Friday, 16 March 2018

ஒற்றைத் தன்மை ஆட்சிக்கு எதிரான கூட்டாட்சி சாத்தியபடுவதற்கான சமிக்ஞையா நம்பிக்கையில்லா தீர்மானம்?


கூட்டணியிலிருந்து விலகியதோடு பாஐக ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரவிருக்கிறது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். இந்த முடிவும், தீர்மானமும் வரவேற்கத்தக்கது. எதிர்ப்பதற்கு ஆளில்லை என்று எஞ்சியுள்ள கூட்டாட்சி தத்துவத்தையும் கொஞ்ச கொஞ்சமாக குழி தோண்டி புதைத்துக்கொண்டிருக்கும் காவிக் கும்பலை எதிர்ப்பதற்கு மாநில கட்சிகளுக்கு வலு இருக்கிறது என்று ஆணி அடித்தார்போல் சொல்லியிருக்கிறது இந்த முடிவு.

எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல்? 

ஒய்.எஸ்.ஆரின் கூட்டணி விலகளுக்கும், நம்பிக்கையில்லா தீர்மான அழைப்பிற்குமான துணிச்சல் எங்கிருந்து வந்தது. யார் தந்தது? அதற்கு இருவேறு காரணங்கள் இருக்கிறது. ஒன்று ‘ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்த்து' கிடைக்காமல் போனதும், வரவிருக்கிற சட்டமன்ற தேர்தல் கணக்கும்.

மற்றொன்று உத்திர பிரதேச இடைதேர்தலில் பாஐக அடைந்த படுதோல்வியில்  பெற்ற  புரிதலும், எதிர்கால அவதானிப்பும்.  ஒன்று   அவர்களது மாநில உரிமை. அது கிடைக்காத பட்சத்தில் ஆளும் கூட்டணியை உதறி தள்ளி வெளியே வந்திருக்கிறார்கள், எதிர்கிறார்கள். இதில் தவறில்லை ஆனால் மற்றொரு புரிதலில் தவறிருக்கிறது, முற்றிலும் பிழையிருக்கிறது.

பகுஐன் சமாஜூம், சமாஜ்வாதியும் உத்திர பிரதேசத்தில் பாஐகவை இடைத்தேர்தலில். வீழ்த்தி ஒரு வழியை காட்டியிருக்கிறார்கள் தான், மறுப்பதற்கில்லை. அதற்காக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக பல மாநிலங்களில் பாஐக ஆட்சியை பிடித்திருக்கிறது, சொல்லி வைத்தார் போல் இடைத்தேர்தலிலெல்லாம் தோல்வியையே சந்திக்கிறது இதுதான்  சந்தேகத்திற்கு இடமாகிறது, இந்த நேர்த்திதான் கேள்விக்குட்படுத்த வேண்டியதாகிறது.  உள்ளபடியே பாஐக வின் தேர்தல் வெற்றிகளை சந்தேகிப்பதை போல அவர்களது தேர்தல் தோல்விகளையும் நாம் சந்தேகிக்கவே வேண்டும். ஆனால் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இப்படியேபோனால் எதிர்காலத்தில் “உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா” என்று பாஐக தனது தரப்பை இதைவைத்தே நியாயம் செய்யும்.

ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமா?

பாஐக விற்கு எதிரான  நம்பிக்கையில்லா தீர்மானம் பயனளிக்குமா? பாஐக ஆட்சியை கவிழ்க்குமா? என்று கேட்டால் அதற்கு வாய்ப்பேயில்லை. மாறாக இந்த தீர்மானம் ஒன்றை செய்யும், அது இந்துத்துவ அடித்தளத்தை அசைத்து பார்க்கும்,அதன் சூத்திரதாரிகளுக்கு பெரும் அச்சத்தையை ஏற்படுத்தும். அந்த அளவில் இந்த தீர்மானம் அடையபோவது  வெற்றியே! அசுர பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஐனதா கட்சியை எப்படி அதிகாரத்திலிருந்து நகர்த்த இயலும் என்கிற பார்வையில் சிந்தித்தால் இந்த தீர்மானம் அடையபோவது என்னவோ தோல்விதான் அது அவர்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும் பிறகெப்படி வெற்றியாக இதனை பார்க்க முடியும் என்று கேட்டால்  அதன் நோக்கத்தை வைத்து சொல்லலாம்.

