Thursday, 13 September 2018

பிறந்தார் பிள்ளையார்....

நல்லநேரம் பத்தரையிலிருந்து பன்னிரண்டரைதான் அதனால்  பெரியப்பாவுடன்  போய் பிள்ளையார் சிலை வாங்கி வர புதூருக்குச் சென்றேன். புதூர் பேருந்து நிலையத்திற்கு நூறு மீட்டர் முன்னாலிருந்து சாலையின் இருபுறத்திலும் வரிசையாக கடை விரித்திருந்தார்கள். பிள்ளையார் சிலை, வாழை மரம், பூ, பழம், சந்தன குங்குமம் என அத்தனையும் பூஜை சமாச்சாரங்கள்தான்.

வடிவமைப்பு: விஐய்
வடிவமைப்பு: விஐய்


நானும் பெரியப்பாவும் வந்த இருசக்கர வாகனத்தை ஒரமாக நிறுத்திவிட்டு நடந்தோம். நிறைய கடைகளில் நல்ல கூட்டம். ஒரே ஒருவரிடத்தில்தான் கூட்டம் சற்றுக் குறைவு. விரைந்து போகவேண்டுமென்பதால் மற்றக் கடைகளில் விலை கூட விசாரிக்காமல் நேராக அவரிடமே சென்றோம். மேஜையில் முன்னதாகவே செய்து வைத்திருந்த களிமண் பிள்ளையார் படுஜோராக ஜொலித்தார் வரிசையில் சின்னதும் பெரிதுமாக . அந்த பிள்ளையார் மேல்த்தட்டு வர்க்கத்திற்கான பிள்ளையார் போல விலை கொஞ்சம் கூடுதல், அதிகம் விற்றிருக்கவில்லை. காட்சிக்கு வைத்திருப்பது போல அப்படியே இருந்தது.  ஒரு சிறுவன் அடம்பிடித்தான் அந்த பிள்ளையாரைத் தான் வாங்க வேண்டுமென்று.  விலைக்கேற்றவாரு ஆடம்பர வேலைப்பாடுகளுடன் நின்றுக்கொண்டிருக்கும் பிள்ளையாரை யாருக்கு தான் பிடிக்காது.   அவன் பேச்சை சட்டைசெய்யாமல் கீழிலிருந்த அடித்தட்டு வர்க்க பிள்ளையாரையே அவன் தந்தை வாங்கினார் மனசொடிந்து மேல்தட்டு பிள்ளையாரை பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது அவன் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டான் . நாங்கள் எங்களுக்கும் ஒரு பிள்ளையார் கேட்டோம். அதிக வேலைப்பாடுகளில்லாத அடித்தட்டு  பிள்ளையார்தான். நாங்கள் கேட்டபோது முன்னதாக செய்துவைத்திருந்த பிள்ளையார் யார் யார் வீடுகளுக்கோ போய்விட்டாதால். பின்னால் குவித்து வைத்திருந்த களிமண் குவியலிலிருந்து இரண்டு கை அகலத்திற்கு களிமண்னைக் குழைத்தெடுத்தார். அதிகமாகவோ குறைவாகவோ கொழ கொழவென்று இல்லாத ஒரு பதத்தில் இருந்தது களிமண். அந்த களிமண்னை உருட்டி ஒரு உருண்டையாக்கிக் கொண்டிருந்தபோது ஒரு பிராமணர்  அங்கு வந்தார், அவரும் எங்களைப்போல அடித்தட்டு பிள்ளையாரையே  கேட்டார். கரைக்கபோற பிள்ளையாருக்கு அவ்ளோ காசு குடுக்கனுமா என்று நினைத்தாரோ இல்லை அவரும் எங்களைபோல அடித்தட்டில் திண்டாடுபவரோ தெரியவில்லை அவருக்கும் நாங்கள் வாங்கிய பிள்ளையார்தான் தேவைப்பட்டது, அதையே அவர் கேட்டதும்  அவருக்கும் சேர்த்து களிமண் எடுத்து லாவகமாக அதை உருட்டி, சிலை செய்யும் அச்சை எடுத்து வைத்து அச்சின் உள்புறம் எண்ணெய் தேய்த்து

