![]() |
வடிவமைப்பு: விஜய் |
“ரயில்ல வந்து unreserved பெட்டி இருக்கு பாருங்க, அதுல கொஞ்ச முன்னாடி ஏறிட்ட ஒரு ஆள் அவ்ளோ சீக்கிரமா எந்தரிச்சு இடம் கொடுக்க மாட்டாரு, ஏறுர மக்களெல்லாம் கொஞ்சம் பயத்துல இருப்பாங்க. அவரு ஆள் கொஞ்சம் பாக்க ஒரு மாதிரி இருக்கிறவரா இருந்தா பயந்துட்டே இருப்பாங்க. அதுல யாராவது ஒருத்தர் வந்து ‘யோவ் எந்திரியா எல்லாரும் உட்காருர இடத்துல நீ மட்டும் படுத்திருக்க' அப்டின்னு கொஞ்சம் அதட்டிடாருன்னு வைங்க. எந்திரிச்ச ஆளுக்கு எழுப்பிவிட்டாரு பாருங்க அவரு மேல ஒரு கோவம் இருந்துகிட்டே இருக்கும் அந்த கோவத்தை போறப்ப வரப்பலாம் காமிசிட்டே இருப்பாரு அந்த மாதிரி கோவம்தான் ராஜாவோடது” நேற்றைய நேர்பட பேசு நிகழ்ச்சியல் தோழர் அருள்மொழி முன்மொழிந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன். பெரியாரால் பலனடைந்தவர்கள் பெரியாரை மறந்துவிட்டபோதிலும் பெரியாரை மறக்கமால் நினைவு வைத்துக் கொண்டே இருப்பவர்கள், பெரியாரால் பாதிக்கபட்ட ராஜாவும், ராஜாவை போன்றவர்களும்தான்.
மெட்ராஸ் திரைபடத்தின் இறுதி காட்சியை ஒரு குறியீடாகவே இயக்குனர் பா.ரஞ்சித் வைத்திருப்பார் “நான் சாகறதுகுள்ள செவுத்துல எங்க அப்பா படத்த பாக்கனும்” என்று சொல்லிவிட்டு செல்கிற கண்ணன் விழிப்புணர்வு வாசகத்தை சுமந்து நிற்கிற சுவற்றை ஏக்கமாக பார்த்துகொண்டே கடந்துபோவார். இந்த குறியீடு ஆதிக்க மனோபாவத்தின் வெளிபாடு, அரசியல் காரணங்களை கடந்து இத்தகைய மனோபாவம் கொண்டவர்தான் பாஐக வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
பெரியார் என்கிற மனிதர் கொடையளித்த சித்தாந்தம் இன்றளவும் பார்பணியத்துக்கும், சமூகநீதிக்கும் மத்தியில் பெருஞ் சுவராக நின்று சமூகநீதியை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதை தகர்த்துப்பார்க்கிற வேலையை தனது வாழ்நாள் முழுவதும் பார்பணியவாதிகள் செய்துகொண்டுதான் இருப்பார்கள். மனுநீதியை உயர்த்தி பிடிக்கிறவர்களால் சமூகநீதியை எப்படி சகித்துக் கொள்ள முடியும். ஒருகாலத்தில் மேல் துண்டை அக்குளுக்குள் செருகி கொண்டும், கால் செருப்பை கையில் தூக்கி கொண்டும் குனிந்து நின்றவர்கள் கோட் சூட் பூட்ஸ் என்று நிமிர்ந்து நிற்பதை அவர்களால்தாங்கி கொள்ள முடியுமா? இந்த சமநிலையை, இந்த சமத்துவத்தை தாங்கிக் கொள்ள முடியாத அன்றைய ராஜாக்கள் பெரியாரின் மீது செருப்பை வீசினார்கள், இன்றைய ராஜாக்கள் அவரது சிலையை உடைக்க பார்க்கிறார்கள். “கண்ணாடி திருப்பினா வண்டி எப்படி ஓடும்” என்கிற திரைபட நகைச்சுவை போலத்தான் இவர்களது செயல்பாடுகளும் ‘சிலையை உடைத்தால் எப்படி சித்தாந்தத்தை சிதறடிக்க முடியும்?’ இதுகூட புரியாதவர்கள் தான் ராஜாக்கள். ராஜாக்கள் என்றுமே ராஜாக்கள் தான். அன்றும் சரி இன்றும் சரி சனாதனத்தை உயர்த்திபிடிக்கிறவர்களுக்கும், பாகுபாடுகளையும், பிறப்பால் ஏற்றத்தாழ்வை விரும்புகிறவர்களுக்கும் இந்துத்துவத்தை நிலைநிறுத்த விரும்புகிறவர்களுக்கும் பெரியார் பெரிய இடையூறாக்கத்தான் இருந்தார், இருக்கிறார்,இருப்பார்.