இந்த தீர்மானத்தின் நோக்கம்  பாஐக எதிர்ப்பு குரல்களை இனங்காணவும், அதன் எண்ணிக்கையை மதிப்பிடவும் அந்த எதிர்ப்பு குரல்களை  ஒன்றினைப்பதற்கும் ஒருங்கினைப்பதற்கும் எளிதான ஒரு வழியை அது எற்படுத்திக் கொடுப்பதற்காகவும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மலராமல் கூட்டாச்சியை மலரச் செய்வதுமே. அதனடிப்படையில் பார்த்தால் இந்த தீர்மானம் அடையப்போவது வெற்றிதான். வரலாற்றில் இது ஒரு  மாபெரும் வெற்றிதான்.

கூட்டாட்சி மலர்வது சாத்தியமா? 

‘ஒரு நாடு.. ஒரே வரி’, ‘ஒரு நாடு.. ஒரே தேர்தல்’, ‘ஒரு நாடு.. ஒரே மொழி’, ‘ஒரு நாடு.. ஒரே மதம்’, ‘ஒரு நாடு.. ஒரே கலாச்சாரம்’, ‘ஒரு நாடு.. ஒரே உணவு’ இதுவா கூட்டாட்சித் தத்துவம்? இந்தியா என்பது பல்வேறு அடையாளங்களைக் கொண்ட நாடு. இவையெல்லாம் இங்கு சாத்தியமா? சாத்தியம். பாஐக தொடர்ந்து அதிகார பீடத்தில் அசுர பலத்தோடு இருக்கிற வரையில் இது சாத்தியம். அந்த அசுர பலத்தை வீழ்த்துவதற்கும் அதிகாரத்திலிருந்து அவர்களை அகற்றுவதற்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு பகீரங்க அறிவிப்பை விடுத்தார்  மம்தா பானர்ஜி. “நாட்டை காக்க அவசியம் என்றால் மார்க்ஸிட்களோடு இனைந்து வேலை செய்யவும் தயார்” என்று அவர் சொன்னதோடு மட்டும் நின்றுவிடாமல் மூன்றாம் அணி உருவாக்கத்திற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுக்கிறார். பாஐக வுக்கு எதிரான மூன்றாம் அணி உருவாக்கத்திற்கு ஒலிக்கும் குரல்களில் மம்தாவினுடைய குரல் பிரதானமானது.

உ.பி தேர்தலில் சமாஜ்வாதியும், பகுஐன் சமாஜூம் சேர்ந்து  எதிர்த்து இடைதேர்தலில் பாஐக வை வீழ்த்தியிதோடல்லாமல் புதிய நம்பிக்கையையும், வழியையும் தந்திருக்கிறார்கள். பாஐக கூட்டனியிலிருந்து விலகிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  ஆளும் கூட்ணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறது. கர்நாடக மாநிலமோ தனியாக தங்கள் மாநிலத்திற்கென்று கொடி ஒன்றை வெளியிட்டு வேறொரு போக்கை கடைபிடிக்கிறது,சித்தராமையாவும், இந்திய காங்கிரஸூம் எதிரணியாகவே எப்போதும் பாஐக விற்கு இருப்பார்கள் அதில் என்றுமே சந்தேகம் இருக்கபோவதில்லை. கேரளத்தில் பார்த்தோமேயானால் கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸூமே பெரும்பான்மை, அப்படியிருக்க இருவரும் பாஐக பக்கம் தலைசாய்ப்பது  சாத்தியமேயில்லை. தமிழகத்தை பொருத்தமட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக- திமுக மற்றும் எஞ்சியிருக்கிற அனைத்து கட்சிகளும் வேறுபாடின்றி ஒன்று கூடியிருக்கிறது. இதில் அதிமுக பாஐகவை வரும்தேர்தலில் எதிர்க்காமல் போனாலும் கூட திமுகவும் மற்ற எதிர்கட்சிகளும் எதிர்த்தாலே போதும் ஒரு கணிசமான எதிர்ப்பு குரல் பாரதிய ஐனதா கட்சியின் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் ஒலிக்கும். இவற்றை ஒன்றினைத்து ஒருங்கிணைத்தால் பாஐகவை எதிர்ப்பதற்கான ஒரு வலுவான சக்தி இங்கு உருவாகும். இதில் காங்கிரஸ் நீங்கலாக மற்ற மாநில கட்சிகள் இனைந்தாலே போதும், மாநில அளவிலான வலுவான பல கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு காங்கிரஸ் நீங்கலாக மூன்றாம் அணி ஒன்று உருவாகும், அங்கு ஒரே இடத்தில் குவிக்கபடும் அதிகாரம் தவிர்க்கபட்டு அதிகாரம் அனைத்து மாநிலங்களுக்கும் பரவலாக்கப்படும். சுதந்திரத்திற்கு பின்னால் சாத்தியபடாத மாநில சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் சாத்தியப்படும். உண்மை கூட்டாட்சியாகவே அது மலரும்.

