலையே கிடையாது, அந்த ஆடுகளின் நோக்கம் பெரியாரை கீழ்மைபடுத்துவது, அதன் வாயிலாக பார்பணியத்தை மெய்ப்பிப்பது. ஆண்டாண்டு காலமாக ஆண்டு அனுபவித்த சுகத்தை தோலுரித்து தொங்கவிட்ட அந்த மனிதரின் மீது இன்றும் அதே காழ்ப்போடு, அதே வன்மத்தோடு அந்த செம்மறியாட்டு கூட்டத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளும் இருப்பதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை. அது தவறும் இல்லை ஆனால் இளையராஜாவை துணைக்கு இழுத்திருப்பது தான் தவறு. பெரும் தவறு!

இளையராஜா ஆண்மீகவாதி அதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அவர் பார்ப்பனியவாதியும் அல்ல. ஆண்மீகம் என்பதும் நாத்திகம் என்பதும் நம்பிக்கை சார்ந்தது.

ஒருமுறை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்க அழைக்கப்படுகிறார் இளையராஜா. பெரியாரின் எல்லா சிலைகளும் ‘கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன்.  வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்கிற வாசகத்தை சுமந்தே இருக்கும். இசைஞானியோ ஆத்திகவாதி, பெரியாரோ நாத்திகவாதி ஆகையால் இசைஞானி மறுத்துவிடுகிறார். என்ன சொல்லி? “ அவருடைய கருத்து வேற என்னுடைய கருத்து வேற நான் மாலை போடுறது அவருக்கு பிடிக்குமா” என்று சொல்லி. அதுதான் இளையராஜா. அதுதான் இசைஞானியின் நேர்மை. அந்த நேர்மைக்கும், உண்மைக்கும் களங்கம் கற்பிக்கித்தான் அப்படியொரு அவதூறு. அதை முறியடிக்கத்தான் அன்றே அவர் ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தார். அதில் தன் விளக்கத்தையும் பதிவு செய்தார்.

இசைஞானியின் விளக்கம்;

“நான் அந்தப் படத்துக்கு இசையமைக்காதது குறித்து ஆளாளுக்கு ஒரு காரணத்தை அவர்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மைக் காரணம் என்ன, நடந்தது என்ன என்பதை இப்போதுதான் உங்களிடம் நான் முதன்முறையாகச் சொல்லப் போகிறேன்...

ஒரு திருமணம் நடக்கிறது... அதற்கு ஒரு சமையல் காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக்காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம், ‘இங்கே ஒரு பிரபலமான சமையல்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்துவிட்டார்’ என்று சொன்னால், அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்தக் கல்யாண சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அதுபோலத்தான் பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை... எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை.!’’ தன்னிடம் பேச்சுவார்த்தையே  நடத்தபடாத ஒரு படத்தை அவரால் எப்படி மறுத்திருக்க முடியும்.

சரி பேச்சுவார்த்தையே நடத்தபடாத ஒரு படம் குறித்து எப்படி இப்படி ஒரு சர்ச்சை பரப்பபட்டது? இசைஞானியே சொல்கிறார் “ உங்கள் மூலமாக இப்போது சொல்கிறேன்... ‘பாரதி’ படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து, ‘சுபாஷ் சந்திரபோஸ் பற்றி ஒரு படம் எடுக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும்’ என்று கேட்டார். உடனே நான், ‘இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திரபோஸை எந்தக் கோணத்தில் படம் எடுக்கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்பதைத் தெரிந்துகொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே, படத்தை எடுத்துக் காட்டுங்கள்... பிறகு பார்க்கலாம்’ என்றேன்.
அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் ‘பெரியார்’ படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ, ‘பெரியார்’ படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஞானராஜசேகரன் ஒரு படைப்பாளி அல்ல... அவர் ஒரு ஆபீஸர். அலுவலகத்தில் உட்கார்ந்து வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு, தன் கீழே வேலை செய்யும் ஏவலர்களை நடத்துவதைப்போல கலைஞர்களையும் நடத்த நினைக்கிறார்.

ஞானராஜசேகரன் உள்ளத் தூய்மையோடும் உயர்வாகவும் ‘பெரியார்’ படத்தை எடுப்போம் என்று என்னிடம் வரவில்லை. முறையான வழிகளில் என்னை அணுகவும் இல்லை. எந்த ஒரு படைப்பாளிக்கும் கலைஞனுக்கும் உள்ளத்தூய்மை வேண்டும். அப்படி உள்ளவன் இன்னொருவனைக் குற்றம் சொல்ல மாட்டான். என்னை இசையமைக்க அழைக்கவில்லை என்ற உண்மையான காரணம் அவர் மீது இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக தந்தை பெரியாரின் மாண்பையோ புகழையோ எவனும் தன் இசையினால் இன்னும் ஒருபடி புதிதாக உயர்த்திவிட முடியாது!’’ இதுவே இசைஞானியின் நிலைபாடு.

அடிப்படை ஆதாரம் கூட இல்லாத ஒரு பொய்யே இங்கு இன்றுவரை உலவுகிறது. அதை மெய் என்று பலரும் பகிர்கிறார்கள். எதையும் பகிர்வதில் தவறில்லை அதன் அடிப்படை குறித்து அறிந்துகொண்டு பரப்புங்கள். அதன் நம்பகத்தன்மையை பரிசோதியுங்கள் பிறகு பகிருங்கள். இந்த சர்ச்சைக்கு அன்றே அவர் பதில் சொல்லிவிட்டார் ஆனால் இன்றும் நாம் இதை உண்மை என நம்பி பரப்பிக் கொண்டேயிருக்கிறோம்.

பெரியார் என்றுமே ஆண்மீகத்திற்கு எதிரானவரல்ல அதேபோல ஆண்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இளையராஜா நாத்திகத்துக்கு எதிரானவரல்ல. இசைஞானிக்கு பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையின் மீது மாற்றுக்கருத்து உண்டு அவரது சுயமரியாதைக் கொள்கையின் மீதோ சாதி ஒழிப்பு நடவடிக்கையின் மீதோ எந்த காழ்ப்பும் கிடையாது அதனால் தான் இசைஞானி சொன்னார் “ நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.”

மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், மக்களுக்கு இசைஞானியையும் தெரியும், பெரியாரையும் தெரியும் இதுபோன்ற அவதூறுகளை பரப்புபவர்கள் யார் என்பதும் தெரியும். 

வெறுமனே அதுபோன்ற பொய்களை பரப்பி பெரியாரை கீழ்மை படுத்தும் பார்பணிய புத்தி என்று மட்டுமே இதை பார்த்துவிட முடியாது. ஒரு பொய்யை மெய்ப்பிக்கும் அவர்களது முயற்சியென்று பறவை பார்வையிலேயும் இதை அனுகலாம் அல்லது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் முயற்சி என்று நுட்பமாகவும் அனுகலாம். அவர்களது எதிர்வினை எப்போதுமே நுட்பமானது, நுண்ணோக்கி கொண்டு ஆராயப்பட வேண்டியது. கிறிஸ்து குறித்த இளையராஜாவின் பேச்சு சர்ச்சையாகியிருக்கிற இந்த நேரத்தில் சில வருடங்களுக்கு முன்னால் பரப்பபட்டு ஓய்ந்துபோன இதுபோன்ற  அவதூறுகள் திட்டமிட்டே பரப்படுகின்றன. இதை அனுக நுட்பமான பார்வை நம்மிடையே இருக்க வேண்டியது காலத்தின் அவசியம்.

இளையராஜா பெரியார் திரைபடத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றார் என்று ஒரு பொய்யை பிரகடனபடுத்துவதன் மூலமாக அவர்களால் பெரியாரையும் கீழ்மை படுத்த முடியும், இசைஞானியின் மீது வெகுஐனத்திடமிருக்கும் மரியாதையையும், மதிப்பையும் உளவியல்ரீதியாக மாற்றியமைக்கவும் முடியும். ஏனென்றால் ஆண்டான்டுகாலமாக ஆதிக்க சாதிகள் ஆண்டு அனுபவித்து வந்த சுகத்தை சுக்குநூறாக தகர்த்தெறிந்தவர் பெரியார் அதேபோல ஆண்டாண்டு காலமாக இவர்கள் ஆட்சி செய்த இசை ராஜ்ஜியத்தை தனதாக்கிகொண்டு முடி சூடா மன்னராக வாழ்ந்து வருபவர் இளையராஜா. இருவருமே இவர்களுக்கு ஒன்றுதான். இருவரின் இருப்பும் எப்போதுமே இவர்களுக்கு எரிச்சல்தான். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!அதைத்தான் எப்போதும் இவர்கள் செய்வார்கள்

Friday, 16 March 2018

ஒற்றைத் தன்மை ஆட்சிக்கு எதிரான கூட்டாட்சி சாத்தியபடுவதற்கான சமிக்ஞையா நம்பிக்கையில்லா தீர்மானம்?