இந்த பதிவின் வாயிலாக ஹெச். ராஜாவிற்கு இருக்ககூடிய பெரியார் மீதான வெறுப்பை தாண்டி, ஆண்டாண்டுகால எரிச்சலை தாண்டி அவரிடம் இருக்கிற ஆற்றாமையையும், பாஜக வின் தேசிய செயலராக இருந்துகொண்டு தமிழகத்தில் பாஐகவை வளர்க்க முடியாமல் போன கையாலாகாத்தனமே அம்பலப்பட்டு நிற்கிறது.
கிட்டதட்ட இந்தியா முழுவதுமே காவிமயமான பிறகும் கூட நோட்டாவிடம் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிற நிலையிலயே தேசத்தை ஆளும் பாஐக கட்சி தமிழகத்தில் இருப்பது அதன் தேசிய செயலருக்கு நெருக்கடியை கொடுக்கத்தானே செய்யும், அது அவரை எள்ளி நகையாடத்தானே செய்யும். இதற்கெல்லாம் யார் காரணம்? இந்த தாடி கிழவர் தானே! அவரது பார்பணிய எதிர்ப்பு தானே! அவரது சமுநீதி போராட்டங்கள் தானே!
பெரியாரின் மீது அவதூறு பரப்புவதாலோ, பெரியாரின் சிலையை சேதபடுத்துவதாலோ, செருப்பு மாலை அணிவித்து, அவரது சிலையின்மீது சிறுநீர் கழித்து அவமரியாதை செய்வதாலோ பெரியாரை கொச்சைபடுத்திவிட முடியும் என்றோ அவருடைய பார்பனிய எதிர்ப்பை நீர்த்துபோக செய்திட முடியுமொன்றோ அவருடைய சமூகநீதி போராட்டங்களின் தொடர்ச்சியை துண்டித்துவிடலாம் என்றோ நினைத்தால் அது ராஜாக்களின் அறியாமையே! அதற்கான முயற்சிகள் அத்தனையுமே தோல்வியில் தான் முடியும் என்பதனை காலந்தோறும் பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். தன் மீது வீசப்பட்ட செருப்புகளையெல்லாம் சேகரித்து தனது கூட்டங்களில் விற்று அந்த பணத்தை இயக்க நிதியில் சேர்த்தவர் பெரியார். அவருக்கு எதிராக எடுக்கபடுகிற ஒவ்வொரு முயற்சியையும் மிக ஜாக்கிரதையாக எடுக்க எப்போதுமே தவறிவிடுகிறார்கள் ராஜாக்கள்.
வாழும் காலத்திலேயே பெரியார் அளவிற்கு வசைகளையும், அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்தித்த தலைவர்கள் வேறு யாரவது வரலாற்றில் இருக்கிறார்களா? அவமானங்களையும், அவதூறுகளையும் ஒரு பொருட்டாக கருதியவர் அல்ல, மாறாக “பொது தொண்டுக்கு வந்தபின், மானம் அவமானம் பார்க்க முடியாது. மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது” என்று சொன்னவர் பெரியார்.
இந்த தாடிக் கிழவர் ஏதோ வரம் வாங்கி வந்தவராகத்தான் பலநேரங்களில் நான் பார்க்கிறேன். விமர்சனங்களும், வசைகளும், அவதூறுகளும், அடையாள அழிப்புகளும் எத்தனையோ தலைவர்களின் கருத்தியல்களை காணமல் போகச் செய்திருக்கிறது. இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறாக வரலாற்றில் பெரியார் ஒருவர் மட்டும்தான் வசைகளால் வளர்ந்தார், விமர்சனங்களால் வாழ்கிறார், அடையாள அழிப்புகளால் பரவலாக அறியப்படுகிறார். பெரும்பாலும் பெரியாரிய சித்தாந்த அழிப்பு முயற்சிகள், அந்த சித்தாந்தத்தின் பரவலாக்கத்திற்கும், வளர்ச்சிக்குமே உதவியிருக்கிறது. நேற்று மாலை கூட நண்பர் ஒருவர் என்னை அழைத்து பெரியாரை தெரிந்துகொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார், வாசிக்க புத்தகங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்டார். இதற்காக ராஜாவிற்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
பெரியார் என்கிற போராளி இறந்து கிட்டதட்ட அறைநூற்றாண்டாகப் போகிறது. இன்னும் பெரியார் இந்துத்துவத்துக்கும், பார்பணியத்துக்கும், சாதியை உயர்த்தி பிடிப்பவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறார் என்றால் அதுதான் அவரது வெற்றி. ‘இது பெரியாரின் மன்' என்று சொல்லுவதை தாங்கி கொள்ளவே முடியாதவர்களின் சோதனை முயற்சிதான் இதுபோன்ற பேச்சுகளும், பதிவுகளும். அவ்வப்போது இதுபோல பேசி, எழுதி, அதை மறுத்து,நீக்கி பரிசோதித்து பார்த்துக் கொள்வார்கள் இது இன்னும் பெரியார் மன் தானா என்று. இதில் மகிழ்ச்சி என்னவென்றால் இந்த பரிசோதனை முயற்சிகளே சனாதனத்திற்கு பெரும் பின்னடைவை தந்துவிடுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பின்னால் பிரித்தாளும் சூழ்ச்சியை தொடர்கிறவர்கள் இந்துத்துவவாதிகள். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெற்றிடத்தை பயன்படுத்தி காவி சாயம் பூச முயல்கிற முயற்சியும் பிரிவினைவாதத்தால் தான்.
