Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, 13 March 2019

ஏன் நாம்  பெண்களுக்கு எதிராக நிகழ்கிற அனைத்து வக்கிரங்களிலும் இவ்வாறாகவே நடந்துக் கொள்கிறோம் ?

நேற்று மாலை தங்கை அழைத்திருந்தார். சில நிமிடங்களுக்கு முன்னால் அம்மா அவரோடு பேசியதை பகிர்ந்துக் கொண்டார். தங்கை கோவையில் பணிபுரிவதால் அம்மா நேற்று மாலை தங்கையை அழைத்து “பொள்ளாச்சி நியூஸ் பாத்தியா. தேவை இல்லாம வெளிய சுத்தாத, கூட வேலை பாக்கற பசங்கள்ட ஜாக்கிரதையா பேசு, பழகு. Facebook, whatsappல யார்கிட்டையும் அநாவசியமா பேசாத. யாரையும் நம்பாத” என்றெல்லாம்  மிக நீண்ட இனி செய்யக் கூடாத விஷயங்களின் பட்டியலை தந்திருக்கிறார். ஆனால் பொள்ளாச்சியில் பெண்கள் மீது நிகழ்த்தபட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்த பின்னால் ஒருமுறை கூட என்னை அழைத்து  “நீ பெண்கள் கிட்ட பேசுவ, பழகுவ,  வெளிய நிறைய இடத்துக்கு போற.  போற இடத்துலயெல்லாம் பெண்கள் இருப்பாங்க, facebook , whatsappல உனக்கு முகம் தெரியாத பெண்களோட கூட நட்பு இருக்கும். அவங்ககிட்ட கண்ணியமா நடந்துக்கோ, மரியாதையா நடத்து, தப்பா நடந்துக்காத, அவங்க முகம் சுளிக்கிற மாதிரி, வருத்தப்படற மாதிரி, துன்பப்படற மாதரி, ஒருநாளும் நடந்துக்காத. உன் கூட பழகுற பெண்களுக்கு எப்பவும் பாதுகாப்பாக இரு.” என்று அம்மா ஒருவார்தை கூட இப்போதுவரை சொல்லவில்லை. மாறாக  என் தங்கை குறித்து கவலைக் கொள்பவராகவும் அவருக்கு அறிவுரை வழங்குவதையே வேலையாக வைத்திருப்பவராகவும் அம்மா இருக்கிற அதே நேரத்தில் வீட்டில் பெண்ணான தங்கைக்கு எந்நேரமும் நிபந்தனைக்களுக்குட்பட்டு வாழும் பயிற்சியும் ஆணான எனக்கு கட்டுக் கடங்காத சுதந்திரமும் மறைமுகமாக கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் இதே நிலைதான். இந்த நிலைதான் இந்த நாட்டில் நடக்கிற அத்தனை பாலியல் வக்கிரங்களுக்கும் காரணமாக அமைகிறது. ஆனால் அதை நாம் உணர்ந்தவர்களாக இருக்கிறோமா?
சமூக வலைதளங்களிலும், வீட்டிலும் கிடைக்கிற அனைத்து தளங்களிலும் பெண்களுக்கே புத்திமதி சொல்கிறோம். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, ஆறுதலாக நாம் இருக்க  வேண்டுமே தவிற இதுதான் சாக்கென்று பெண்களை மீண்டும் சிறைப்படுத்த கண்களுக்கு புலப்படாத புர்காவிற்குள் அடைத்து வைக்க முயல்வது எத்தனை அபத்தம். 

ஏன் நாம்  பெண்களுக்கு எதிராக நிகழ்கிற அனைத்து வக்கிரங்களிலும் இவ்வாறாகவே நடந்துக் கொள்கிறோம் ?

ஏன் நம் குடும்ப அந்தஸ்த்து, சாதி கவுரவம்,போன்ற சமூக கற்பிதங்களையெல்லாம் பெண்ணின் யோனியோடு தொடர்புபடுத்தியே வைத்திருக்கிறோம், அந்த கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் பார்க்கிறோம்? 

ஆணுக்கு அப்படி எந்த கற்புமில்லை கண்றாவியுமில்லை. அந்த துணிச்சல் தான் பெண்களின் மீது அத்துமீற சொல்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடமே போய் இதை செய்யாதே அதை செய்யாதே என்றெல்லாம் அறிவுரை சொல்வதை  கடமையாக செய்ய வைக்கிறது. 