கூட்டணியிலிருந்து விலகியதோடு பாஐக ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரவிருக்கிறது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். இந்த முடிவும், தீர்மானமும் வரவேற்கத்தக்கது. எதிர்ப்பதற்கு ஆளில்லை என்று எஞ்சியுள்ள கூட்டாட்சி தத்துவத்தையும் கொஞ்ச கொஞ்சமாக குழி தோண்டி புதைத்துக்கொண்டிருக்கும் காவிக் கும்பலை எதிர்ப்பதற்கு மாநில கட்சிகளுக்கு வலு இருக்கிறது என்று ஆணி அடித்தார்போல் சொல்லியிருக்கிறது இந்த முடிவு.

எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல்? 

ஒய்.எஸ்.ஆரின் கூட்டணி விலகளுக்கும், நம்பிக்கையில்லா தீர்மான அழைப்பிற்குமான துணிச்சல் எங்கிருந்து வந்தது. யார் தந்தது? அதற்கு இருவேறு காரணங்கள் இருக்கிறது. ஒன்று ‘ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்த்து' கிடைக்காமல் போனதும், வரவிருக்கிற சட்டமன்ற தேர்தல் கணக்கும்.

மற்றொன்று உத்திர பிரதேச இடைதேர்தலில் பாஐக அடைந்த படுதோல்வியில்  பெற்ற  புரிதலும், எதிர்கால அவதானிப்பும்.  ஒன்று   அவர்களது மாநில உரிமை. அது கிடைக்காத பட்சத்தில் ஆளும் கூட்டணியை உதறி தள்ளி வெளியே வந்திருக்கிறார்கள், எதிர்கிறார்கள். இதில் தவறில்லை ஆனால் மற்றொரு புரிதலில் தவறிருக்கிறது, முற்றிலும் பிழையிருக்கிறது.

பகுஐன் சமாஜூம், சமாஜ்வாதியும் உத்திர பிரதேசத்தில் பாஐகவை இடைத்தேர்தலில். வீழ்த்தி ஒரு வழியை காட்டியிருக்கிறார்கள் தான், மறுப்பதற்கில்லை. அதற்காக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக பல மாநிலங்களில் பாஐக ஆட்சியை பிடித்திருக்கிறது, சொல்லி வைத்தார் போல் இடைத்தேர்தலிலெல்லாம் தோல்வியையே சந்திக்கிறது இதுதான்  சந்தேகத்திற்கு இடமாகிறது, இந்த நேர்த்திதான் கேள்விக்குட்படுத்த வேண்டியதாகிறது.  உள்ளபடியே பாஐக வின் தேர்தல் வெற்றிகளை சந்தேகிப்பதை போல அவர்களது தேர்தல் தோல்விகளையும் நாம் சந்தேகிக்கவே வேண்டும். ஆனால் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இப்படியேபோனால் எதிர்காலத்தில் “உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா” என்று பாஐக தனது தரப்பை இதைவைத்தே நியாயம் செய்யும்.

ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமா?

பாஐக விற்கு எதிரான  நம்பிக்கையில்லா தீர்மானம் பயனளிக்குமா? பாஐக ஆட்சியை கவிழ்க்குமா? என்று கேட்டால் அதற்கு வாய்ப்பேயில்லை. மாறாக இந்த தீர்மானம் ஒன்றை செய்யும், அது இந்துத்துவ அடித்தளத்தை அசைத்து பார்க்கும்,அதன் சூத்திரதாரிகளுக்கு பெரும் அச்சத்தையை ஏற்படுத்தும். அந்த அளவில் இந்த தீர்மானம் அடையபோவது  வெற்றியே! அசுர பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஐனதா கட்சியை எப்படி அதிகாரத்திலிருந்து நகர்த்த இயலும் என்கிற பார்வையில் சிந்தித்தால் இந்த தீர்மானம் அடையபோவது என்னவோ தோல்விதான் அது அவர்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும் பிறகெப்படி வெற்றியாக இதனை பார்க்க முடியும் என்று கேட்டால்  அதன் நோக்கத்தை வைத்து சொல்லலாம்.

இந்த தீர்மானத்தின் நோக்கம்  பாஐக எதிர்ப்பு குரல்களை இனங்காணவும், அதன் எண்ணிக்கையை மதிப்பிடவும் அந்த எதிர்ப்பு குரல்களை  ஒன்றினைப்பதற்கும் ஒருங்கினைப்பதற்கும் எளிதான ஒரு வழியை அது எற்படுத்திக் கொடுப்பதற்காகவும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மலராமல் கூட்டாச்சியை மலரச் செய்வதுமே. அதனடிப்படையில் பார்த்தால் இந்த தீர்மானம் அடையப்போவது வெற்றிதான். வரலாற்றில் இது ஒரு  மாபெரும் வெற்றிதான்.

கூட்டாட்சி மலர்வது சாத்தியமா? 

‘ஒரு நாடு.. ஒரே வரி’, ‘ஒரு நாடு.. ஒரே தேர்தல்’, ‘ஒரு நாடு.. ஒரே மொழி’, ‘ஒரு நாடு.. ஒரே மதம்’, ‘ஒரு நாடு.. ஒரே கலாச்சாரம்’, ‘ஒரு நாடு.. ஒரே உணவு’ இதுவா கூட்டாட்சித் தத்துவம்? இந்தியா என்பது பல்வேறு அடையாளங்களைக் கொண்ட நாடு. இவையெல்லாம் இங்கு சாத்தியமா? சாத்தியம். பாஐக தொடர்ந்து அதிகார பீடத்தில் அசுர பலத்தோடு இருக்கிற வரையில் இது சாத்தியம். அந்த அசுர பலத்தை வீழ்த்துவதற்கும் அதிகாரத்திலிருந்து அவர்களை அகற்றுவதற்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு பகீரங்க அறிவிப்பை விடுத்தார்  மம்தா பானர்ஜி. “நாட்டை காக்க அவசியம் என்றால் மார்க்ஸிட்களோடு இனைந்து வேலை செய்யவும் தயார்” என்று அவர் சொன்னதோடு மட்டும் நின்றுவிடாமல் மூன்றாம் அணி உருவாக்கத்திற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுக்கிறார். பாஐக வுக்கு எதிரான மூன்றாம் அணி உருவாக்கத்திற்கு ஒலிக்கும் குரல்களில் மம்தாவினுடைய குரல் பிரதானமானது.

உ.பி தேர்தலில் சமாஜ்வாதியும், பகுஐன் சமாஜூம் சேர்ந்து  எதிர்த்து இடைதேர்தலில் பாஐக வை வீழ்த்தியிதோடல்லாமல் புதிய நம்பிக்கையையும், வழியையும் தந்திருக்கிறார்கள். பாஐக கூட்டனியிலிருந்து விலகிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  ஆளும் கூட்ணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறது. கர்நாடக மாநிலமோ தனியாக தங்கள் மாநிலத்திற்கென்று கொடி ஒன்றை வெளியிட்டு வேறொரு போக்கை கடைபிடிக்கிறது,சித்தராமையாவும், இந்திய காங்கிரஸூம் எதிரணியாகவே எப்போதும் பாஐக விற்கு இருப்பார்கள் அதில் என்றுமே சந்தேகம் இருக்கபோவதில்லை. கேரளத்தில் பார்த்தோமேயானால் கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸூமே பெரும்பான்மை, அப்படியிருக்க இருவரும் பாஐக பக்கம் தலைசாய்ப்பது  சாத்தியமேயில்லை. தமிழகத்தை பொருத்தமட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக- திமுக மற்றும் எஞ்சியிருக்கிற அனைத்து கட்சிகளும் வேறுபாடின்றி ஒன்று கூடியிருக்கிறது. இதில் அதிமுக பாஐகவை வரும்தேர்தலில் எதிர்க்காமல் போனாலும் கூட திமுகவும் மற்ற எதிர்கட்சிகளும் எதிர்த்தாலே போதும் ஒரு கணிசமான எதிர்ப்பு குரல் பாரதிய ஐனதா கட்சியின் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் ஒலிக்கும். இவற்றை ஒன்றினைத்து ஒருங்கிணைத்தால் பாஐகவை எதிர்ப்பதற்கான ஒரு வலுவான சக்தி இங்கு உருவாகும். இதில் காங்கிரஸ் நீங்கலாக மற்ற மாநில கட்சிகள் இனைந்தாலே போதும், மாநில அளவிலான வலுவான பல கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு காங்கிரஸ் நீங்கலாக மூன்றாம் அணி ஒன்று உருவாகும், அங்கு ஒரே இடத்தில் குவிக்கபடும் அதிகாரம் தவிர்க்கபட்டு அதிகாரம் அனைத்து மாநிலங்களுக்கும் பரவலாக்கப்படும். சுதந்திரத்திற்கு பின்னால் சாத்தியபடாத மாநில சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் சாத்தியப்படும். உண்மை கூட்டாட்சியாகவே அது மலரும்.

