“என்ன மேடம் இவ்ளோ லேட்டு, இப்பதான் கடைசி வண்டி போனது, கொஞ்சம் முன்ன வந்திருக்கக் கூடாதா” செக்யூரிட்டி சொல்லியது திகிலூட்டியது ஜானகிக்கு. அவள் எரிச்சலடைந்தாள். மேனேஜா் மனோஜை மனதிற்குள்ளே திட்டத் தொடங்கினாள். நான்கைந்து தலைமுறையைத் தோண்டி எடுத்து திட்டினால் கூட தேவலாம் என்பதுபோல இருந்தது.
மீட்டிங் முடிந்து எல்லோரும் கிளம்புகிற வேளையில்தான் ஜானகியிடம் வந்தான் மனோஜ் “ஜானகி கொஞ்சம் என் கேபினுக்கு வாங்க”
அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். புரிந்துக் கொண்டான் “ஜஸ்ட் டென் மினிட் ரொம்ப நேரம் ஆகாது” சொல்லிவிட்டு அவன் நகர்ந்த போது மணி ஒன்பதாகியிருந்தது. அவள் அவனை பின் தொடர்ந்து போனாள். அவன் அறைக்குள் அனுமதிக் கேட்டு நுழைந்தாள். எதிர் இருக்கையில் அமர்ந்தாள். அவன் அலுவல் தொடங்கி குடும்பம் சார்ந்து தனிப்பட்ட முறையில் நேரங்கெட்ட நேரத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். அவள் காதுகளில் எதுவுமே ஏறவில்லை. அவன் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான்.
அவன் கண்கள், அவள் கண்கண்டு கிறங்கி, இதழ்வரி ரசித்து, கழுத்து, மார்பு என கீழிறங்கிக் கொண்டேயிருந்தது. அவளை முழுவதுமாக ரசித்து விட மனது பாடாய்ப்படுத்தியது. அவன் வெறி, இச்சை, ஆண் என்கிற அகங்காரம், அவளைக் கண்களாலே கற்பழித்துவிட தூண்டியது, பாடாய்ப் படுத்தியது. அதற்கென்றேதான் ஒவ்வொரு முறையும் ஜானகியை அழைப்பான் மனோஜ், வாய்க்கிற சில நிமிடங்களிலேயே தலை முதல் மார்பு வரை அவள் உடல் மீது மெல்ல தன் இருவிழிகளை மேய விடுவான். எப்போதுமே இருவருக்கும் மத்தியிலிருக்கிற மேசை அவனுக்கு இடைஞ்சலாகவே இருந்து வருகிறது. அமைதியாக, எழுவான் நடந்தவாறே பேசத் தொடங்குவான், நிதானமற்று அலைவான், சிரிப்பே வராத ஆதிகாலத்து நகைச்சுவைகளையெல்லாம் சொல்லி அறை அதிர அவன் மட்டுமே சிரிப்பான், சிரிப்பின் ஊடே அவன் பார்வையை அங்குல அங்குலமாக அவளின் அந்தரங்கப் பாகங்களின் மீது அத்துமீறிப் படரவிடுவான். வழக்கம்போல அவள் நெளிவாள், நெளிந்தாள், உடலெங்கும் கூசும். சங்டகப்பட்டுக் கொண்டே அந்த அறைக்குள் எதிர்க்க திராணியற்று அமர்ந்திருந்தாள், ஓங்கி ஒரு அறைவிட்டு தடித்த தாடையை பதம்பார்த்துவிட கைகள் துடிக்கும். இ.எம்.ஐ, ஹவுஸிங் லோன், இன்னும் பல இத்யாதிகள் கண்முன்னேவந்து அவள் கோவத்தை அச்சுறுத்தும்.
மணி பத்தாகிய போதுதான் அவன் கணக்கில் பத்து நிமிடம் முடிந்திருந்தது. “ஓகே ஜானகி, நீங்க கிளம்புங்க, மத்தத நாளைக்குப் பேசிக்கலாம்” ஒரு வழியாக தற்காலிகமாக முடிவுக்கு வந்தது இன்றைக்கான சித்திரவதை. விறுவிறுவென எழுந்து வெளியேற முற்பட்டவளை இடைமறித்தான்.
