Thursday, 8 February 2018

காலம் பதில் சொல்லும்......


அதிமுகவின் வரலாற்று வீழ்ச்சிக்கும் இந்த தோல்விக்கும் யார் காரணம்? சசிகலா என்று சொல்ல பெரும்பான்மையானேர் முற்படகூடும் இது யதார்த்தம், உண்மையில் இந்த இயக்கத்திற்கு பலமென இருந்த அதன் முன்னால் பொதுசெயலாளர் ஜெயலலிதா தான் அதன் வீழ்ச்சிக்கும் காரணகர்த்தாவாகியிருக்கிறார். இன்று நிகழ்கிற அத்துனை இழிநிலைக்கும் அதிமுகவை அழைத்துவந்து நிறுத்தியிருப்பவரும் அவரே.

தன்னை சாகாவரம் கொண்டவராகவே அவர் எப்பொழுதும் நினைத்து வாழந்துவந்தவர். வாழ்வின் யதார்த்தத்தை அவர் உணர்ந்திருக்கவில்லை, உணர்ந்திருந்தால் இந்த நிலைக்கு அவர் கட்டிக்காத்த கழகம் வந்திருக்கவேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. ஜெயலலிதாவின் சொந்த அனுபவமோ எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றதையே கடந்தகாலத்தின் நீட்சியாக தொடர்ந்தார், ஒற்றை மைய அதிகாரத்தையே அவர் விரும்பிவந்தார், நம்பியிருந்தார்.

அரசியல் கட்சியோ, அமைப்போ, நிர்வாகமோ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் அதன் ஜனநாயகமும் ஏதிர்காலமும் எங்கிருக்கிறதென்றால் அது தன் எதிர்காலத்திற்கு தேவையான தலைவர்களை உருவாக்கியிருக்கிறதா என்கிற கேள்வியில் இருக்கிறது. அந்த கேள்விக்கான விடையை ஜெயலலிதா கண்டெடுக்கவில்லை, அதிமுகவிற்கும் அவரை கடந்து வேறு நாதியில்லை. யாவும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கவேண்டும், எல்லோரும் தன் பொற்பாதங்களிலே பணிந்து கிடக்க வேண்டும் என்பதில் அவர் கட்டுக்கோப்பாகவும் கண்ணும் கருத்துமாக இருந்தவர். விளைவு சுயசிந்தனையற்ற செம்மறியாட்டுக் கூட்டமாக அக்கழகம் உருமாறியிருக்கிறது. நாற்பத்தி ஐந்து டிகிரி கோணத்தில் வளைந்து பவ்வியமாக குனிந்து சகாக்கள் தனது காலில் விழுந்து எழுவதை  புன்சிரிப்போடு வரவேற்று அகமகிழ்ந்தாரே ஒழிய கழகத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி அவருள் எழுந்ததாகவே தெரியவில்லை. ஓர் மாய உலகத்தின் மகாராணியாகவே அவர் வாழ்ந்து மறைந்துவிட்டார்.

எல்லா கதைகளும் ஒரு கட்டத்தில் முடிந்தாகவேண்டும் என்கிற உண்மையை உணர மறுத்த அவர் மனம் தனக்கு நிகரான தலைவர்களை உருவாக்கிட வழிவகுக்கவில்லை. எம்.ஜி.ஆர் தனக்கு நிகராக அல்லது ஓரளவிற்கேனும் தனக்கு நிகரானவராக ஜெயலலிதாவை வளர்த்தெடுத்தது போல ஒருவரைகூட ஜெயலலிதா வளர்த்தெடுக்கவில்லை. எல்லோரையும் தன் கைகளுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றே காலத்தை கழித்தார். அதுவே இந்த வீழ்ச்சிக்கான காரணம்.  அவ்வப்போது தவிர்க்க இயலாத சூழலில் பன்னீர் செல்வத்தை முன்னிருத்தி பின்னால் இருந்து இயக்கினார். எவரையும் சுயமாக சிந்திக்கவிடாமல் எல்லா முடிவுகளையும் தானே எடுத்ததின் பலன் ஒட்டுமொத்த உயர்மட்டமும் யாரோ ஒருவரின் கைபாவைகளாக இன்றளவும் இருக்கிறது. ஏன் பன்னீர்செல்வமும் எடப்பாடியும் கூடத்தான் . வாய்கிழிய சின்னம்மா புகழ் பாடி அவர் காலில் விழுந்து எழுந்தவர் இன்று அவர் அதை செய்தார் இதை செய்தார் என்று குறை கூறுவது கேளியாக இருக்கிறது. இதை சொல்வதற்கு இரண்டு நாட்கள் தேவைபட்டிருக்கிறது அவருக்கு. இந்த இடைவெளியை சந்தேகிக்கும் சசிகலாவின் குற்றச்சாட்டிலும் முகாந்திரமிருக்கத்தான் செய்கிறது. இது ஒருபுறம் இருக்க ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களின் நிலையும் அமைச்சர்களின் நிலையும்  மிக மோசம். ஒருவரை பொதுசெயளாராகவும் முதல்வராகவும் எதன் அடிப்படையில்  முன்மொழிகிறோம் என்கின்ற அடிப்படை சித்தாந்தம் கூட இல்லாமல் தன் பதவி காக்க பதபதைப்போடு நிற்கிறார்கள் யார் பதவி கொடுத்ததென்பதை மறந்து.
இதையெல்லாம் பார்க்கையில் அதிமுக எந்த கொள்கைகளுமற்ற கட்சியாகவும் மக்கள் நலன் பற்றிய சிந்தனையில்லாத கட்சியாகவும் தனி நபர் துதிபாடும்  கட்சியாகவும் நிகழ்காலத்தில் பார்க்கபடுகிறது, எதிர்காலமும் அப்படியே பார்க்கும். இனி ஜெயலலிதாவே உயிர்த்தெழுந்து வந்தாலும் மீட்டெடுக்க முடியாத நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது, துரதிர்ஷ்டவசமாக இந்த நிலைக்கு தள்ளியதே அவராக போய்விட்டார்.

அதிமுக என்கிற ஓர் பேரியக்கம் இராணுவ கட்டுபாட்டை கடந்து சர்வாதிகார போக்கிற்க்கு சசிகலாவின் புண்ணியத்தில் நகர்த்தபட்டுக் கொண்டிருக்கிறது. தனி நபர் துதி பாடல் ஒருபொழுதும் சனநாயகத்தை வளர்த்தெடுப்பதில்லை, சனநாயகம் இல்லாத எந்த ஒரு இயக்கமும் எதிர்காலத்திற்கான தலைவர்களை உருவாக்குவதில்லை, தலைவர்கள் இல்லாத எந்தவொரு இயக்கமோ, கழகமோ, கட்சியோ கரை சேர்வதில்லை. இது ஒரு வரலாற்றுப் பாடம் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அரசியல் சாரா இயக்கங்களும், சிறு குறு நிறுவனங்களும், அமைப்புகளும் ஏன் நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம், வரலாற்றுப் பாடம்.

அதிமுக கரை சேருமா? சேராதா? என்கிற கேள்வி இன்று தொண்டர்கள் மத்தியிலும் சாமானியர்களின் மத்தியிலும் எழுந்திருக்கிறது உலகம் பார்த்துகொண்டிருக்கிறது, காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது, வரலாற்றின் பக்கங்கள் எழுதபட்டுக் கொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த பேரியக்கம்  வரலாற்றில் தொடர்ந்திடுமா? இல்லை வரலாற்றில் அதற்கான முடிவுரை எழுதபடுமா?

காலம் பதில் சொல்லும்...............
                                             

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...