வராலாற்று உதாரணம்

இன்று பாரதிய ஐனதா கட்சி பெற்றிருக்கிற பெரும்பான்மை பலத்தை போல இந்திய தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்த பின்னால் மத்தியில் அட்சியிலிருந்த காங்கிரஸூம் பெரும் பலத்துடனேயே ஆட்சியிலிருந்தது, தமிழகம் உட்பட பெரும்பான்மை மாநிலங்களில்  காங்கிரஸே ஆட்சியில் நீடித்தது சுதந்திரமடைந்த பின்னும். நாளுக்கு நாள் அடக்குமுறையை கட்டவிழ்த்தும், அதிகாரத்தை பரவலாக்காமல் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்தியில் குவிக்க முயற்சித்தும் மாநில சுயாட்சிக்கு ஊறு விழைவித்துக் கொண்டேயிருந்த காங்கிரஸை வீழ்த்த துணிந்தார் அண்ணா, காங்கிரஸை அதிகார பீடத்திலிருந்து தூக்கி வீச முயற்சித்தவர் வகுத்த ஒரு சூத்திரம்தான்“ காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் யாரும் எங்களோடு வரலாம், அவர்கள் எங்களோடு உடன்பட்ட கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம், எதிர் கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம்” என்பது. 


காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்கிற அண்ணாவின் கோரிக்கையை ஏற்று திராவிட தேசியம் பேசிய அண்ணாவுடன் தமிழ்தேசியம் பேசிய மா.பொ.சி இனைந்தார், நாம் தமிழர் இயக்க தலைவர் சி.ப.ஆதித்தனாரும் இனைந்தார். இனவாத கொள்கைகளுக்கு எதிரான கம்யூனிஸ்ட் கட்சியும், கம்யூனிஸத்தை வெறுத்து ஒதுக்கிய ராஜாஜியின் சுதந்திரா காங்கிரஸூம், வகுப்புவாத பிரிவினைவாதத்தை எதிர்த்த முஸ்லீம் லீகும் இணைந்தது. இவ்வாறு அண்ணா வகுத்த சூத்திரம் காங்கிரஸை வீழ்த்த ஒரு மாபெரும் கூட்டனியை உருவாக்கி காங்கிரஸை ஆட்சியிலிருந்தே அகற்றியது. அன்றிலிருந்து இன்றுவரை காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சியே அமைக்க முடியவில்லை, கூட்டனியில் மட்டுமே பங்குபெற முடிகிறது.

தமிழகத்தின் ஆட்சி அதிகார வரலாற்றிலிருந்து காங்கிரஸ் காணாமல்போனது போலே இந்திய ஆட்சி அதிகார வரலாற்றிலிருந்து பாஐக காணாமல் போவதற்கான காலம் கைகூடியிருக்கிறது. மீண்டும் பாஐக ஏன் காங்கிரஸே கூட ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்பில்லாமல் செய்வதற்கான மூன்றாம் அணி உருவாவதற்கும், இதுவரையில் சாத்தியப்படாத மாநில கட்சிகளின் மாபெரும் கூட்டணி ஒன்று உருவாவதற்கான நம்பிக்கையான சமிக்ஞை தெரிகிறது. பாரதிய ஐனதா கட்சிக்கு எதிரான நிலைபாடுகொண்ட  அனைத்து மாநில கட்சிகளும் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது காங்கிரஸை வீழ்த்த அண்ணா வகுத்துக்கொடுத்த சூத்திரத்தை பின்பற்றுவது.

பாஐகவை வீழ்த்த நமக்கிருக்கிற ஒரே வழி மாநிலகளுக்கிடையே ஆண்டான்டுகாலமாக இருந்து வரும் வெறுப்பையும், பிரிவினைகளையும், கருத்து வேறுபாடுகளையும் கொஞ்ச காலம் ஓரங்கட்டிவிட்டு ஒரு கூடாரத்தின் கீழ் இணைந்து ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து பாஐகவுக்கு எதிரான ஒவ்வொரு வாக்குகளையும் மாநிலங்கள் முழுவதும் சிந்தாமல் சிதறாமல் சேகரிப்பதுதான். அதுவே  ‘ஒரு நாடு, ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே உணவு’ என்று சர்வாதிகாரபோக்கில் பயணிக்கும் பாஐகவிற்கு முடிவுரை எழுத வழிவகுக்கும்


Wednesday, 7 March 2018

ஆண்டாண்டு கால எரிச்சல் வேறென்ன செய்யும்


வடிவமைப்பு: விஜய்



“ரயில்ல வந்து unreserved பெட்டி இருக்கு பாருங்க, அதுல கொஞ்ச முன்னாடி ஏறிட்ட ஒரு ஆள் அவ்ளோ சீக்கிரமா எந்தரிச்சு இடம் கொடுக்க மாட்டாரு, ஏறுர மக்களெல்லாம் கொஞ்சம் பயத்துல இருப்பாங்க. அவரு ஆள் கொஞ்சம் பாக்க ஒரு மாதிரி இருக்கிறவரா இருந்தா பயந்துட்டே இருப்பாங்க. அதுல யாராவது ஒருத்தர் வந்து ‘யோவ் எந்திரியா எல்லாரும் உட்காருர இடத்துல நீ மட்டும் படுத்திருக்க' அப்டின்னு கொஞ்சம் அதட்டிடாருன்னு வைங்க. எந்திரிச்ச ஆளுக்கு எழுப்பிவிட்டாரு பாருங்க அவரு மேல ஒரு கோவம் இருந்துகிட்டே இருக்கும் அந்த கோவத்தை போறப்ப வரப்பலாம் காமிசிட்டே இருப்பாரு அந்த மாதிரி கோவம்தான் ராஜாவோடது” நேற்றைய நேர்பட பேசு நிகழ்ச்சியல் தோழர் அருள்மொழி முன்மொழிந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன்.  பெரியாரால் பலனடைந்தவர்கள் பெரியாரை மறந்துவிட்டபோதிலும் பெரியாரை மறக்கமால் நினைவு வைத்துக் கொண்டே இருப்பவர்கள், பெரியாரால் பாதிக்கபட்ட ராஜாவும்,   ராஜாவை போன்றவர்களும்தான்.

மெட்ராஸ் திரைபடத்தின் இறுதி காட்சியை ஒரு குறியீடாகவே இயக்குனர் பா.ரஞ்சித் வைத்திருப்பார் “நான் சாகறதுகுள்ள செவுத்துல எங்க அப்பா படத்த பாக்கனும்” என்று சொல்லிவிட்டு செல்கிற கண்ணன் விழிப்புணர்வு வாசகத்தை சுமந்து நிற்கிற சுவற்றை ஏக்கமாக பார்த்துகொண்டே கடந்துபோவார். இந்த குறியீடு ஆதிக்க மனோபாவத்தின் வெளிபாடு, அரசியல் காரணங்களை கடந்து இத்தகைய மனோபாவம் கொண்டவர்தான் பாஐக வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

பெரியார் என்கிற மனிதர் கொடையளித்த சித்தாந்தம் இன்றளவும்  பார்பணியத்துக்கும், சமூகநீதிக்கும் மத்தியில்  பெருஞ் சுவராக நின்று சமூகநீதியை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதை தகர்த்துப்பார்க்கிற வேலையை தனது வாழ்நாள் முழுவதும் பார்பணியவாதிகள் செய்துகொண்டுதான் இருப்பார்கள்.  மனுநீதியை உயர்த்தி பிடிக்கிறவர்களால் சமூகநீதியை எப்படி சகித்துக் கொள்ள முடியும். ஒருகாலத்தில் மேல் துண்டை அக்குளுக்குள் செருகி கொண்டும், கால் செருப்பை கையில் தூக்கி கொண்டும் குனிந்து நின்றவர்கள் கோட் சூட் பூட்ஸ் என்று நிமிர்ந்து நிற்பதை அவர்களால்தாங்கி கொள்ள முடியுமா? இந்த சமநிலையை, இந்த சமத்துவத்தை தாங்கிக் கொள்ள முடியாத அன்றைய ராஜாக்கள் பெரியாரின் மீது செருப்பை வீசினார்கள், இன்றைய ராஜாக்கள் அவரது சிலையை உடைக்க பார்க்கிறார்கள். “கண்ணாடி திருப்பினா வண்டி எப்படி ஓடும்” என்கிற திரைபட நகைச்சுவை போலத்தான் இவர்களது செயல்பாடுகளும் ‘சிலையை உடைத்தால் எப்படி சித்தாந்தத்தை சிதறடிக்க முடியும்?’ இதுகூட புரியாதவர்கள் தான் ராஜாக்கள். ராஜாக்கள் என்றுமே ராஜாக்கள் தான்.  அன்றும் சரி இன்றும் சரி சனாதனத்தை உயர்த்திபிடிக்கிறவர்களுக்கும், பாகுபாடுகளையும், பிறப்பால் ஏற்றத்தாழ்வை விரும்புகிறவர்களுக்கும் இந்துத்துவத்தை நிலைநிறுத்த விரும்புகிறவர்களுக்கும் பெரியார்  பெரிய இடையூறாக்கத்தான் இருந்தார், இருக்கிறார்,இருப்பார். 
இந்த பதிவின் வாயிலாக ஹெச். ராஜாவிற்கு இருக்ககூடிய பெரியார் மீதான வெறுப்பை தாண்டி, ஆண்டாண்டுகால எரிச்சலை தாண்டி அவரிடம் இருக்கிற ஆற்றாமையையும், பாஜக வின் தேசிய செயலராக இருந்துகொண்டு தமிழகத்தில் பாஐகவை வளர்க்க முடியாமல் போன கையாலாகாத்தனமே அம்பலப்பட்டு நிற்கிறது.