“ஜானகி... டைம் கிடைக்கிறப்போ நீங்க என் வீட்டுக்கு அவசியம் வரணும். எனக்காக என் கூட ஒரு கப் காஃபி ம்ம்ம்……….” மனோஜின் இடப் பக்க புருவம் உயர்ந்தது, குறிப்புணர்த்தி கண்கள் ஒளிர்ந்தன. அதில் என்னென்ன அர்த்தங்கள் புதைந்திருக்கிறது என்பதை ஜானகி அறிந்தவளாகத்தானிருந்தாள்.
“கண்டிப்பா சார், அவருக்கு டைம் கிடைக்கிறப்போ நாங்க அவசியமா வரோம்” ஜானகி சாதுர்யமாக சமாளித்து தப்பித்து ஓடோடி வந்து விட்டாள்.
இருந்த கடைசி வண்டியும் போய்விட்டது, இன்னொரு கார் வருவதற்கு நேரம் பிடிக்கும் யோசித்தாள் அலைபேசியை எடுத்தாள் தொடுதிரையில் கடவுச் சொல்லைத் தட்டினாள். அனுமதித்தது, திரை அவள் கட்டளைகளுக்குத் தயாரானது. சேமித்து வைத்திருந்த எண்களில் “ஹப்பி” என்ற எண்ணை அழைத்தாள். “நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின் எண் தற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது” என்றது உயிரற்ற பெண்ணின் குரல். வேறு வழியேயில்லை
“இந்நேரத்துக்கு பஸ் இருக்குமா?” செக்யூரிட்டியிடம் கேட்டாள்.
“கடைசி வண்டி இருக்கு மேடம் இந்நேரம் போயிருக்காது, அங்கயிங்க அலையிறதுக்கு பேசாம கேப் புக் பண்ணி போலாம்ல்ல” என்றார் செக்யூரிட்டி.
“எதுக்குண்ணா கேப்லாம், நான் பஸ் ஸ்டாப் போய் பாக்குறேன்”
இரவு நேரங்களில் தன் நிறுவனம் கொடுக்கிற கேப்களை தவிர வேறெதையும் ஜானகி பயன்படுத்துவதில்லை. தினசரிகளில் தினம் வருகிற செய்திகள் அவளுக்குள் ஏற்படுத்திய கிலி அப்படி. கூடுதலாக சுரேஷின் கட்டளையும் கூட அது. அடிபணிவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவளால்?
உயர்ந்து கண்ணாடிகளால் தொலைதூரத்து வெளிச்சங்களையும், நெடுஞ்சாலை மின்விளக்குகளின் ஒளிகளையும் கடன்வாங்கி இரவில் மட்டும் பல் இழித்துக் கொண்டு நிற்கிற
அவள் அலுவலகத்தை விட்டு வெளியே நடந்து கொண்டிருந்தாள். மனோஜின் காரும் வெளியே வந்தது. அவள் அருகில் வந்து நிறுத்தினான்.
“என்ன நடந்து போறீங்க ஜானகி”
“அச்சச்சோ.. . . சாரி ரொம்ப லேட் ஆகிடுச்சுல்ல” வலிந்தான்.
“பரவாயில்ல சார்” எல்லாம் சம்பிரதாயம் தான்.
“என்னாலதான் உங்களுக்கு ட்ரபுல், இஃப் யூ டோன்ட் மைன்ட் நானே உங்கள வீட்டுல ட்ராப் பண்ணிடறேன். வாங்க கார்ல ஏறுங்க. “ அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் பக்கத்து இருக்கையின் கதவை அவன் திறக்க முற்பட்டபோது, திறந்துவிடாமல் ஜானகி தடுத்தாள்.