இதை வெறுமனே பெண்கள் மீது சில ஆண்கள் நிகழ்த்திய வன்முறையாகவும், அதிமுக கட்சி பிரமுகர் ஒருவரும் அதிமுகவும் திட்டமிட்டு நிகழ்த்திய வன்கொடுமை என்கிற கோணத்தில் மட்டுமே நாம் பார்ப்போமேயானால் ஒரு கட்டத்தில் எந்த தீர்வையும் எட்டாமல் வெறும் சம்பவமாக மற்றுமொரு கோர நிகழ்வாக நினைவுகளில் தங்கி நீர்த்துபோய்விடும். மாறாக பெண்களுக்கு எதிராக பெற்றோர்களும் ஆசிரியர்களும் நாடும் வீடும் சமூக கலாச்சார கற்பிதங்களும் நிகழ்த்திய வன்முறையாகவும் கொடுமையாகவும் பொள்ளாச்சியில் நிகழ்ந்த இந்த பாலியல் வன்கொடுமையை நாம் பார்க்க வேண்டும், அணுக வேண்டும். அப்படி பார்க்கிறபட்சத்தில் உள்ளபடியே தீர்வை நோக்கி நகர்வதற்கான உரையாடலை நம்மால் நிகழ்த்த முடியும்.

#ArrestPollachiRapists

Thursday, 13 September 2018

பிறந்தார் பிள்ளையார்....

நல்லநேரம் பத்தரையிலிருந்து பன்னிரண்டரைதான் அதனால்  பெரியப்பாவுடன்  போய் பிள்ளையார் சிலை வாங்கி வர புதூருக்குச் சென்றேன். புதூர் பேருந்து நிலையத்திற்கு நூறு மீட்டர் முன்னாலிருந்து சாலையின் இருபுறத்திலும் வரிசையாக கடை விரித்திருந்தார்கள். பிள்ளையார் சிலை, வாழை மரம், பூ, பழம், சந்தன குங்குமம் என அத்தனையும் பூஜை சமாச்சாரங்கள்தான்.

வடிவமைப்பு: விஐய்
வடிவமைப்பு: விஐய்


நானும் பெரியப்பாவும் வந்த இருசக்கர வாகனத்தை ஒரமாக நிறுத்திவிட்டு நடந்தோம். நிறைய கடைகளில் நல்ல கூட்டம். ஒரே ஒருவரிடத்தில்தான் கூட்டம் சற்றுக் குறைவு. விரைந்து போகவேண்டுமென்பதால் மற்றக் கடைகளில் விலை கூட விசாரிக்காமல் நேராக அவரிடமே சென்றோம். மேஜையில் முன்னதாகவே செய்து வைத்திருந்த களிமண் பிள்ளையார் படுஜோராக ஜொலித்தார் வரிசையில் சின்னதும் பெரிதுமாக . அந்த பிள்ளையார் மேல்த்தட்டு வர்க்கத்திற்கான பிள்ளையார் போல விலை கொஞ்சம் கூடுதல், அதிகம் விற்றிருக்கவில்லை. காட்சிக்கு வைத்திருப்பது போல அப்படியே இருந்தது.  ஒரு சிறுவன் அடம்பிடித்தான் அந்த பிள்ளையாரைத் தான் வாங்க வேண்டுமென்று.  விலைக்கேற்றவாரு ஆடம்பர வேலைப்பாடுகளுடன் நின்றுக்கொண்டிருக்கும் பிள்ளையாரை யாருக்கு தான் பிடிக்காது.   அவன் பேச்சை சட்டைசெய்யாமல் கீழிலிருந்த அடித்தட்டு வர்க்க பிள்ளையாரையே அவன் தந்தை வாங்கினார் மனசொடிந்து மேல்தட்டு பிள்ளையாரை பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது அவன் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டான் . நாங்கள் எங்களுக்கும் ஒரு பிள்ளையார் கேட்டோம். அதிக வேலைப்பாடுகளில்லாத அடித்தட்டு  பிள்ளையார்தான். நாங்கள் கேட்டபோது முன்னதாக செய்துவைத்திருந்த பிள்ளையார் யார் யார் வீடுகளுக்கோ போய்விட்டாதால். பின்னால் குவித்து வைத்திருந்த களிமண் குவியலிலிருந்து இரண்டு கை அகலத்திற்கு களிமண்னைக் குழைத்தெடுத்தார். அதிகமாகவோ குறைவாகவோ கொழ கொழவென்று இல்லாத ஒரு பதத்தில் இருந்தது களிமண். அந்த களிமண்னை உருட்டி ஒரு உருண்டையாக்கிக் கொண்டிருந்தபோது ஒரு பிராமணர்  அங்கு வந்தார், அவரும் எங்களைப்போல அடித்தட்டு பிள்ளையாரையே  கேட்டார். கரைக்கபோற பிள்ளையாருக்கு அவ்ளோ காசு குடுக்கனுமா என்று நினைத்தாரோ இல்லை அவரும் எங்களைபோல அடித்தட்டில் திண்டாடுபவரோ தெரியவில்லை அவருக்கும் நாங்கள் வாங்கிய பிள்ளையார்தான் தேவைப்பட்டது, அதையே அவர் கேட்டதும்  அவருக்கும் சேர்த்து களிமண் எடுத்து லாவகமாக அதை உருட்டி, சிலை செய்யும் அச்சை எடுத்து வைத்து அச்சின் உள்புறம் எண்ணெய் தேய்த்து