கிட்டதட்ட இந்தியா முழுவதுமே காவிமயமான பிறகும் கூட நோட்டாவிடம் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிற நிலையிலயே தேசத்தை ஆளும் பாஐக கட்சி தமிழகத்தில் இருப்பது அதன் தேசிய செயலருக்கு நெருக்கடியை கொடுக்கத்தானே செய்யும், அது அவரை  எள்ளி நகையாடத்தானே செய்யும். இதற்கெல்லாம் யார் காரணம்? இந்த தாடி கிழவர் தானே!  அவரது பார்பணிய எதிர்ப்பு தானே! அவரது சமுநீதி போராட்டங்கள் தானே! 

பெரியாரின் மீது அவதூறு பரப்புவதாலோ, பெரியாரின் சிலையை சேதபடுத்துவதாலோ, செருப்பு மாலை அணிவித்து, அவரது சிலையின்மீது சிறுநீர் கழித்து அவமரியாதை செய்வதாலோ  பெரியாரை கொச்சைபடுத்திவிட முடியும் என்றோ அவருடைய பார்பனிய எதிர்ப்பை நீர்த்துபோக செய்திட முடியுமொன்றோ அவருடைய சமூகநீதி போராட்டங்களின் தொடர்ச்சியை துண்டித்துவிடலாம் என்றோ நினைத்தால் அது ராஜாக்களின் அறியாமையே! அதற்கான முயற்சிகள் அத்தனையுமே  தோல்வியில் தான் முடியும் என்பதனை காலந்தோறும் பார்த்துக் கொண்டுதானே வருகிறோம்.  தன் மீது வீசப்பட்ட செருப்புகளையெல்லாம் சேகரித்து தனது கூட்டங்களில் விற்று அந்த பணத்தை இயக்க நிதியில் சேர்த்தவர் பெரியார். அவருக்கு எதிராக எடுக்கபடுகிற ஒவ்வொரு முயற்சியையும் மிக ஜாக்கிரதையாக எடுக்க எப்போதுமே தவறிவிடுகிறார்கள் ராஜாக்கள்.

வாழும் காலத்திலேயே பெரியார் அளவிற்கு வசைகளையும், அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்தித்த தலைவர்கள் வேறு யாரவது  வரலாற்றில் இருக்கிறார்களா? அவமானங்களையும், அவதூறுகளையும்  ஒரு பொருட்டாக கருதியவர் அல்ல, மாறாக “பொது தொண்டுக்கு வந்தபின், மானம் அவமானம் பார்க்க முடியாது. மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது” என்று சொன்னவர் பெரியார்.

இந்த தாடிக் கிழவர் ஏதோ வரம் வாங்கி வந்தவராகத்தான் பலநேரங்களில் நான் பார்க்கிறேன். விமர்சனங்களும், வசைகளும், அவதூறுகளும், அடையாள அழிப்புகளும் எத்தனையோ தலைவர்களின் கருத்தியல்களை காணமல் போகச் செய்திருக்கிறது. இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறாக வரலாற்றில் பெரியார் ஒருவர் மட்டும்தான் வசைகளால் வளர்ந்தார், விமர்சனங்களால் வாழ்கிறார், அடையாள அழிப்புகளால் பரவலாக அறியப்படுகிறார். பெரும்பாலும் பெரியாரிய சித்தாந்த அழிப்பு முயற்சிகள், அந்த சித்தாந்தத்தின் பரவலாக்கத்திற்கும், வளர்ச்சிக்குமே உதவியிருக்கிறது. நேற்று மாலை கூட நண்பர் ஒருவர் என்னை அழைத்து  பெரியாரை தெரிந்துகொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார், வாசிக்க புத்தகங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்டார். இதற்காக ராஜாவிற்கு  எனது உளமார்ந்த நன்றிகள்.

பெரியார் என்கிற போராளி இறந்து கிட்டதட்ட அறைநூற்றாண்டாகப் போகிறது. இன்னும் பெரியார் இந்துத்துவத்துக்கும், பார்பணியத்துக்கும்,  சாதியை உயர்த்தி பிடிப்பவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறார் என்றால் அதுதான் அவரது வெற்றி.  ‘இது பெரியாரின் மன்' என்று சொல்லுவதை தாங்கி கொள்ளவே முடியாதவர்களின் சோதனை முயற்சிதான் இதுபோன்ற பேச்சுகளும், பதிவுகளும். அவ்வப்போது இதுபோல பேசி, எழுதி, அதை மறுத்து,நீக்கி  பரிசோதித்து பார்த்துக் கொள்வார்கள் இது இன்னும் பெரியார் மன் தானா என்று. இதில் மகிழ்ச்சி என்னவென்றால் இந்த பரிசோதனை முயற்சிகளே சனாதனத்திற்கு பெரும் பின்னடைவை தந்துவிடுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பின்னால் பிரித்தாளும் சூழ்ச்சியை தொடர்கிறவர்கள் இந்துத்துவவாதிகள். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெற்றிடத்தை பயன்படுத்தி காவி சாயம் பூச  முயல்கிற முயற்சியும் பிரிவினைவாதத்தால் தான்.

பெரியாரின் சிலை அவரது சிந்தனையின், சித்தாந்தத்தின் குறியீடு, அடையாளம். அதை தகர்த்துவிட்டால் பெரியாரியத்தை தகர்த்துவிடலாம் என்றும்,  பெரியாரை இங்கிருந்து பிரித்துவிட்டால் காவி கொடியை பறக்கவிடலாம் என்கிற அவர்களது பேராசை இங்கிருக்கிற அனைத்து கட்சிகளையும் அவர்களுக்கு எதிராக ஒன்றினைக்க முயன்றிருக்கிறது. திராவிட கழகங்கள் தொடங்கி திமுக, மதிமுக, பாமக,விசிக காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி என்று  பரவலாக ஜெ.தீபா வரையிலும் காட்டமாக கண்டனம் தெரிவிக்கிற ஒரு சூழலை இங்கு உருவாக்கியிருக்கிறது. இது ஆரோக்கியமான ஒன்று. இன்றைய சூழலில் நாடு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற  இந்துத்துவ ஏகதிபத்தியத்தை எதிர்க்க இந்த ஒன்றுகூடல் மிக மிக அவசியமான ஒன்றாகவே நான் கருதுகிறேன். காலத்தின் தேவையும் அதுவே! 

பார்பணியத்துக்கு எதிராகவும், இந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட எதிர்ப்பு குரல்களாக நம் குரல் ஓங்கி ஒழிக்க வேண்டிய அடிப்படை தேவை இன்றிருக்கிறது. அப்படியொரு கால கட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். வேறுபாடின்றி ஒன்றுகூடல் ஒன்று சாத்தியமாவதற்கான அறிகுறி வெளிப்படையாகவே தெரிய தொடங்கியருக்கிறது. இதைபார்க்க பெரியார் இன்றிருந்திருந்தால் மகிழ்ந்துதான் போயிருப்பார், இதை சாத்தியபடுத்திய ராஜாவை பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்திருப்பார் தனது நீண்ட தாடியை வருடியபடி. அதே நேரத்தில் சில பெரியாரிஸ்ட்களின் கருத்துக்களை ரசித்திருப்பாரா என்று கேட்டால் மிக நிச்சயமாக எதிர்த்திருப்பார்,வன்முறை கக்கும் அந்த பேச்சுக்களை கண்டித்திருப்பார், கடுமையாக விமர்சித்திருப்பார். ஏனென்றால் அதுதான் பெரியார். வாழும் காலத்தில் தனது கருத்துக்கு எதிரான எல்லோரையுமே தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர், இப்போதிருந்திருந்தாலும் அதைத்தானே செய்திருப்பார். 

அறுபது வருடங்களுக்கு முன்னால்  கடவுள் இல்லை என்று பெரியார் தீவிரப் பிரச்சாரம்செய்த காலம். அப்போது ம.பொ.சி. அவர்களின் எழுத்தாலும், பேச்சாலும் ஈர்க்கப்பட்ட மாலி, கடவுள் எங்கே? என்ற நாடகம் போட்டார். பெரியாரின் கருத்துக்கு எதிர்மறையான வசனங்கள்கொண்ட நாடகம் அது. ம.பொ.சி. அவர்களுடன் சேர்ந்து பெரியாரை சந்திக்கும் ஒரு வாய்ப்பு அப்போது மாலிக்கு கிடைத்தது. 

“இவர் பெயர் மகாலிங்கம், குடந்தை மாலிஎன்ற பெயரில் நாடகம் போடுகிறார்”என்று பெரியாரிடம் ம.பொ.சி. அறிமுகம் செய்து வைத்தார்.

“கடவுள் எங்கே? நாடகம் போட்ட பையனா நீ” என்று கேட்டார்  பெரியார். 

“ஆமாங்கய்யா, அதுல உங்க கருத்தை கடுமையா எதிர்த்து வசனம் எழுதியிருக்கேன்” என்றார் மாலி

“அதனாலென்ன? உன் கருத்த நீ சொல்ற. என் கருத்த நான் சொல்றேன். தப்பு ஒண்ணுமில்ல. மக்கள் முடிவுபண்ணிக்குவாங்க” என்று பெரியார் சொன்னார். 