“ஐய்யோ உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். பிக்கப் பண்ண ஹஸ்பண்ட் வந்திட்டிருக்கார். எனிவே தாங்ஸ்” மரியாதையாக மறுத்தாள். தோல்வியின் கோரதாண்டவம் அவன் முகத்தில், ஒருமுறையா இருமுறையா ஒவ்வொரு முறையும் வலியே தெரியாமல் வார்த்தைகளால் வெட்டி துண்டாக்கி தூக்கி எறிகிறாளே! அந்த வலியோடு அவன் புறப்பட்டான். அந்த வளாகத்தை விட்டு அவனது கார் கடந்து போனதை உறுதி செய்த பின்னால்தான் அவள் நடக்கலானாள் பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்தாள். பேருந்திற்காக சிலர் காத்திருந்தார்கள். பேருந்து இன்னும் போகவில்லை. அவா்களோடு அவளும் சேர்ந்துக் கொண்டாள். காத்திருந்தவா்கள் எல்லோரும் ஆண்களாகவே இருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் இவள் மட்டுமே எதிர் பால். சற்று சங்கடமாகவே உணர்ந்தாள். தயக்கமும் பயமும் ஒருசேர மிரட்டியது. இத்தனை படித்தும் இத்தனை பார்த்தும் இத்தனை கேட்டும் இந்த சமூகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஜானகியின் காத்திருப்பு நீண்டுக் கொண்டேயிருந்தது. அலைபேசியில் இணையத்தைப் பயன்படுத்தினாள். கடகடவென குறுஞ்செய்திகளாய் கொட்டத் தொடங்கியது. வாட்ஸப்பிற்குள் புகுந்தாள்.
“சாரிடி ஈவினிங் ஒரு பார்ட்டி”
“அவாய்ட் பண்ண முடியல”
“கோச்சிக்காத”
“கேப்ல வந்திடுமா”
“சாரி …. சாரி…. சாரி”
என்று ஏகப்பட்ட சாரிகள் சுரேஷிடமிருந்து வந்து குவிந்திருந்தது. ‘முண்டம் குடிச்சிட்டு குப்புறப்படுத்திருக்கும். இந்நேரம், பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்க நியாபகமே இல்லாம' உள்ளுக்குள் சலித்துக் கொண்டாள். “எல்லார மாதிரியும் நான் இருக்க மாட்டேன்டி உன்ன என் இமைக்கு அடியில வெச்சு பாத்துப்பேன்” காதலித்த காலங்களில் சுரேஷ் சொல்லிய சினிமா வசனங்கள் அவன் சொன்ன தோரணையோடு நினைவிற்கு வந்தது. அவள் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். இப்போதெல்லாம் அவன் அப்படியாக இருப்பதில்லை. காதலி மனைவியான பிறகு காதலித்த பெண், காதலியாக பெரும்பாலும் ஆணின் பார்வைக்குத் தோன்றுவதேயில்லை. அவள் தன் உடைமை என்ற எண்ணம் இயல்பாகவே பிறந்துத் தொலைக்கிறது. இதில் சுரேஷ் மட்டுமென்ன விதிவிலக்கா? “ஐ ஹேட் யூ சுரேஷ்” பொய்யாக தட்டச்சு செய்து அனுப்பினாள். ஒருபோதும் அவள் சுரேஷை வெறுத்ததேயில்லை. கோபம் வரும், சண்டை வரும், வருத்தமிருக்கும் அவ்வளவுதான் மற்றது எல்லாம் வெறும் வார்த்தைஜாலங்கள். இதை பார்த்த கனத்தில் அவன் கெஞ்சிக் கூத்தாடுவான். அதை ரசித்து வெற்றுத் திமிர் காட்டி அடங்கிப் போவாள் ஜானகி. “உன் பொண்டாட்டி நடுராத்திரி நடு ரோட்டுல நிக்கிறா, தனியா பயத்தோட” என்றும் எழுதி அனுப்பினாள் கூடவே, எல்லாம் சினிமா வசனங்கள் அவரவர் தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களோடு. மனிதர்கள் இயல்பாக உணர்வுகளைப் பகிர்ந்துக் கொள்வதை மறந்து போயிருக்கிறார்கள்.