“ தள்ளி போங்க, தள்ளி போங்க எல்லாரும் தள்ளி போங்க” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார். எதற்கு என்று பெரியப்பாவிடம் கேட்டேன் “ களி மண்ண ஓங்கி அச்சில அடிப்பாங்க அச்சுல தேய்ச்ச எண்ணெய் மேல தெறிச்சிடும் அதனால தள்ளிபோவ சொல்றாரு” என்றார். நாங்கள் எல்லோரும் தள்ளி நின்றோம்.  தன்னால் எவ்வளவு உயரம் கையை உயர்த்த முடியுமோ உயர்த்தி மிகச் சரியாக வலுக்கொண்டவரை அச்சில் களி மண்ணை  ஓங்கி ஒரு அடி அடித்தார். அச்சின் இன்டு இடுக்கிலெல்லாம் களிமண் போய் அழகாக உட்கார்ந்துக் கொண்டது. நுட்பமாக இரண்டு விரல்களால் களிமண்ணை அழுத்தி அழுத்தி சிலையை திடமாக்கிக் கொண்டிருந்தார். அச்சைத் தாண்டி பிதுங்கிக் கொண்டு நிற்கிற மண்னை தகடு போன்ற ஒரு பொருளால் வழித்தெடுத்த பின்னால் அவர் தொடையில் ஒரு அட்டையை வைத்து அச்சைக் கவிழ்த்தார். எண்ணெய் பள பளப்பில் மின்னிக் கொண்டு அவர் தொடையில் பிறந்தார் பிள்ளையார். புதிதாக பிறந்த பிள்ளையாரை அவர் தன் மனைவியிடம் கொடுத்துவிட்டு அடுத்த பிள்ளையாரை  செய்யத் தொடங்கினார். அவரது மனைவி இரண்டு  குண்டுமணிகளை எடுத்துக் கண்களாக வைத்து பிள்ளையாருக்கு பார்வை கொடுத்தார். தங்க நிற பெயிண்டில் பிரஷ்ஷை லேசாக நனைத்து  ஒரு சில இடங்களில் முலாம் பூசினார். எங்களுக்கு தயார் செய்ததை போலவே அந்த பிராமணருக்கும் அதே  நேர்த்தியில் அதேபோன்ற  பிள்ளையாரைத் தயார் செய்தார். காசை வாங்கி  ஒரு தகரப் பெட்டியல் வைத்து பூட்டினார். பிறகு புதிதாக பிறந்த பிள்ளையாரை  ஏந்தித் தந்தார்  அந்த பிள்ளையாரை பெரியப்பா பெற்றுக் கொண்டார். அவரும்  ஒரு கைக் குழந்தையை போலவே களிமண் பிள்ளையாரை ஏந்தி நின்றார். வாய்க்குள் ஏதோ ஸ்லோகம் கூட முனகினார்.


நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம். நான் மட்டும் திரும்பிப் பார்த்தேன் நான் திரும்பியபோது  அந்த பிராமணருக்கான பிள்ளையாரில் அந்த பெண் ஏதோ வித்தியாசமாக ஒன்றை செய்துக் கொண்டிருந்தார். நான் திரும்பி அருகில் சென்று பார்த்தேன் வெள்ளை நிற பெயிண்டில்  பிள்ளையாரின் குறுக்கே ஒரு கோடு வரைந்தார். இல்லை இல்லை  அவர் பூணூல் அணிவித்தார் என்றும்  சொல்லலாம். நம்ம பிள்ளையார் பூணூல் போட்டிருக்காரா? திடீரென்று மனதிற்குள் ஒரு கேள்வி வேகமாக நடந்துப்போய் “பெரியப்பா பிள்ளையார காட்டுங்க” என்றேன். உறங்கும் குழுந்தையின் முகத்தை ஒருவருக்குக் காட்டுவது போல அவர் அந்த களிமண் பிள்ளையாரை என்னிடம் காட்டினார். பார்த்தேன், பெரியப்பா கைகளில் ஏந்தியிருப்பது ஒரு சூத்திரப் பிள்ளையார்.

Monday, 16 July 2018

புதுசா யாராவது வரனும்

சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் நடந்த உரையாடல்

" எல்லா வக்காளவோளிங்களும் திருட்டு கம்முனாட்டிங்க. இனிமே இவனுங்க யாருக்கும் ஓட்டு போட கூடாது" ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தியை பார்த்துக் கொண்டிருந்தபோது ஆவேசமாய் அம்மா பேசியதாக நினைவு.

"சரி வேற யாருக்கு ஓட்டு போடுறது"

" புதுசாதான் யாராவது வரணும் இவனுங்களுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி"

"அதான் யாரு? எங்கிருந்து வரணும்"

"யாராவதுதான். படிச்சவங்க இளைஞர்கள்"

" சரி அப்ப நான் போகட்டா அரசியலுக்கு"

"....."

நீண்ட மவுனம்

"சொல்லும்மா"

"அது எப்படி. போராட்டம் கீராட்டம் அரசியல் அது இதுன்னு நீ போயிட்டா யாரு குடும்பத்த பாக்குறது, நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு வாங்கணும், தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுக்குணும், உனக்கு கல்யாணம் பண்ணும்....."

"போதும்..... போதும்....." நான் நிறுத்தினேன் ஏனெனில் நீண்டதொரு பட்டியல் அது. மனப்பாடமாக இருக்கிறது.

"...."

"நாங்க போராடக் கூடாது. நல்லவன்தான் அரசியலுக்கு வரணும், அதுவும் படிச்ச இளைஞராதான் வரணும் அப்படி வரவனும் நம்ம வீட்ல இருந்து போக கூடாது. இதுக்குன்னு எவனையாவது எவன் வூட்லயாவது  நேந்து உட்ருப்பானுங்க அவன் வந்துதான் இதெல்லாம் செய்யனும் அப்படித்தானே"

"சும்மா எதுக்கெடுத்தாலும் விதன்டா வாதமா பேசிக்கிட்டு" என திட்டிக்கொண்டே எழுந்துச் சென்றார். பதில் ஏதும் இல்லை, ஒருநாளும் இதுபோன்றவர்களிடம் பதில் இருக்கபோவதுமில்லை. கேள்வி மட்டும்தான், அடுக்கடுக்கான பல கேள்விகள்.

உள்ளபடியே இதுபோன்ற பெற்றோர்கள்தான் இந்த சமூகத்துக்கு கேடு. Careerதான் முக்கியம், காசு பணம் நகை நட்டு சம்பாதிக்கனும் என்று சதா சிந்தித்து பிள்ளைகளையும் சிந்திக்கத் தூண்டுகிற இவர்களே நோய். ஒரு தலைமுறையே மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தாய் தகப்பன் என்றெல்லாம் புனிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த தலைமுறை இப்படி இருப்பதற்கு பெற்றோர்களே காரணம். நாளைய தலைமுறையும் இதுபோலவே இருப்பதற்கு நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது.

பிரபஞ்சன் சொல்கிறார் "சுதந்திரம் போராடுகிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்"

Saturday, 12 May 2018

அன்னையர் தினம் பொய், சூழ்ச்சி, புரட்டு.......