இந்த நிகழ்வை  பகுத்தறிவாளர்களின் கவணத்திற்கு கொண்டுவர நான் கடமைபட்டிருக்கிறேன். ஏனென்றால் இந்த சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ அத்தகைய உரிமையை தனது எதிரிக்கும் வழங்கியவர் பெரியார் என்பதனை மறந்துவிட்டு அவர்களைபோலவே நாமும் நாகரீகமில்லாமல் நடந்து கொள்ளகூடாது என்பதற்காக. முடிந்தால் அவர்கள் ஒரு நான்கைந்து சிலைகளை உடைத்து விட்டுத் தான் போகட்டுமே, என்ன வந்துவிடபோகிறது. எஞ்சியிருக்கிற அப்பாவி இந்து ஆதரவாளர்களிடம் அம்பலபட்டு நிற்கப்போகிறவர்கள் அவர்கள்தானே வலிமையிழக்க போகிறார்கள் அவர்கள்தானே. அதனால் நமக்கென்ன நஷ்டம். பதிலுக்கு பதில் அதே தொனியில் பேசுவதென்பது கலவரங்களையே வரவழைக்கும், நமக்கு பொது அமைதியே முதன்மையான ஒன்று.  ராஜா போன்றவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். 

“ கூட்ட கூட்டமா வந்து கூட அடிங்க, நாங்க திருப்பி அடிக்க மாட்டோம்” என்று மேடைகளில் தீர்க்கமாக முழங்கியவர் பெரியார். இதை அறிந்தவர்கள் தான் பகுத்தறிவாளர்கள், ஆனாலும் பெரியாரின் மீது கொண்டிருக்கிற பக்தி உணர்ச்சிவசபட வைக்கிறது. இதுபோன்ற நேரங்களில் ஜீயர்-க்கும் பக்தாளுக்கும் நாங்கள் சற்றும் சளைத்தவர்களல்ல என்று தங்களை காட்டிக்கொள்ள பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார்கள் சில பகுத்தறிவாளர்கள். இது கண்டனத்திற்குரியது. பகுத்தறிவுக்குட்படுத்தி அவரவரே பகுத்தாய்வு  செய்ய வேண்டியது. பக்தாளுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா பகுத்தறிவாளர்களே!

பெரியாரையோ! பெரியாரின் சிந்தனைகளையோ! எந்த காலகட்டத்திலும் இந்துத்துவத்தின் பெரியார் எதிர்ப்பு முயற்சிகளால் வளர்க்க முடியுமே தவிர அழிக்க முடியாது. “இல்ல பெரியார நாங்க அழிச்சே தீருவோம் அதுக்காக செருப்பு மாலை போடுவோம், சிலைமேல மூத்திரமடிப்போம், சிலைய உடைப்போம்” என்று அடம்பிடிக்கிறீர்களா?  உங்களுக்காக வேண்டிமானால் நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன். சாதிய ஆதிக்கத்தையும், ஆண் ஆதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும், இதையெல்லாம் கட்டிக்காத்துக் கொண்டிருக்கிற உங்களது  பார்பணிய சித்தாந்தத்தையிம், மத வெறியையும், இவற்றையெல்லாம்  காவல் காக்கிற உங்களுடைய கடவுளர்களையும் நீங்களே மறந்துவிடுங்கள் அல்லது அழித்துவிடுங்கள் அப்போது பெரியாரை நீங்கள் மறக்கடித்துவிடலாம், பெரியாரின் சிந்தனைகளை நீங்கள் அழித்துவிடலாம். இதைதவிர ராஜாவிற்கும்   ராஜாவை போன்றவர்களுக்கும் வேறு வழியே கிடையாது……..  

Thursday, 8 February 2018

காலம் பதில் சொல்லும்......


அதிமுகவின் வரலாற்று வீழ்ச்சிக்கும் இந்த தோல்விக்கும் யார் காரணம்? சசிகலா என்று சொல்ல பெரும்பான்மையானேர் முற்படகூடும் இது யதார்த்தம், உண்மையில் இந்த இயக்கத்திற்கு பலமென இருந்த அதன் முன்னால் பொதுசெயலாளர் ஜெயலலிதா தான் அதன் வீழ்ச்சிக்கும் காரணகர்த்தாவாகியிருக்கிறார். இன்று நிகழ்கிற அத்துனை இழிநிலைக்கும் அதிமுகவை அழைத்துவந்து நிறுத்தியிருப்பவரும் அவரே.

தன்னை சாகாவரம் கொண்டவராகவே அவர் எப்பொழுதும் நினைத்து வாழந்துவந்தவர். வாழ்வின் யதார்த்தத்தை அவர் உணர்ந்திருக்கவில்லை, உணர்ந்திருந்தால் இந்த நிலைக்கு அவர் கட்டிக்காத்த கழகம் வந்திருக்கவேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. ஜெயலலிதாவின் சொந்த அனுபவமோ எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றதையே கடந்தகாலத்தின் நீட்சியாக தொடர்ந்தார், ஒற்றை மைய அதிகாரத்தையே அவர் விரும்பிவந்தார், நம்பியிருந்தார்.

அரசியல் கட்சியோ, அமைப்போ, நிர்வாகமோ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் அதன் ஜனநாயகமும் ஏதிர்காலமும் எங்கிருக்கிறதென்றால் அது தன் எதிர்காலத்திற்கு தேவையான தலைவர்களை உருவாக்கியிருக்கிறதா என்கிற கேள்வியில் இருக்கிறது. அந்த கேள்விக்கான விடையை ஜெயலலிதா கண்டெடுக்கவில்லை, அதிமுகவிற்கும் அவரை கடந்து வேறு நாதியில்லை. யாவும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கவேண்டும், எல்லோரும் தன் பொற்பாதங்களிலே பணிந்து கிடக்க வேண்டும் என்பதில் அவர் கட்டுக்கோப்பாகவும் கண்ணும் கருத்துமாக இருந்தவர். விளைவு சுயசிந்தனையற்ற செம்மறியாட்டுக் கூட்டமாக அக்கழகம் உருமாறியிருக்கிறது. நாற்பத்தி ஐந்து டிகிரி கோணத்தில் வளைந்து பவ்வியமாக குனிந்து சகாக்கள் தனது காலில் விழுந்து எழுவதை  புன்சிரிப்போடு வரவேற்று அகமகிழ்ந்தாரே ஒழிய கழகத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி அவருள் எழுந்ததாகவே தெரியவில்லை. ஓர் மாய உலகத்தின் மகாராணியாகவே அவர் வாழ்ந்து மறைந்துவிட்டார்.

எல்லா கதைகளும் ஒரு கட்டத்தில் முடிந்தாகவேண்டும் என்கிற உண்மையை உணர மறுத்த அவர் மனம் தனக்கு நிகரான தலைவர்களை உருவாக்கிட வழிவகுக்கவில்லை. எம்.ஜி.ஆர் தனக்கு நிகராக அல்லது ஓரளவிற்கேனும் தனக்கு நிகரானவராக ஜெயலலிதாவை வளர்த்தெடுத்தது போல ஒருவரைகூட ஜெயலலிதா வளர்த்தெடுக்கவில்லை. எல்லோரையும் தன் கைகளுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றே காலத்தை கழித்தார். அதுவே இந்த வீழ்ச்சிக்கான காரணம்.  அவ்வப்போது தவிர்க்க இயலாத சூழலில் பன்னீர் செல்வத்தை முன்னிருத்தி பின்னால் இருந்து இயக்கினார். எவரையும் சுயமாக சிந்திக்கவிடாமல் எல்லா முடிவுகளையும் தானே எடுத்ததின் பலன் ஒட்டுமொத்த உயர்மட்டமும் யாரோ ஒருவரின் கைபாவைகளாக இன்றளவும் இருக்கிறது. ஏன் பன்னீர்செல்வமும் எடப்பாடியும் கூடத்தான் . வாய்கிழிய சின்னம்மா புகழ் பாடி அவர் காலில் விழுந்து எழுந்தவர் இன்று அவர் அதை செய்தார் இதை செய்தார் என்று குறை கூறுவது கேளியாக இருக்கிறது. இதை சொல்வதற்கு இரண்டு நாட்கள் தேவைபட்டிருக்கிறது அவருக்கு. இந்த இடைவெளியை சந்தேகிக்கும் சசிகலாவின் குற்றச்சாட்டிலும் முகாந்திரமிருக்கத்தான் செய்கிறது. இது ஒருபுறம் இருக்க ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களின் நிலையும் அமைச்சர்களின் நிலையும்  மிக மோசம். ஒருவரை பொதுசெயளாராகவும் முதல்வராகவும் எதன் அடிப்படையில்  முன்மொழிகிறோம் என்கின்ற அடிப்படை சித்தாந்தம் கூட இல்லாமல் தன் பதவி காக்க பதபதைப்போடு நிற்கிறார்கள் யார் பதவி கொடுத்ததென்பதை மறந்து.
இதையெல்லாம் பார்க்கையில் அதிமுக எந்த கொள்கைகளுமற்ற கட்சியாகவும் மக்கள் நலன் பற்றிய சிந்தனையில்லாத கட்சியாகவும் தனி நபர் துதிபாடும்  கட்சியாகவும் நிகழ்காலத்தில் பார்க்கபடுகிறது, எதிர்காலமும் அப்படியே பார்க்கும். இனி ஜெயலலிதாவே உயிர்த்தெழுந்து வந்தாலும் மீட்டெடுக்க முடியாத நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது, துரதிர்ஷ்டவசமாக இந்த நிலைக்கு தள்ளியதே அவராக போய்விட்டார்.