மற்ற குறுஞ்செய்திகளை எல்லாம் வாசித்தாள், வேண்டியவற்றிற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு அலைபேசி ஒளிர்வதை அணைத்து வைத்தாள். நேரம் கடந்துக் கொண்டேயிருந்தது. கண்ணுக்கெட்டியத் தொலைவு வரை சாலையையே வெறித்துப் பார்த்தாள். பேருந்து வருவதாய்த் தெரியவில்லை. ஒன்றிரண்டு போ் பொறுத்துப் பார்த்துவிட்டு ஆட்டோவில் போய் விட்டார்கள். சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவளின் இடப்பக்கத்தில் இரண்டு இளைஞா்கள் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது. மீண்டும் ஒரு முறை பார்த்தாள். அவா்கள் அவள் மீது பார்வையை குத்தி வைத்து நின்றிருந்தார்கள். சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் ஒரு முறை தன் பார்வையையும் கவனத்தையும் அந்த பக்கம் திருப்பினாள். ஏதேதோ அவர்களுக்குள் அவளைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டாள்.
சட்டென்று வலப்பக்கம் திரும்பிக் கொண்டாள். அவர்களின் பக்கமே திரும்பித் திரும்பி பார்த்த ஜானகியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவன் மற்றொருவனிடம் சொன்னான்.
“மச்சி.. . . சத்தியமா சொல்றேன் இது கோளாறு தான்”
“பாக்க அப்டி தெரியலடா” மறுத்தான் மற்றொருவன்
“அப்டி தெரியலையா? அப்ப இந்நேரத்துல அவளுக்கு பஸ் ஸ்டாப்ல என்ன வேலை” அவன் சொல்லி முடிப்பதற்குள் மற்றொரு முறை அவா்களின் பக்கம் ஜானகி திரும்பி பார்த்திருந்தாள் அதை கவனித்தவன்.
“அடிச்சு சொல்றேன் மச்சி அவ மேட்டா்தான். செம்மையா இருக்கா ட்ரை பண்ணுவோமா?” தீர்க்கமாகச் சொன்னான். அப்படியொரு ஆருடத்தை அவனிடம் சொல்லியது யார்? தெரியவில்லை. அனேகமாக அருகிலிருந்தவர்களின் காதுகளுக்கும் அவன் சொன்னது கேட்டிருக்கும். எவரும் எதுவும் சொல்லவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. மாறாக ஜானகியை அவர்களும் ஒரு முறை பார்த்தார்கள்.
அவனது கூற்றை ஆமோதிப்பதாகவே அந்தப் பார்வை இருந்தது. இந்த சமூகத்தில் மட்டும் தான் நேரம் ஒரு பெண்ணின் கண்ணியத்தையும், குணநலத்தையும் நடத்தையையும் தீர்மானிக்கிற வேலையை சிறப்பாகச் செய்கிறது.
