Sunday, 5 August 2018

அன்புள்ள பிரபஞ்சனுக்கு

05.08.2018

அன்புள்ள பிரபஞ்சனுக்கு,
                                                          தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் நாங்கள் ஒருங்கிணைத்த ஒரு இலக்கிய நிகழ்வுக்கு  பவா செல்லதுரை அவர்களைத்தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். முதல் முதலாக பவா செல்லதுரையை சந்திக்கப்போகிறோம், அவர் எதிரே அமர்ந்து கதை கேட்கப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்பையெல்லாம் தாண்டி அவரிடம் பேசும்போது தவறாமல் கேட்டுவிடவேண்டும் என்று நினைத்திருந்த கேள்வி " பிரபஞ்சன் எப்படி இருக்கார்?" என்பதுதான்.

பாரத் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டே நாங்கள் இருவரும் நடந்தபோதுதான் தயங்கித் தயங்கி கேட்டேன். நடந்தவர் நின்றார். என்னை பார்த்தார், திரும்ப நடக்கத் தொடங்கினார். நடந்துக் கொண்டே சொன்னார் " ரொம்ப சீரியஸ், பாண்டிச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில  ஒரு மெடிக்கல் காலேஜ்லதான் இருக்காரு" என்றார். அதற்குமேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அடிவயிற்றிற்குள் வெந்நீர் ஊற்று சுரந்து இதயம் வரை உஷ்ணம் கிளப்பியது. " அவர் இந்துல எழுதினுருந்த தொடர்லாம் கூட நிறுத்திட்டாங்க" என்று அந்த  மவுனத்தை உடைத்து பவா வருத்தத்தோடு சொன்னபோது எனக்கு வெடித்து அழவேண்டும் போலிருந்தது.
 
ஒருமுறைதான் உங்களை நான் நேரில் பார்த்தது. தேசாந்திரி பதிப்பக துவக்க விழா முடிந்து நீங்கள் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தீர்கள். நான் கையில் ஒரு புத்தகத்தோடு ஓடிவந்து உங்கள் முன் நின்று புத்தகத்தை நீட்டினேன். முகத்தில் ஒரு சிரிப்பு. அந்த சிரிப்பு இன்று கூட அப்படியே எனக்கு நினைவில் இருக்கிறது. புத்தகத்தை கையில் வாங்கி நீங்கள் உடுத்தியிருந்த நீல நிற ஜிப்பாவில் துலாவினீர்கள். அந்த ஜிப்பாவில் பாக்கெட்டே இல்லை. இல்லாத பாக்கெட்டில் இல்லாத பேனாவை நீங்கள் தேடியபோது நான் சொன்னேன் " சார் பாக்கெட் இல்லை" அதற்கும் சிரிப்புதான் உங்கள் முகத்தில் " பேனா குடுங்க சார்" என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள். நான் பேனாவை நீட்டினேன்  வாங்கி நீங்கள் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தபோதே உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியது நான் ஒதுங்கி நின்று உங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன், எல்லோருக்குமே பாரபட்சமில்லாமல்  அதே சிரிப்பைத்தான் நீங்கள் தந்துக் கொண்டிருந்தீர்கள். உங்களிடம் கையொப்பம் பெற்று கைகுலுக்கி செல்பி எடுத்து எல்லோரும் கடந்த பின்னால் என்னை அழைத்து பேனாவையும் புத்தகத்தையும் கொடுத்துவிட்டு "நன்றி சார்" என்று நீங்கள் சொல்லி மீண்டும் லேசாக சிரித்தீர்கள். "சார் உடம்ப பாத்துக்கோங்க" என்று நான் சொன்னபோது என் வலப்பக்க தோளைத் தட்டிகொடுத்து விடைபெற்றுச் சென்றீர்கள். உங்களிடம் பேச எனக்கு வாய்வரவில்லை. உங்களையே ரசித்துக் கொண்டு நின்றேன். நீங்கள் பேசுகிற காணொளிக் காட்சிகளை  பார்த்துவிட்டு, உங்கள் கதைகளை படித்துவிட்டு நண்பன் கேசவனிடம் பேசும்போதெல்லாம்  "நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தேன், இந்தாளுக்கு இப்ப என்ன வயசுன்னுலாம் யோசிச்சிருக்கமாட்டேன். இவரைத்தான் லவ் பண்ணிருப்பேன்" என்று சொல்வேன். அந்த அன்பினால்தானோ என்னவோ எனக்கு பேச வாய்வரவில்லை. நீங்கள் சென்றபின்னும் நீங்கள் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

உங்களின் மீது எனக்கு இனம்புரியாத அன்பு உண்டு. உங்கள் எழுத்தின் மீது எனக்கு  தனிக் காதலே உண்டு. அதனாலேயேதான் நீங்கள் எழுதியத் தொடர்கள் நிறுத்தப்பட்டது பேரிடியாக துளைக்கிறது.  இன்றைய இந்து தமிழ் நாளிதழில் உங்களை சந்தித்துவிட்டு  வந்த பின்னால் லீனா மணிமேகலை எழுதியிருந்த முகநூல் பதிவை நடுப்பக்கத்தில் போட்டிருந்தார்கள்.
லீனா மணிமேகலையிடம் "நான் எழுதணும் மணி, எழுதும் வரைக்கும்தான் வாழ்க்கை என்ன உள்ள வச்சிக்கும். இல்லன்னா வெளியேத்திடும். கொந்தளிச்சு வரணும் வரிகள். வந்திட்டீங்க, இரண்டு வரியாவது உங்களுக்கு எழுதித் தரணும். நம்ம படத் திட்டத்தையும் விடக் கூடாது. பேசணும். பெண்கள் ஏன் தெருவுல குனிஞ்சு நடக்கணும் சொல்லுங்க? நிலைப்படியா இருக்கு தலை தட்டறதுக்கு. குனிய வைக்கிற விசயங்கள் எல்லாத்தையும் கேள்வி கேக்கணும். நான் நிறைய நாட்களை வீணாக்கிட்டேன்” 

"சப்தங்களுக்கு உயிர் உண்டுதானே மணி? எனக்கு இரவில குழந்தைகள் பந்துகளத் தட்டித் தட்டி விளையாடற சத்தம் கேட்டுட்டே இருக்கு. இன்னும் உன்னிப்பா கேட்டு அந்த சப்தங்களுக்கு உருவம் கொடுத்து எழுதணும். ஹாஸ்பிடல் நிசப்தமே ஒரு சப்தம்தான். ஆனா சீக்கிரம் கிளம்பிடணும். எனக்கு நிறைய வேலைகள் மிச்சமிருக்கு மணி.” என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். 

அதைத்தான் நானும் சொல்கிறேன், நீங்கள் எழுதவேண்டும், நிறைய எழுதவேண்டும்
குனிய வைக்கிற விசயங்கள் எல்லாவற்றையும் நீங்கள் கேள்வி கேட்கவேண்டும்.
உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது பிரபஞ்சன் சீக்கிரம் எழுந்துவாருங்கள்.

இப்படிக்கு
உங்களை எதிர்பார்த்திருக்கும்
உங்கள் வாசகன்
தினேஷ் பழனி ராஜ்
தஞ்சாவூர்

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...