அதிமுக என்கிற ஓர் பேரியக்கம் இராணுவ கட்டுபாட்டை கடந்து சர்வாதிகார போக்கிற்க்கு சசிகலாவின் புண்ணியத்தில் நகர்த்தபட்டுக் கொண்டிருக்கிறது. தனி நபர் துதி பாடல் ஒருபொழுதும் சனநாயகத்தை வளர்த்தெடுப்பதில்லை, சனநாயகம் இல்லாத எந்த ஒரு இயக்கமும் எதிர்காலத்திற்கான தலைவர்களை உருவாக்குவதில்லை, தலைவர்கள் இல்லாத எந்தவொரு இயக்கமோ, கழகமோ, கட்சியோ கரை சேர்வதில்லை. இது ஒரு வரலாற்றுப் பாடம் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அரசியல் சாரா இயக்கங்களும், சிறு குறு நிறுவனங்களும், அமைப்புகளும் ஏன் நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம், வரலாற்றுப் பாடம்.

அதிமுக கரை சேருமா? சேராதா? என்கிற கேள்வி இன்று தொண்டர்கள் மத்தியிலும் சாமானியர்களின் மத்தியிலும் எழுந்திருக்கிறது உலகம் பார்த்துகொண்டிருக்கிறது, காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது, வரலாற்றின் பக்கங்கள் எழுதபட்டுக் கொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த பேரியக்கம்  வரலாற்றில் தொடர்ந்திடுமா? இல்லை வரலாற்றில் அதற்கான முடிவுரை எழுதபடுமா?

காலம் பதில் சொல்லும்...............
                                             

Friday, 29 September 2017

கோதுமை வயல்



நிலாவை காட்டியும், அஞ்சு கண்னண் வாரான் என்று சொல்லியும்தான் அன்று எனக்கெல்லாம் சோறூட்டினார்கள். இன்றைய பிள்ளைகளுக்கு நிலாவும் தேவையில்லை, பூச்சாண்டி பயமும் அவசியமில்லை. ஒரு கைபேசி போதும். அந்த தொடுதிரையை கண்டு விழித்து, கட்டிபிடித்து உறங்கி எழுகிறார்கள்.

நம் கைபேசியில் எத்தனை கடினமான வடிவத்தை கடவுச் சொல்லாக வைத்தாலும் அலட்டிக் கொள்ளாமல் திறந்துவிடுகிற பிள்ளைகள் இன்று ஏராளம். நான் சிறுவனாக இருந்தபோது எனக்கு தொலைகாட்சியில் சானல்களை கூட மாற்ற தெரியாது. இன்றைய குழந்தைகள் கணினி வரை புகுந்து விளையாடுகிறார்கள். எப்படி இந்த தொழில்நுட்பமெல்லாம் அவர்களுக்கு பிடிபடுகிறதென்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால், அது எனக்கு அத்தனை ஆச்சரியமூட்டியதேயில்லை, இனியூட்டப் போவதுமில்லை. ஏனென்றால் எனக்கு ஒரு சிறுவனை என் சிறுவயதிலிருந்தே தெரியும். அவன் கொடுத்த ஆச்சரியத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை, இனி எந்த குழந்தைகளும் எனை மீட்க போவதுமில்லை. என்னை வியப்பில் ஆழ்த்திய அந்த சிறுவனை அன்று எல்லோரும் பகத் சிங் என்றே அழைத்தாகள்.

அப்போது பகத் சிங்கிற்கு வயது எட்டு இருக்கும். அவனுக்கு அவன் தந்தை கிஷன் சிங்கோடு அவர்களின் வயல்களுக்கு செல்வது என்றால் கொள்ளை இஷ்டம். பச்சை பசேல் என்றிருக்கும் வயல்கள், குறுக்கு நெடுக்குமாக நீண்டிருக்கும் வரப்புகள், குளிர் காற்று இவையெல்லாம் அவனை கிறங்கடிக்கும். அந்த வரப்புகளின் மீது ஓடியாடுவதும், சேற்றில் குதித்து கும்மாளமடிப்பதையும் விட அவனுக்கு விருப்பமானதாக இருந்தது மணி மணியாக விளைந்து தொங்கும் கோதுமைகளே.
விதையாக விழுந்து, நாத்தாக எழுந்து, மெல்ல மெல்ல நிலம் முழுவதும் தண்ணீர் தின்று வளர்ந்து, செழித்து வயல் முழுவதும் கோதுமைகளாக தெரிவது அவனுக்கு மிகப் பெரிய ஆச்சரியம். இந்த உலகமே இப்படித்தான் உருவாகியிருக்கிறது, இப்படித்தான் வளர்கிறது என்ற எண்ணத்தை அந்த கோதுமை வயல், பகத் சிங்கின் ஆழ்மனதில் ஆழமாக பதியசெய்திருந்தது.

ஒருநாள் அவன் வழக்கம்போல் வயலுக்கு செல்கிறான். அந்த வயல்வெளிகளில் ஒடித் திரிகிறான், ஒரு நல்ல இடத்தை தேடியப் படி. அப்படி அவன் தேடிய இடம் கிடைத்தவுடன். அங்கு ஒரு சிறு குழி தோண்டி உடன் கொண்டுவந்திருந்த தன் தந்தையின் துப்பாக்கியை அதில் ஊன்றி வைத்து தண்ணீர் ஊற்றுகிறான். எட்டு வயதில் பகத் சிங்கின் பெருங் கனவு அந்த கோதுமை வயலில் துப்பாக்கி விளைவிக்க வேண்டும் என்பதே . ஊன்றிய துப்பாக்கியை பெரும் கனவோடு சிறுவன் பகத் சிங் பார்த்து கொண்டிருக்கிறான்.

அப்போது அவனை தேடிக்கொண்டு கிஷன் சிங் அங்கு வந்துவிடுகிறார். அவன் செய்த காரியத்தை பார்த்து “ என்ன செய்து கொண்டிருக்கிறாய்”என்று குழம்பிப் போய் கேட்க.
அவனோ எந்த தயக்கமும் இல்லாமல் சொல்கிறான்.
“ அப்பா, நான் நம் வயலில் துப்பாக்கியை விதைத்திருக்கிறேன். அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்க போகிறேன். ஒருநாள் அது பெரிய மரமாகும், மரமாகி நமக்கது நிறைய துப்பாக்கிகளை தரும்.அந்த துப்பாக்கிகளை கொண்டு நாம் பிரிட்டிஸ்காரர்களை நம் நாட்டைவிட்டே விரட்டியடிக்கலாம்” என்று சொல்கிறான்.

தந்தைக்கு கொள்ளை மகிழ்ச்சி. மகனை கட்டித் தழுவி, மடியில் வைத்து கொஞ்சி மகிழ்கிறார். தன் மகனுக்கு எத்தனை உயர்ந்த சிந்தனை என்று வியந்துபோகிறார், அவனை கொண்டாடி மகிழ்கிறார்.

தலைமுறை தலைமுறைகளாக தன் நாட்டின் விடுதலைக்காக போராடுகிற குடும்பம் அது, அந்த குடும்பத்தில் பிறந்தவனுக்கு இயல்பிலே சுதந்திர தாகமிருப்பது யதார்த்தம். அதில் எனக்கு எந்த வியப்புமில்லை ஆனால் சிறுவன் பகத் சிங்கின் வயது வியப்பிற்குறியது. அந்த வயதில் விடுதலை குறித்த எண்ணம் ஆச்சரியத்திற்குறியது. இன்று அரை நூற்றாண்டை வயதாக கொண்டு வாழ்கிறவர்களுக்கே அந்த புரிதல் சாத்தியபடாமல் இருக்கிறது. வெறும் எட்டு வயது சிறுவனுக்கு அந்த உணர்வு எப்படி வந்தது. சுதந்திரம் குறித்த புரிதல் எங்கிருந்து பிறந்தது.

அடிப்படையில் சுதந்திரம் குறித்த புரிதல் வருகிறபோதுதான் விடுதலை உணர்வு எழுகிறது.எட்டு வயது சிறுவனுக்கு சுதந்திரம் குறித்த புரிதல் சாத்தியம் தானா? அது தான் எனக்கு ஆச்சரியம். அந்த வயதில் அந்த புரிதல் வாய்த்ததினால்தான் அன்று அவன் சென்ற பின்னால் அவன் வழியில் பெரும் இளைஞர் கூட்டமே திரண்டது. அந்த புரிதலால்தான் இந்த தேசத்திற்கு விடுதலை சாத்தியமானது. அந்த புரிதல்தான் வரலாற்றில் இன்றும் 'பகத் சிங்' என்ற பெயரை நிலைத்து நிற்க செய்திருக்கிறது. ஆனால் யதார்த்ததில், வரலாற்றில் நிலைத்து நிற்கின்ற அந்த பெயர் இன்று எவர் நினைவிலும் நிற்கவேயில்லை.