இது எதுவும் அவள் காதுகளில் விழவில்லை. நெடுநேரம் ஆகிவிட்டது. பேருந்து வருவதாக தோன்றவில்லை, வேறு வழியில்லாமல் கார் புக் செய்தாள். சில நிமிடத்திற்கெல்லாம் வந்து சேர்ந்தது. ஏறி பின்னால் அமர்ந்துக் கொண்டாள். அந்த இரண்டு இளைஞர்களும் ஏமாற்றமாக அவளையே பார்த்தனா். கார் பேருந்து நிறுத்தத்தை கடந்து வாகனங்கள் அதிகமில்லாத சாலையில் விரைந்து கொண்டிருந்தது. சில விநாடிகளுக்குள் ஏசியோடு நிறைந்திருந்த சாராய நாற்றம் குமட்டிக் கொண்டு வந்தது. “ட்ரைவர் ஏசிய ஆஃப் பண்ணுங்க” என்றாள் மூக்கைப் பொத்திக் கொண்டு. ‘என்ன செய்ய தலை விதி' உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள். அவன் ஏசியை அணைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினான் எல்லா சன்னல்களும் திறந்துக் கொண்டு சிலு சிலுவென்று காருக்குள் காற்று வந்தது. ஜானகி சன்னலின் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள். அவ்வப்போது சுரேஷிடமிருந்து ஏதேனும் பதில் வந்திருக்கிறதா என்றும் பார்த்துக் கொள்வாள். வரவில்லை என்றதும் வாட்ஸப்பில் “ஐ ஹேட் யூ டூ தி கோர்” என்று ஸ்டேட்டசை மாற்றினாள். இதுவும் பொய்தான் ஆனால் அவள் கோபமாக இருக்கிறாளென்று குறிப்புணர்த்த வேண்டி, எப்போதும் அவளுடைய ஸ்டேட்டஸ்களில் சுரேஷ் நிறைந்திருப்பான். எப்போதேனும் நெருங்கிய வட்டாரத்தில் எவருக்கேனும் பிறந்த நாள் வந்தால் மட்டும் அவா்கள் இருப்பார்கள். ஏனைய நாட்களில் சுரேஷ் மட்டுமே. சுரேஷூக்கு அப்படியா? எல்லா நாட்களிலும் அவனே இருப்பான், தனித்து. சில நாட்களில் நண்பர்களோடு குதூகலத்துடன். அவன் பெயர் கூட இன்றும் சுரேஷ், அது மட்டும் தான், ஆனால் ஜானகிக்கோ திருமணத்திற்கு பின்னால் ஜானகி சுரேஷ். அலைபேசியின் ஒளியை அணைத்து விட்டு நிமிர்ந்தவள், எதிரே பார்த்தாள். செவ்வக வடிவ சிறிய கண்ணாடியில் ரத்தச் சிவப்பேறியை கண்கள் பெரும்பசியில் தகித்தன.
ஜானகியை பயம் தொற்றிக் கொண்டது. எங்கே நாளைய செய்தித்தாளை தான் நிறைத்து விடுவோமோ என்று அச்சம் மனதை குடிக்கொண்டது, சுதாரித்துக் கொண்டாள். அலைபேசியில் தன் தோழிக்கு ‘கேப்ல தனியா வீட்டுக்குப் போய்கிட்டிருக்கேன். சுரேஷ் போஃன் நாட் ரீச்சபில், அவன் கிட்ட பேசுறாப்ல உன்கிட்ட பேசுறேன், பேசு நான் இப்போ கால் பண்றேன்' முழுவதும் ஆங்கிலத்தில்
தட்டச்சு செய்து அனுப்பினாள். மறுநொடியே அந்த செய்தியை தோழி வாசித்து விட்டதை வாட்ஸப் டிக் நிறம் மாறிக் காட்டியது. அவள் பதில் எழுதிக் கொண்டிருந்தாள் அதற்குள்ளாக அவளுக்குக் கூப்பிட்டாள்.
“இப்பதான் கிளம்பினேன். ஆமா வீட்டுக்குதாங்க வந்துக்கிட்டிருக்கேன். கேப்லதான்
வண்டி நம்பரா….?” இழுத்தவள், ட்ரைவரிடம் “எக்ஸ்கியூஸ்மீ வண்டி நம்பா் என்ன” அவன் சொன்னான்.
“கேட்டுச்சா நம்பா்? அந்த வண்டில தான் வரேன்” என்றவள் கடக்கிற ஒவ்வொரு இடத்தையும் அலைபேசியில் சொல்லிக் கொண்டே வந்தாள். நடப்பிலிருக்கும் தற்காப்பு யுக்தி அது.
