Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Wednesday, 13 March 2019

ஏன் நாம்  பெண்களுக்கு எதிராக நிகழ்கிற அனைத்து வக்கிரங்களிலும் இவ்வாறாகவே நடந்துக் கொள்கிறோம் ?

நேற்று மாலை தங்கை அழைத்திருந்தார். சில நிமிடங்களுக்கு முன்னால் அம்மா அவரோடு பேசியதை பகிர்ந்துக் கொண்டார். தங்கை கோவையில் பணிபுரிவதால் அம்மா நேற்று மாலை தங்கையை அழைத்து “பொள்ளாச்சி நியூஸ் பாத்தியா. தேவை இல்லாம வெளிய சுத்தாத, கூட வேலை பாக்கற பசங்கள்ட ஜாக்கிரதையா பேசு, பழகு. Facebook, whatsappல யார்கிட்டையும் அநாவசியமா பேசாத. யாரையும் நம்பாத” என்றெல்லாம்  மிக நீண்ட இனி செய்யக் கூடாத விஷயங்களின் பட்டியலை தந்திருக்கிறார். ஆனால் பொள்ளாச்சியில் பெண்கள் மீது நிகழ்த்தபட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்த பின்னால் ஒருமுறை கூட என்னை அழைத்து  “நீ பெண்கள் கிட்ட பேசுவ, பழகுவ,  வெளிய நிறைய இடத்துக்கு போற.  போற இடத்துலயெல்லாம் பெண்கள் இருப்பாங்க, facebook , whatsappல உனக்கு முகம் தெரியாத பெண்களோட கூட நட்பு இருக்கும். அவங்ககிட்ட கண்ணியமா நடந்துக்கோ, மரியாதையா நடத்து, தப்பா நடந்துக்காத, அவங்க முகம் சுளிக்கிற மாதிரி, வருத்தப்படற மாதிரி, துன்பப்படற மாதரி, ஒருநாளும் நடந்துக்காத. உன் கூட பழகுற பெண்களுக்கு எப்பவும் பாதுகாப்பாக இரு.” என்று அம்மா ஒருவார்தை கூட இப்போதுவரை சொல்லவில்லை. மாறாக  என் தங்கை குறித்து கவலைக் கொள்பவராகவும் அவருக்கு அறிவுரை வழங்குவதையே வேலையாக வைத்திருப்பவராகவும் அம்மா இருக்கிற அதே நேரத்தில் வீட்டில் பெண்ணான தங்கைக்கு எந்நேரமும் நிபந்தனைக்களுக்குட்பட்டு வாழும் பயிற்சியும் ஆணான எனக்கு கட்டுக் கடங்காத சுதந்திரமும் மறைமுகமாக கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் இதே நிலைதான். இந்த நிலைதான் இந்த நாட்டில் நடக்கிற அத்தனை பாலியல் வக்கிரங்களுக்கும் காரணமாக அமைகிறது. ஆனால் அதை நாம் உணர்ந்தவர்களாக இருக்கிறோமா?
சமூக வலைதளங்களிலும், வீட்டிலும் கிடைக்கிற அனைத்து தளங்களிலும் பெண்களுக்கே புத்திமதி சொல்கிறோம். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, ஆறுதலாக நாம் இருக்க  வேண்டுமே தவிற இதுதான் சாக்கென்று பெண்களை மீண்டும் சிறைப்படுத்த கண்களுக்கு புலப்படாத புர்காவிற்குள் அடைத்து வைக்க முயல்வது எத்தனை அபத்தம். 

ஏன் நாம்  பெண்களுக்கு எதிராக நிகழ்கிற அனைத்து வக்கிரங்களிலும் இவ்வாறாகவே நடந்துக் கொள்கிறோம் ?

ஏன் நம் குடும்ப அந்தஸ்த்து, சாதி கவுரவம்,போன்ற சமூக கற்பிதங்களையெல்லாம் பெண்ணின் யோனியோடு தொடர்புபடுத்தியே வைத்திருக்கிறோம், அந்த கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் பார்க்கிறோம்? 

ஆணுக்கு அப்படி எந்த கற்புமில்லை கண்றாவியுமில்லை. அந்த துணிச்சல் தான் பெண்களின் மீது அத்துமீற சொல்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடமே போய் இதை செய்யாதே அதை செய்யாதே என்றெல்லாம் அறிவுரை சொல்வதை  கடமையாக செய்ய வைக்கிறது. 

இதை வெறுமனே பெண்கள் மீது சில ஆண்கள் நிகழ்த்திய வன்முறையாகவும், அதிமுக கட்சி பிரமுகர் ஒருவரும் அதிமுகவும் திட்டமிட்டு நிகழ்த்திய வன்கொடுமை என்கிற கோணத்தில் மட்டுமே நாம் பார்ப்போமேயானால் ஒரு கட்டத்தில் எந்த தீர்வையும் எட்டாமல் வெறும் சம்பவமாக மற்றுமொரு கோர நிகழ்வாக நினைவுகளில் தங்கி நீர்த்துபோய்விடும். மாறாக பெண்களுக்கு எதிராக பெற்றோர்களும் ஆசிரியர்களும் நாடும் வீடும் சமூக கலாச்சார கற்பிதங்களும் நிகழ்த்திய வன்முறையாகவும் கொடுமையாகவும் பொள்ளாச்சியில் நிகழ்ந்த இந்த பாலியல் வன்கொடுமையை நாம் பார்க்க வேண்டும், அணுக வேண்டும். அப்படி பார்க்கிறபட்சத்தில் உள்ளபடியே தீர்வை நோக்கி நகர்வதற்கான உரையாடலை நம்மால் நிகழ்த்த முடியும்.

#ArrestPollachiRapists

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...