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் நேற்றைய தினத்தில் தான் பகத் சிங் பிறந்தான்.இணையத்தில் வாய் கிழிய ஏதேதோ பேசுகிறோம், ஏதை எதையோ, எவர் எவரையோ கொண்டாடி கும்மாலமடிக்கிறோம் . ஆனால் பகத் சிங்கை கொண்டாடுவதற்கு இந்த தேசத்தில் ஆளில்லை.
இருபத்தி மூன்று வயதில் நம் சுதந்திரத்திற்காக தன்னுயிரை கொடுத்த அந்த வரலாற்று நாயகனை நாம் உண்மையாகவே நினைவில் வைத்திருக்கிறோமா?
அவன் செய்த தியாகத்தின் மீது தானே இந்த தேசம் கட்டமைக்கபட்டிருக்கிறது. கடுகளவேணும் நமக்கு நன்றியிருக்கிறதா? இருந்திருந்தால் நாம் அந்த வரலாற்று தினத்தை மறந்திருப்போமா?

பகத் சிங்கை இளைஞர்களின் குறியீடு என்பார்கள், கம்யூனிஸ்ட்களை தாண்டி எவருமே ஒரு நினைவேந்தலை கூட முன்னெடுக்கவில்லை. யாரும் பெரிதாக நேற்றைய நாளை பொருட்படுத்தவேயில்லை. ஏன், பெரும்பாலானவர்களுக்கு நேற்று என்ன நாள் என்றே தெரிந்திருக்கவில்லை.

அன்று ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் மரணத்தால் தட்டி எழுப்பி சுதந்திரம் கேட்க வைத்த அந்த இளைஞன் ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் நேற்றைய தினத்தில்தான் பிறந்தான், இங்கு எவருக்குமே அந்த வரலாற்று தினம் நினைவில் இல்லையே. கடந்த காலம் நிகழ் காலத்தின் வாயிலாகவே எதிர்காலத்திற்கு கடத்தப்பட வேண்டும். அப்படி இங்கு எதுவும் கடத்தபட்டதாக உணரமுடியவில்லை.

ஒரு நடிகர் எந்த வயதில் நடிக்க வந்தார், எத்தனை படங்கள் நடித்திருக்கிறார்,அதில் எத்தனை வெற்றி, எத்தனை தோல்வி, எந்தெந்த படம் எத்தனை கோடி வசூல் என்றுவரை இணையதளங்களில் புள்ளிவிவரத்தோடு வாதிடும் இணைய போராளிகளுக்கு பகத் சிங்கை பற்றியோ, சுதந்திரம் பற்றியோ அவன் வாழ்க்கையை நினைவு கூர்ந்து பதிவிடவோ, பேசிடவோ துளி கூட மனமும் இல்லை, நேரமும் இல்லை.
நமக்கு நம் வரலாறு தெரிந்திருக்கிறதா? தெரிந்திருக்கிறதென்றால் அதை நினைவு கூறாமல்,அதை பேசாமல், அதை கொண்டாடாமல் வெற்றுச் சதை பிண்டங்களாக ஏன் வாழ்கிறோம்? பூமிக்கு பாரமாக மண் தின்றோ! தீ தின்றோ! வெற்றுச் சதை பிண்டங்களாகவே ஏன் அழிந்துபோகிறோம்?

பகத் சிங் ஒரு சரித்திர நாயகன். அந்த சரித்திர நாயகன் பிறந்த தினத்தை கூட நினைவில் வைத்துகொள்ள இந்த டிஜிட்டல் யுகத்து மனித மூலைகளில் இடமே இல்லை. அந்த இடங்களை எல்லாம் நடிகர்களும், நடிகைகளும், கேளிக்கைகளுமாகவே அவர்கள் நிரப்பி வைத்திருக்கிறார்களா? அல்லது வரலாற்றை சென்ற தலைமுறை அடுத்த தலைமுறையிடம் கடத்துவதில்லையா? ஒட்டுமொத்த சமூகமும் வெற்றுச் சதை பிண்டகளாகவே இருப்பதற்கு அடிப்படை இந்த இரண்டில் ஏதோ ஒன்றா? இல்லை இரண்டுமா?

Tuesday, 19 September 2017

ஹிட்லரும் நீட்டும் ஜிமிக்கி கம்மலும்....


இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சத்தமில்லாமல் லட்சக்கணக்கான யூதர்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யபட்டு கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில் ஹிட்லரின் நாசிப் படைகளால் படுகொலை செய்யபட்டார்கள். இதற்கு காரணம் ஹிட்லர் என்று வரலாறு சொல்கிறது. ஆனால் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அந்த படுகொலைகளுக்கு வியன்னா கலை கல்லூரிதான் துவக்கமாக இருந்திருக்கிறது. 

ஹிட்லர் 
                    தன் தந்தையின் மரணத்திற்கு பின்னால் ஓவியம் மீது கொண்ட தீரா காதலாலும், தடுக்க இனி தகப்பன் இல்லை என்ற துணிவாலும் மீண்டும் ஒவியம் பயில நினைக்கிறார் ஹிட்லர். 
தன் தாயின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஹிட்லர் அவரிடம் சொல்லி புரிய வைத்து பணம் பெற்றுக்கொண்டு வியன்னா கலை கல்லூரிக்கு செல்கிறார். ஒவியம் பயில விண்ணப்பிக்கிறார். நிர்வாகம் ஹிட்லரை தேர்வு செய்ய தேர்வு ஒன்றை வைக்கிறது. பங்குகொள்கிறார் ஹிட்லர், துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவுகிறார். தோல்வி ஹிட்லரை கலக்கமுற செய்கிறது. 

தன் தாயிற்கு நிகராக ஓவியத்தை நேசித்தவர் ஹிட்லர். படிப்பில் துளியும் நாட்டமில்லாத ஹிட்லர் தந்தையின் வற்புருத்தலின் பேரிலே மேற்படிப்பை தொடர்ந்தார். தந்தையின் மரணம் அவருக்கிருந்த தடையை தகர்த்தியதாக அவர் நம்பியதாலும், ஓவியத்தின் மீதுள்ள ஈர்ப்பாலும் அவர் முறையாக ஓவியம் பயில விரும்புகிறார். இதுவெல்லாம்  நிர்வாகத்திற்கு தெரியுமா? அது ஹிட்லர் தோல்வியடைந்ததால் அவரது விண்ணப்பத்தை நிராகரிக்கிறது. சற்றும் துவண்டுபோகாத ஹிட்லர் மீண்டும் முயல்கிறார்,மீண்டும் விண்ணப்பிக்கிறார், மீண்டும் நிராகரிக்கப்படுகிறார். தொடர் தோல்வி ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது ஹிட்லரிடம். நிராகரிப்பு ஹிட்லரின் மனதை கடுமையாக பாதிக்கிறது.  தன்னால் இனி ஓவியமே பயில முடியாது என்ற முடிவிற்கு தன்னை தானே தள்ளிக் கொள்கிறார். தன் நாட்டத்தை மாற்றி, அவர் பயணத்தின் திசையை அரசியல் நோக்கி நகர்த்துகிறார். பிறகு நடந்தது உலகறிந்ததே! 

ஒருவேளை வியன்னா கலை கல்லூரியில் ஹிட்லர் தேர்ச்சிப் பெற்றிருந்தால், ஹிட்லரின் விண்ணப்பம் நிராகரிக்கபடாமல் அவருக்கு வாய்ப்பளிக்கபட்டிருந்தால், உலகமே ரசிக்க கூடிய, தலைசிறந்த ஓவியனாக கூட அவர் வந்திருக்க கூடும். ஆனால் வரலாறு அப்படி எழுதபடவில்லை. 

 ஆக லட்சக்கணக்கான யூதர்கள் கொடூரமாக கொல்லபட்டதற்கு வியன்னா கலை கல்லூரியும் காரணம். அந்த நிராகரிப்பும் காரணம். ‘அது எப்படி அந்த கல்லூரி காரணமாகும்? அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?’ என்கிறீர்களா? இருக்கிறது என்கிறது ஒரு கோட்பாடு. அதனை கேயாஸ் தியரி (chaos theory) என்கிறார்கள் ஆங்கிலத்தில். 

அதாகபட்டது எந்த ஒரு பெருநிகழ்விற்கும்  அதனோடு துளியும் தொடர்பில்லாத, சம்மந்தமில்லாத சிறு நிகழ்வு அந்த பெருநிகழவின் தொடக்கமாக இருக்கும். இந்த கோட்பாட்டினை 1963ல் எட்வர்ன் லோரென்ஷ் என்பவர் வண்ணத்துப் பூச்சியை கொண்டு விளக்கி காட்டினார். எட்வர்ன் சொல்கிறார் ‘ பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும் டெக்ஸாஸில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு' என்று. 

அது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா? இதனை அவர் கணித முறைபடியும், வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிருவிகாட்டினார். அவரது அந்த ஒழுங்கின்மை கோட்பாட்டிற்கு ‘வண்ணத்துப் பூச்சி விளைவு' (butterfly effect) என்றும் பெயர் வைத்தார். 
இப்போதும் நம்பமுடியவில்லையா? நான் ஏதோ ஆங்கில படத்தின் கதை சொல்வது போல தோன்றுகிறதா? தோன்றும். 