"தாய்மை என்பது பெண்ணை அடிமையாக்க, ஆண் கண்டுபிடித்த ஒரு ஏமாற்றுச் சொல். தாய்மை என்ற ஒரு சொல்லாடலே ஒரு பித்தலாட்டம், ஒரு மோசடி. பெண்கள் அதற்கு ஒருபோதும் அடிமையாகிவிடக்கூடாது" என்று அன்றே சொன்னார் பெரியார். அவர் அவர் சொன்னதை இன்று பொருத்திப் பார்த்துச் சிந்தித்தால் எவ்வளவு பொருந்திப் போகிறது.
பொழுதுக்கும் ஆக்கிப் போட்டு, துணித் துவைத்து, பணிவிடை செய்து நான்கு சுவற்றுக்குள் தானே அவளது உலகத்தை நாம் சுருக்கி வைத்திருக்கிறோம்.நாள் முழுக்க தாயவள் அடுமனையில் தானே முடங்கிக் கிடக்கிறாள் அல்லது கிடத்தப்படுகிறாள்.
இந்த அன்னையர் தின கொண்டாட்டமெல்லாம் வெற்று நாடகம், மேலும் பெண்களை
வீட்டிற்கு வெளியே வரவிடாமல் அவர்களது  சிந்தனைகளைச் சதா குடும்பத்தை சுற்றியே சுழல வைக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் சூழ்ச்சி, பொய், புரட்டு. "இல்லை இல்லை இப்போதெல்லாம் பெண்கள் வெளியே வந்துவிட்டார்கள் வேலைக்கு போகிறார்கள்" என்று மல்லுகட்டுவீர்கள் என்றால் நான் கேட்கிறேன் உங்கள் வீட்டில் யார் சமையல் செய்கிறார், யார் துணி துவைக்கிறார், யார் எச்சில் பாத்திரம் கழுவுகிறார். மிக நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் அது ஒரு பெண்,அவள் ஒரு தாய்.
"இல்லை இல்லை எங்க வீட்ல சமையல்காரி இருக்கா, பாத்திரம் கழுவ, துணி துவைக்க வேலைகாரி வருவா" என்று சமாளித்தால் இப்போதும் கேட்கிறேன் அவள் யார்? அவளும் தன் பிள்ளைக்களுக்காகத் தன் பிள்ளைகளின் வாழ்க்கைக்காகத் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தன்னுடைய நிகழ்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு தாய் தானே! அப்படியிருக்க எதற்கிந்த போலியான கொண்டாட்டம், எதற்கிந்த பித்தலாட்டம்.........

Sunday, 6 May 2018

கற்பி ஒன்றுசேர் கிளர்ச்சி செய்

நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்ற மாணவனின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தச் செய்தி பொதுவெளியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அது கொடுத்த தாக்கத்தை சாமானியர்களின் பேச்சில் இயல்பாகவே காண முடிந்தது. நேற்று திருச்சியில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். இந்த மரணம் குறித்து மிகவும் வருந்தினார், புலம்பினார். 

"சரி இதுக்கெல்லாம் உங்களால என்ன பண்ண முடியும்ன்னு நீங்க நினைக்குறீங்க" என்று புலம்பிக்கொண்டிருந்த நண்பரிடம் நான் கேட்டேன். 

அவர் சொன்னார் " அடுத்த முறை ஓட்டு போடும்போது சரியான ஆளான்னு பாத்து ஓட்டு போடுவேன்" 

"சரியான ஆளுக்கு ஓட்டு போடறதால இதெல்லாம் சரியாகிடுமா? உங்களோட ஒரு ஓட்டு இங்க எல்லாத்தையும் மாத்திடுமா?" 

அவர் அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை, தான் சொன்னதையே  தீர்வாக அவர் நம்புவதாக தெரிந்தது. 

நான் மேலும் தொடர்ந்தேன்
" இங்க மக்கள  educate பண்ணாம எதுவும் மாறாது, நாம போடுற ஓட்டு இங்க ஒருமாற்றத்தையும் கொண்டுவராது. மொதல்ல இங்க மக்களுக்கு கற்பிக்குணும், மக்கள ஒண்ணு சேர்க்கணும் இதை செய்யாம கிளர்ச்சி செய்யமுடியாது, கிளர்ச்சி செய்யாம எந்த மாற்றத்தையும் இங்க கொண்டுவர முடியாது"

இதை நான் சொல்லவில்லை அம்பேத்கார் அன்றே சொன்னார் "கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய்"

ஆம், கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சி செய்.

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...