பெரியாரின் சிலை அவரது சிந்தனையின், சித்தாந்தத்தின் குறியீடு, அடையாளம். அதை தகர்த்துவிட்டால் பெரியாரியத்தை தகர்த்துவிடலாம் என்றும், பெரியாரை இங்கிருந்து பிரித்துவிட்டால் காவி கொடியை பறக்கவிடலாம் என்கிற அவர்களது பேராசை இங்கிருக்கிற அனைத்து கட்சிகளையும் அவர்களுக்கு எதிராக ஒன்றினைக்க முயன்றிருக்கிறது. திராவிட கழகங்கள் தொடங்கி திமுக, மதிமுக, பாமக,விசிக காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி என்று பரவலாக ஜெ.தீபா வரையிலும் காட்டமாக கண்டனம் தெரிவிக்கிற ஒரு சூழலை இங்கு உருவாக்கியிருக்கிறது. இது ஆரோக்கியமான ஒன்று. இன்றைய சூழலில் நாடு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற இந்துத்துவ ஏகதிபத்தியத்தை எதிர்க்க இந்த ஒன்றுகூடல் மிக மிக அவசியமான ஒன்றாகவே நான் கருதுகிறேன். காலத்தின் தேவையும் அதுவே!
பார்பணியத்துக்கு எதிராகவும், இந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட எதிர்ப்பு குரல்களாக நம் குரல் ஓங்கி ஒழிக்க வேண்டிய அடிப்படை தேவை இன்றிருக்கிறது. அப்படியொரு கால கட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். வேறுபாடின்றி ஒன்றுகூடல் ஒன்று சாத்தியமாவதற்கான அறிகுறி வெளிப்படையாகவே தெரிய தொடங்கியருக்கிறது. இதைபார்க்க பெரியார் இன்றிருந்திருந்தால் மகிழ்ந்துதான் போயிருப்பார், இதை சாத்தியபடுத்திய ராஜாவை பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்திருப்பார் தனது நீண்ட தாடியை வருடியபடி. அதே நேரத்தில் சில பெரியாரிஸ்ட்களின் கருத்துக்களை ரசித்திருப்பாரா என்று கேட்டால் மிக நிச்சயமாக எதிர்த்திருப்பார்,வன்முறை கக்கும் அந்த பேச்சுக்களை கண்டித்திருப்பார், கடுமையாக விமர்சித்திருப்பார். ஏனென்றால் அதுதான் பெரியார். வாழும் காலத்தில் தனது கருத்துக்கு எதிரான எல்லோரையுமே தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர், இப்போதிருந்திருந்தாலும் அதைத்தானே செய்திருப்பார்.
அறுபது வருடங்களுக்கு முன்னால் கடவுள் இல்லை என்று பெரியார் தீவிரப் பிரச்சாரம்செய்த காலம். அப்போது ம.பொ.சி. அவர்களின் எழுத்தாலும், பேச்சாலும் ஈர்க்கப்பட்ட மாலி, கடவுள் எங்கே? என்ற நாடகம் போட்டார். பெரியாரின் கருத்துக்கு எதிர்மறையான வசனங்கள்கொண்ட நாடகம் அது. ம.பொ.சி. அவர்களுடன் சேர்ந்து பெரியாரை சந்திக்கும் ஒரு வாய்ப்பு அப்போது மாலிக்கு கிடைத்தது.