நாம் எதனையும் எதனோடும் தொடர்புபடுத்தி பார்ப்பதே கிடையாது. எல்லாம் நமக்கு வெறும் செய்தியே. விளைவு நாம் எல்லாவற்றையும் வெறும் செய்தியாகவே கடந்துபோகிறோம்.  அப்படி நாம் சமகாலத்தில் பார்த்த ஒரு பெருநிகழ்வும், அந்த பெருநிகழ்வு ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பால் சிதைந்து போனைதையும் இந்த கோட்பாட்டிற்கு விளக்கமாக சொல்ல விளைகிறேன், வாசியுங்கள். 

நீட் 

அன்று எல்லோரும் அந்த தீர்ப்பிற்காகத்தான் காத்திருந்தார்கள். அவளும் காத்திருந்தாள். 

அவள் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் வளர்ந்தவள். கல்வி மட்டுமே விடியலை கொடுக்கும் என நம்பியிருந்தவள். மருத்துவராக வேண்டும் என்று தீர்கமான கனவு கண்டுவந்தவள். அவளுடைய எதிர்காலமே அந்த தீர்ப்பில்தான் இருந்தது. 

அன்று தீர்ப்பு வருகிறது. ‘நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நிரப்பபட வேண்டும்' என்று. அந்த தீர்ப்பு கல்வியாளர்களுக்கும், சமூகநீதியை காக்க முயல்பவர்களுக்கும், பாதிக்கபட்டவர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அவளுக்கும் அது பேரதிர்ச்சியாகவே இருக்கிறது. ஒரு தலைமுறையின் கனவை நெஞ்சில் சுமந்துகொண்டு டெல்லி வரை சென்று போராடியவள் அவள், நொருங்கிப் போகிறாள். என்ன செய்வதென்றே விளங்கவில்லை அவளுக்கு. தனக்காக, தன் குடும்பத்திற்காக, தன் நிலையிலிருந்து விடுதலையாவதற்காக கனவு கண்டவள். தான் இன்னவாக ஆக வேண்டும் என்று தீர்மானித்து உழைத்தவள். அதற்காக தன்னை தகுதிபடுத்திக் கொண்டவள். தற்போது தகுதியற்றவளாக நிற்கவைக்கபட்டிருக்கிறாள் இந்த அரசாங்கத்தால்.  உச்சநீதி மன்றம் வரை சென்றாகிவிட்டது வேறு என்னதான் செய்வது ஜனநாயகம் செத்துபோன இந்த ஜனநாயக நாட்டில்.இனி வேறு வழியே இல்லை என்று நினைத்துவிடுகிறாள், தன்னால் இனி மருத்துவமே பயில முடியாது,இனி தன்னால் மருத்துவராகவே முடியாது என்று முடிவெடுத்துவிடுகிறாள். தன் வாழ்வை முடித்துக் கொள்கிறாள். 

தகுதியுடைய ஒரு பெண்ணை தகுதியற்றவளாக்கி இந்த அரச இயந்திரம் வாழ தகுதியற்றவளாக தூக்கில் தொங்கவிட்டிருக்கிறது. இது எத்தனை பெரிய அரச பயங்கரவாதம். இது பயங்கரவாதம் என்று ஒரு மரணத்திற்கு பின்னால் தான் இந்த சீல்பிடித்த சமூகத்திற்கு உரைக்கிறது. 

இந்த மரணம்தான் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுக்கிறது. எல்லோரையும் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறது. அதுவரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலித்த வலுவான குரல்கள் இந்த சமூகத்தின் செவிட்டுச் செவிகளில் ஒலிக்க தொடங்குகிறது. எல்லோரும் வீதிக்கு வருகிறார்கள். சாதி, மதம், கல்வி என்று எந்த பேதமுமில்லை எவருக்கும். எல்லோரும் போராடுகிறார்கள். பெரிதாக எவருக்கும் எந்த சித்தாந்தமும் இல்லை. உணர்வின் உந்துதலில் கூடிய கூட்டமும் அது. 

தன்னெழுச்சியாக கூடிய பெருங்கூட்டம் அதிகார வர்கத்தின் உச்சி குடிமியை உலுக்கிப் பார்க்கிறது, அடி வயிற்றில் அமிலத்தை ஊற்றுகிறது. அரச இயந்திறந்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காக்கி உடையனிந்த குண்டர்களை ஏவி அடித்து, மிதித்து, மிரட்டி போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது, குரல்வளையை நசுக்க துடிக்கிறது. எதற்கும் அஞ்சா கூட்டம் கூடிக்கொண்டே போக, அதிகார வர்கம் திக்கு முக்காடி நிற்க பெரும் மாணவ புரட்சியாக, கல்வி புரட்சியாக இந்த போராட்டம் உருவெடுக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஏன் நினைக்கமாட்டார்கள்? இது இலக்கை அடைந்தே தீரும் என்று தீர்கமாக நம்பியவர்கள் பலர், எதுவரையில் என்றால் இந்த பெரும் போராட்டத்திற்கு துளியும் தொடர்பில்லாத ஒரு வண்ணத்து பூச்சி தன் சிறகடிப்பின் சலசலப்பால் இந்த பெருங்கூட்டத்தை சிதறடிக்க துவங்கும் வரையில்...

ஜிமிக்கி கம்மல் 

கேரள மாநிலம் ஓணம் பண்டிகையை கொண்டாடி குதூகலித்துகொண்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்கும். கேரளத்திற்கும் எந்த தொடர்புமில்லை.அங்கு இந்த போராட்டம்  பெரிதாக எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. எல்லோரும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 

அந்த கல்லூரியும் கொண்டாடுகிறது. அந்த கல்லூரியின் ஆசிரியைகளும், மாணவிகளும் கொண்டாடுகிறார்கள், கொண்டாட்ட கழிப்பில் ஒருசேர ஒரு மலையாள பாடலுக்கு நடனமாடுகிறார்கள். அந்த நிகழ்வு காணொளியாக பதியப்படுகிறது, வலைத்தளத்தில் விளையாட்டாக பதிவேற்றவும்படுகிறது. பதிவேற்றிய சில நொடிகளில் அந்த காணொளியை யாரோ ஒருவர் பகிர, அதனை வேறாரோ ஒருவர் பகிர, பின் யார் யாரோ பகிர்கிறார்கள். இப்படியே பகிர்தல் தொடர அது தமிழகத்தையும் வந்து சேர்கிறது. காட்டுத்தீயாக போராட்டக் களத்திற்குள்ளும் பரவுகிறது. 

சித்தாந்தம் இல்லாமல் கூடிய கூட்டம் அந்த காணொளியை கண்டு சிலிர்த்து சிலாகித்து மெய் மறந்து போகிறது. கொண்ட நோக்கம் மறந்துபோகிறது. எந்த இணையம் இந்த போராட்டத்தால் அதிர்ந்துபோனதோ அதே இணையத்தில் இணைய போராளிகள் ஜிமிக்கி கம்மல் என்று ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த காணொளி வைரலாகிறது. எல்லோரும் பார்த்து பார்த்து ரசித்தார்கள். பகிர்ந்து பகிர்ந்து மகிழ்ந்தார்கள், சிலாகித்து செத்தார்கள் கூடவே போராட்டத்தின் நோக்கமும் சேர்த்து செத்தது. 

சிந்தாந்தமில்லாமல், தலைவன் இல்லாமல் தானாக சேர்ந்த கூட்டம் தானாகவே கலைந்து அந்த வண்ணத்து பூச்சியின் முகப்புத்தகத்தை தேடி ஓடி மொய்க்க தொடங்குகிறது. அரசுக்கு எந்த மெனக்கெடலும் இல்லாமலே போனது இந்த போராட்டத்தை ஒடுக்கவும், ஓங்கிய குரல்வளையை நசுக்கவும். 

ஒரு பெண்ணிற்காக வந்தார்கள் இன்னொரு பெண்ணை தேடிச் சென்றார்கள். அவ்வளவே இப் புரட்சி். வழக்கம்போல் அதே குரல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் கேட்பாரில்லை. 

அதிகார வர்கம் ஒடுக்க முடியாமல் தவித்த ஒரு போராட்டம். அங்கும் இங்குமாய் கூடிய கூட்டம். எந்த சிரத்தையும் இல்லாமல் சிதறியது. வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெருநிகழ்வு அதற்கு துளியும் சம்பந்தமில்லாத, தொடர்பில்லாத ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பை பதிவு செய்து பதிவேற்றிய நொடியில், அது ஏற்படுத்திய சலசலப்பில் அங்கும் இங்குமாய் சிதற தொடங்குகிறது, சிதறிப்போகிறது. இதனை தான் ‘கேயாஸ் தியரி' என்று ஆங்கிலத்திலும் ‘விதி' என்று தமிழிலும் சொல்வார்கள். பாரதி கூட அழகாக பாடியிருப்பான்.

விதியே! விதியே! தமிழ்ச் சாதியை 
என் செயக் கருதி இருக்கின்றாயடா? 


The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...