(1.)
திடீரென்று மார்பிற்கு மத்தியில் ஒரு வித வலி இதுவரையில் நான் உணராத வகையில். எங்கிருந்து வந்ததென்று தெரியாது. மாலை ஆறரையிருக்கும் கேசவன் அழைத்தான். சார்ஜில் வைத்திருந்த அலைபேசியை எடுக்க நடந்தபோதுதான், மார்பில் அந்த வலி உண்டானது.
வலி என்றால் மிகச் சரியாக மார்பிற்கு மத்தியில் வலிக்கும், மூச்சு முட்டும், சிரமப்பட்டு பெருமூச்சாகத் தான் விடவேண்டி வரும், குனிந்து நிமிர இயலாது, வலப் பக்கமோ இடபக்கமோ திரும்பினால் வலி உடலை பிய்த்து திங்கும்.
அந்த வலி ஏற்பட்டபோது கிட்டதட்ட நான் நிலைகுலைந்து போனேன். எங்கே கீழே விழுந்துவிடுவேனோ என பயந்து அருகில் கிடந்த நாற்காலியை பற்றி தடுமாறி அமர்ந்துகொண்டேன். சற்று சிரமபட்டு காற்றை இழுத்து பெருமூச்சாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். அப்போது கேசவன் அழைப்பை துண்டித்திருந்தான்.
வலி இன்னும் அதிகமாகிறது, முகம் வாடி கலவரபடுகிறது, என் கண்களில் ஒளியில்லை, இருதயம் அதிவேகமாக துடிக்கிறது, அந்த துடிப்பு முதன்முறையாக என்னை இம்சிக்கிறது, என் இரு கைகளை கொண்டு அழுத்தி அதன் வேகத்தை மட்டுபடுத்திவிட முடியுமா? முயன்று பார்க்கிறேன், பிரயோஜினமில்லை. நான் அப்படியே மார்பை பிடித்துக் கொண்டு அமர்ந்தேயிருந்தேன்.
விசித்திரமாக ஏதோ இவன் செய்கிறான் என பார்த்துக் கொண்டிருந்த ஹரி கேட்டார்
“ என்ன ஆச்சு தலைவரே ஒரு மாதிரி இருக்கிங்க”
“ என்ன ஆச்சு தலைவரே ஒரு மாதிரி இருக்கிங்க”
ஒன்றுமில்லை என்பதுபோல பொய்யாக சிரித்து அவரை அப்போதைக்கு சமாளித்தேன், ஆனால் உள்ளுக்குள் உடலை, உயிரை அந்த வலி ஏதோ செய்கிறது. அந்த வலியினூடாகவே எப்படியோ நான் என் அழைபேசியை எடுத்தேன். எடுத்த நொடியில் மீண்டும் கேசவன் அழைக்கிறான். அந்த அழைப்பை ஏற்க தொடுதிரையை தொட முயன்றபோது தான் ஒன்றை கண்கள் கண்டன. ஆகா விரல்கள் நடுங்குகிறது! அதுவும் இத்தனை வேகமாக. எனக்கு இப்போது உள்ளபடியே பீதியாக இருக்கிறது. இந்த வலியோடு, இந்த நடுக்கத்தோடு என்ன பேச அவனிடம். பேச முயல்கிறபோது ஒருவேளை வாய் கொளறினால் என்ன நான் செய்வது. வேறுவழியில்லை நண்பனிடம் சிறிது நேரம் கழித்து பேசலாம், அப்போது இந்த வலி குறைந்திருக்கலாம் இல்லை நான் கூட இல்லாமலும் போயிருக்கலாம். எதுவும் நிச்சயமில்லை, ஆனால் இப்போதைக்கு இந்த அழைப்பை ஏற்க மனமில்லை எனக்கு. இந்த முறை கேசவனின் அழைப்பை நானே துண்டித்தேன்.
வலி என்றால் மார்பே இரண்டாக பிளந்துவிடும் அளவிற்கு கடுமையான வலி, தீடிரென்று உடல் குளிர வேறு தொடங்குகிறது. இது என்ன இலவச இணைப்பா? இப்படி குளிர்கிறது, கட்டுபாடின்றி தாடை எழும்புகள் இயங்குகிறது, பற்கள் ஒன்றோடு ஒன்று மோதி என் மண்டை ஓட்டிற்குள் ஒருவித சத்தத்தை ஏற்படுத்துகிறது. உடல் குளிரில் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.
“உங்களுக்கு குளிருதா?” ஹரியிடம் கேட்கிறேன்.
“உங்களுக்கு குளிருதா?” ஹரியிடம் கேட்கிறேன்.
“இல்லை. ஏன்?” பதில் கேள்வி.
“எனக்கு குளிருது”
“உடம்புக்கு ஏதும் சரியில்லையா”
“என்னன்னு தெரியல திடீர்னு லேசா நெஞ்சு வலிக்குது, மூச்சு விட முடியல”
ஹரி பதறிபோய்விட்டார்.” அய்யய்யோ. வாங்க நாம ஆஸ்பத்திரிக்கு போவோம்” என்று எழுந்தார்.
“ அதெல்லாம் எதுக்கு, கொஞ்ச நேரத்துல தானா சரியா போயிடும். கொஞ்சம் குடிக்க மட்டும் தண்ணி குடுங்க” என்று கேட்டதும் அவருக்கு இடபக்கமிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீட்டினார்.
நான் பெற்றுக் கொண்டேன். போத்தலின் மூடியை திறந்து நான் தண்ணீர் பருக தொடங்கினேன். அப்போது வெகுநேரமாக என்னை கவனித்துக் கொண்டிருந்த ஆசாரி சொன்னார்
“சார் மொதல்ல நீங்க ஆஸ்பத்திரி போங்க, அந்த இடம் ஆபத்தான இடம், அங்க வலிக்கவே கூடாது.”
நான் எதுவும் பேசவில்லை. கையில் போத்தலை வைத்துக் கொண்டு அவரை மௌனமாக பார்க்கிறேன். “நீங்க மொதல்ல ஆஸ்பத்திரி கிளம்புங்க” என்று என்னை துரிதபடுத்தினார்.
நான் போத்தலில் மீதமிருந்த தண்ணீரை கட கட வென விழுங்குகிறேன். வலி மிகுந்த இடங்களை கடந்து தண்ணீர் எனக்குள்ளே பிரயாணிப்பதை என்னால் உணரமுடிகிறது. ‘அந்த இடத்துல வலிக்க கூடாது சார், மொதல்ல நீங்க ஆஸ்பத்திரி கிளம்புங்க' என்று ஆசாரி சொன்னது மீண்டும் மீண்டும் என் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அந்த எச்சரிக்கை, அந்த குரல் என்னை திகிலடைய செய்கிறது. இப்போது ஏனோ இன்னும் அதிகமாக விரல்கள் நடுங்கத் தொடங்குகிறது, இன்னும் அதிகமாக வலி என் மார்பை பிளக்கிறது, வலி என்றால் இதுதான் மரன வலியோ, இந்த திகில்தான் மரண பயமோ………….
- தொடரும்
அருமை நண்பரே வாழ்க்கையின் சிறிய நிகழ்வை கூட ஒரு கதையாக வடிவமைத்தமைக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேன்மேலும் உங்கள் பணி சிறப்படைய எம் வாழ்த்துக்கள்...