“இவர் பெயர் மகாலிங்கம், குடந்தை மாலிஎன்ற பெயரில் நாடகம் போடுகிறார்”என்று பெரியாரிடம் ம.பொ.சி. அறிமுகம் செய்து வைத்தார்.
“கடவுள் எங்கே? நாடகம் போட்ட பையனா நீ” என்று கேட்டார் பெரியார்.
“ஆமாங்கய்யா, அதுல உங்க கருத்தை கடுமையா எதிர்த்து வசனம் எழுதியிருக்கேன்” என்றார் மாலி
“அதனாலென்ன? உன் கருத்த நீ சொல்ற. என் கருத்த நான் சொல்றேன். தப்பு ஒண்ணுமில்ல. மக்கள் முடிவுபண்ணிக்குவாங்க” என்று பெரியார் சொன்னார்.
இந்த நிகழ்வை பகுத்தறிவாளர்களின் கவணத்திற்கு கொண்டுவர நான் கடமைபட்டிருக்கிறேன். ஏனென்றால் இந்த சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ அத்தகைய உரிமையை தனது எதிரிக்கும் வழங்கியவர் பெரியார் என்பதனை மறந்துவிட்டு அவர்களைபோலவே நாமும் நாகரீகமில்லாமல் நடந்து கொள்ளகூடாது என்பதற்காக. முடிந்தால் அவர்கள் ஒரு நான்கைந்து சிலைகளை உடைத்து விட்டுத் தான் போகட்டுமே, என்ன வந்துவிடபோகிறது. எஞ்சியிருக்கிற அப்பாவி இந்து ஆதரவாளர்களிடம் அம்பலபட்டு நிற்கப்போகிறவர்கள் அவர்கள்தானே வலிமையிழக்க போகிறார்கள் அவர்கள்தானே. அதனால் நமக்கென்ன நஷ்டம். பதிலுக்கு பதில் அதே தொனியில் பேசுவதென்பது கலவரங்களையே வரவழைக்கும், நமக்கு பொது அமைதியே முதன்மையான ஒன்று. ராஜா போன்றவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
“ கூட்ட கூட்டமா வந்து கூட அடிங்க, நாங்க திருப்பி அடிக்க மாட்டோம்” என்று மேடைகளில் தீர்க்கமாக முழங்கியவர் பெரியார். இதை அறிந்தவர்கள் தான் பகுத்தறிவாளர்கள், ஆனாலும் பெரியாரின் மீது கொண்டிருக்கிற பக்தி உணர்ச்சிவசபட வைக்கிறது. இதுபோன்ற நேரங்களில் ஜீயர்-க்கும் பக்தாளுக்கும் நாங்கள் சற்றும் சளைத்தவர்களல்ல என்று தங்களை காட்டிக்கொள்ள பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார்கள் சில பகுத்தறிவாளர்கள். இது கண்டனத்திற்குரியது. பகுத்தறிவுக்குட்படுத்தி அவரவரே பகுத்தாய்வு செய்ய வேண்டியது. பக்தாளுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா பகுத்தறிவாளர்களே!
பெரியாரையோ! பெரியாரின் சிந்தனைகளையோ! எந்த காலகட்டத்திலும் இந்துத்துவத்தின் பெரியார் எதிர்ப்பு முயற்சிகளால் வளர்க்க முடியுமே தவிர அழிக்க முடியாது. “இல்ல பெரியார நாங்க அழிச்சே தீருவோம் அதுக்காக செருப்பு மாலை போடுவோம், சிலைமேல மூத்திரமடிப்போம், சிலைய உடைப்போம்” என்று அடம்பிடிக்கிறீர்களா? உங்களுக்காக வேண்டிமானால் நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன். சாதிய ஆதிக்கத்தையும், ஆண் ஆதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும், இதையெல்லாம் கட்டிக்காத்துக் கொண்டிருக்கிற உங்களது பார்பணிய சித்தாந்தத்தையிம், மத வெறியையும், இவற்றையெல்லாம் காவல் காக்கிற உங்களுடைய கடவுளர்களையும் நீங்களே மறந்துவிடுங்கள் அல்லது அழித்துவிடுங்கள் அப்போது பெரியாரை நீங்கள் மறக்கடித்துவிடலாம், பெரியாரின் சிந்தனைகளை நீங்கள் அழித்துவிடலாம். இதைதவிர ராஜாவிற்கும் ராஜாவை போன்றவர்களுக்கும் வேறு வழியே கிடையாது……..
நெத்தியடி
ReplyDeleteTharam ✌🙌👌👏👏
ReplyDeleteTharam ✌🙌👌👏👏
ReplyDeleteArumai ji
ReplyDelete