“ தள்ளி போங்க, தள்ளி போங்க எல்லாரும் தள்ளி போங்க” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார். எதற்கு என்று பெரியப்பாவிடம் கேட்டேன் “ களி மண்ண ஓங்கி அச்சில அடிப்பாங்க அச்சுல தேய்ச்ச எண்ணெய் மேல தெறிச்சிடும் அதனால தள்ளிபோவ சொல்றாரு” என்றார். நாங்கள் எல்லோரும் தள்ளி நின்றோம்.  தன்னால் எவ்வளவு உயரம் கையை உயர்த்த முடியுமோ உயர்த்தி மிகச் சரியாக வலுக்கொண்டவரை அச்சில் களி மண்ணை  ஓங்கி ஒரு அடி அடித்தார். அச்சின் இன்டு இடுக்கிலெல்லாம் களிமண் போய் அழகாக உட்கார்ந்துக் கொண்டது. நுட்பமாக இரண்டு விரல்களால் களிமண்ணை அழுத்தி அழுத்தி சிலையை திடமாக்கிக் கொண்டிருந்தார். அச்சைத் தாண்டி பிதுங்கிக் கொண்டு நிற்கிற மண்னை தகடு போன்ற ஒரு பொருளால் வழித்தெடுத்த பின்னால் அவர் தொடையில் ஒரு அட்டையை வைத்து அச்சைக் கவிழ்த்தார். எண்ணெய் பள பளப்பில் மின்னிக் கொண்டு அவர் தொடையில் பிறந்தார் பிள்ளையார். புதிதாக பிறந்த பிள்ளையாரை அவர் தன் மனைவியிடம் கொடுத்துவிட்டு அடுத்த பிள்ளையாரை  செய்யத் தொடங்கினார். அவரது மனைவி இரண்டு  குண்டுமணிகளை எடுத்துக் கண்களாக வைத்து பிள்ளையாருக்கு பார்வை கொடுத்தார். தங்க நிற பெயிண்டில் பிரஷ்ஷை லேசாக நனைத்து  ஒரு சில இடங்களில் முலாம் பூசினார். எங்களுக்கு தயார் செய்ததை போலவே அந்த பிராமணருக்கும் அதே  நேர்த்தியில் அதேபோன்ற  பிள்ளையாரைத் தயார் செய்தார். காசை வாங்கி  ஒரு தகரப் பெட்டியல் வைத்து பூட்டினார். பிறகு புதிதாக பிறந்த பிள்ளையாரை  ஏந்தித் தந்தார்  அந்த பிள்ளையாரை பெரியப்பா பெற்றுக் கொண்டார். அவரும்  ஒரு கைக் குழந்தையை போலவே களிமண் பிள்ளையாரை ஏந்தி நின்றார். வாய்க்குள் ஏதோ ஸ்லோகம் கூட முனகினார்.


நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம். நான் மட்டும் திரும்பிப் பார்த்தேன் நான் திரும்பியபோது  அந்த பிராமணருக்கான பிள்ளையாரில் அந்த பெண் ஏதோ வித்தியாசமாக ஒன்றை செய்துக் கொண்டிருந்தார். நான் திரும்பி அருகில் சென்று பார்த்தேன் வெள்ளை நிற பெயிண்டில்  பிள்ளையாரின் குறுக்கே ஒரு கோடு வரைந்தார். இல்லை இல்லை  அவர் பூணூல் அணிவித்தார் என்றும்  சொல்லலாம். நம்ம பிள்ளையார் பூணூல் போட்டிருக்காரா? திடீரென்று மனதிற்குள் ஒரு கேள்வி வேகமாக நடந்துப்போய் “பெரியப்பா பிள்ளையார காட்டுங்க” என்றேன். உறங்கும் குழுந்தையின் முகத்தை ஒருவருக்குக் காட்டுவது போல அவர் அந்த களிமண் பிள்ளையாரை என்னிடம் காட்டினார். பார்த்தேன், பெரியப்பா கைகளில் ஏந்தியிருப்பது ஒரு சூத்திரப் பிள்ளையார்.

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...