அரைமணி நேரத்திலெல்லாம் ஜானகி வீடு வந்து சேர்ந்தாள். பயணத்திற்குப் பணம் கொடுத்துவிட்டு தோழிக்கு நன்றி சொல்லி அழைப்பைத் துண்டித்தாள், பெருமூச்சு விட்டாள், சகஜமானாள். காலிங்பெல் பொத்தானை அழுத்தினாள். யாரும் வரவில்லை. மறுமுறை அழுத்தினாள். அழைப்பு மணியின் ஓசைக்கேட்டதே தவிர நிசப்தமாக இருந்தது. தொலைதூரத்தில் மட்டும்ஒரு தெருநாய் ஊழையிட்டுக் கொண்டிருந்தது. சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் முயற்சிக்க முயன்றபோது கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிறுத்திக் கொண்டாள். கதவு திறந்தது. அரைத் தூக்கத்தில் மாமியார் எதிரில். “ஆபிஸ்ல மீட்டிங் அத்த. அதான் வர லேட் ஆகிடுச்சு” ஜானகி தாமதத்திற்குக் காரணம் கூறினாள். எதுவும் கேட்காதது போல் அவள் திரும்பி நடந்தாள். ஜானகி கதவைச் சாத்திவிட்டு மாமியாரின் பின்னால் வீட்டிற்குள் நுழைந்தாள்.
“சாப்டிங்களா அத்த”,
“சாப்டாச்சு” அந்த ச்சில் ஒரு அழுத்தமிருந்தது.
“அவா் சாப்பிட்டரா?” அம்மாவுக்கு அவன் இவனென்றெல்லாம் மகனை அழைப்பது பிடிக்காது. பண்பாடாம்.
“யாருடிமா கண்டா, வந்தவன் ஒரு வார்த்த பேசல, நேரா உள்ள போய் படுத்துட்டான்” வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகும் உளுந்தம்பருப்பும் போட்டால் பொரிந்து வெடித்துச் சிதறும் அப்படியொரு பதில். ஏன் கேட்டோமென்று நினைத்துக் கொண்டாள். மாடிப்படி ஏறி தன் அறைக்குள் நுழைந்தாள். காலையில் உடுத்திய அதே உடையில் மெத்தை முழுவதும் கிடந்தான் சுரேஷ். சாப்பிட்டிருப்பானா? மாட்டானா? யோசித்துக் கொண்டே தனக்கு தானே பதிலும் சொல்லிக் கொண்டாள் “குடிகாரன் நல்லா தின்னுட்டுதான் வந்திருப்பான்” எழுப்ப முயன்றாள் முடியவில்லை. அதனால் அவன் சட்டையை மட்டும் அவிழ்த்து விட்டு தானும் உடைமாற்றி கொண்டாள். பசித்தது, மாடிப்படி இறங்கி சமையறைக்குள் சென்றாள். உணவேதும் இல்லை. “என்னத்த சாப்பிட” சலித்துக் கொண்டே கொஞ்சம் குளிர்ந்த நீரை பிரிட்ஜிலிருந்து எடுத்து அருந்தினாள். குளிரூட்டப்பட்டிருந்த ஒரு தண்ணீா் போத்தலை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு விளக்குகளை அணைத்து விட்டு வெறும் வயிற்றோடு தட்டுத்தடுமாறி இருட்டில் மாடிப்படி ஏறிக்கொண்டிருந்தாள். அவள் போய் விட்டாளென்று நினைத்த மாமியார் முணுமுணுத்தாள். “மணி என்ன ஆவுது இந்நேரத்துல வீட்டுக்கு வர்றா. இவலாம் ஒரு குடும்ப பொம்பள” அந்த முணுமுணுப்புத் தெள்ளத் தெளிவாகவே கேட்டது. கேட்டும் கேட்காதது போல அவள் தட்டுத் தடுமாறி ஒரு வழியாக மேலேறி அறைக்குள் போய் அவனை உருட்டி ஒரு பக்கமாகத் தள்ளி படுக்க இடம் எடுத்துக் கொண்டு அவனருகில் அவள் படுத்தபோது விழியோரம் கண்ணீா் கசியத் தொடங்கியிருந்தது.
2019, இகரமுதல்வி தை காலாண்டிதழில் வெளியானது.
No comments:
Post a Comment