வராலாற்று உதாரணம்

இன்று பாரதிய ஐனதா கட்சி பெற்றிருக்கிற பெரும்பான்மை பலத்தை போல இந்திய தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்த பின்னால் மத்தியில் அட்சியிலிருந்த காங்கிரஸூம் பெரும் பலத்துடனேயே ஆட்சியிலிருந்தது, தமிழகம் உட்பட பெரும்பான்மை மாநிலங்களில்  காங்கிரஸே ஆட்சியில் நீடித்தது சுதந்திரமடைந்த பின்னும். நாளுக்கு நாள் அடக்குமுறையை கட்டவிழ்த்தும், அதிகாரத்தை பரவலாக்காமல் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்தியில் குவிக்க முயற்சித்தும் மாநில சுயாட்சிக்கு ஊறு விழைவித்துக் கொண்டேயிருந்த காங்கிரஸை வீழ்த்த துணிந்தார் அண்ணா, காங்கிரஸை அதிகார பீடத்திலிருந்து தூக்கி வீச முயற்சித்தவர் வகுத்த ஒரு சூத்திரம்தான்“ காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் யாரும் எங்களோடு வரலாம், அவர்கள் எங்களோடு உடன்பட்ட கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம், எதிர் கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம்” என்பது. 


காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்கிற அண்ணாவின் கோரிக்கையை ஏற்று திராவிட தேசியம் பேசிய அண்ணாவுடன் தமிழ்தேசியம் பேசிய மா.பொ.சி இனைந்தார், நாம் தமிழர் இயக்க தலைவர் சி.ப.ஆதித்தனாரும் இனைந்தார். இனவாத கொள்கைகளுக்கு எதிரான கம்யூனிஸ்ட் கட்சியும், கம்யூனிஸத்தை வெறுத்து ஒதுக்கிய ராஜாஜியின் சுதந்திரா காங்கிரஸூம், வகுப்புவாத பிரிவினைவாதத்தை எதிர்த்த முஸ்லீம் லீகும் இணைந்தது. இவ்வாறு அண்ணா வகுத்த சூத்திரம் காங்கிரஸை வீழ்த்த ஒரு மாபெரும் கூட்டனியை உருவாக்கி காங்கிரஸை ஆட்சியிலிருந்தே அகற்றியது. அன்றிலிருந்து இன்றுவரை காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சியே அமைக்க முடியவில்லை, கூட்டனியில் மட்டுமே பங்குபெற முடிகிறது.

தமிழகத்தின் ஆட்சி அதிகார வரலாற்றிலிருந்து காங்கிரஸ் காணாமல்போனது போலே இந்திய ஆட்சி அதிகார வரலாற்றிலிருந்து பாஐக காணாமல் போவதற்கான காலம் கைகூடியிருக்கிறது. மீண்டும் பாஐக ஏன் காங்கிரஸே கூட ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்பில்லாமல் செய்வதற்கான மூன்றாம் அணி உருவாவதற்கும், இதுவரையில் சாத்தியப்படாத மாநில கட்சிகளின் மாபெரும் கூட்டணி ஒன்று உருவாவதற்கான நம்பிக்கையான சமிக்ஞை தெரிகிறது. பாரதிய ஐனதா கட்சிக்கு எதிரான நிலைபாடுகொண்ட  அனைத்து மாநில கட்சிகளும் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது காங்கிரஸை வீழ்த்த அண்ணா வகுத்துக்கொடுத்த சூத்திரத்தை பின்பற்றுவது.

பாஐகவை வீழ்த்த நமக்கிருக்கிற ஒரே வழி மாநிலகளுக்கிடையே ஆண்டான்டுகாலமாக இருந்து வரும் வெறுப்பையும், பிரிவினைகளையும், கருத்து வேறுபாடுகளையும் கொஞ்ச காலம் ஓரங்கட்டிவிட்டு ஒரு கூடாரத்தின் கீழ் இணைந்து ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து பாஐகவுக்கு எதிரான ஒவ்வொரு வாக்குகளையும் மாநிலங்கள் முழுவதும் சிந்தாமல் சிதறாமல் சேகரிப்பதுதான். அதுவே  ‘ஒரு நாடு, ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே உணவு’ என்று சர்வாதிகாரபோக்கில் பயணிக்கும் பாஐகவிற்கு முடிவுரை எழுத வழிவகுக்கும்


No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...